UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டம், ஓர் கண்ணோட்டம்...


ஒரு தனிமனிதனின் கல்வி வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க அடைவு மட்டமாக அல்லது சமூக அங்கீகாரமிக்க அடைவாகக் கருதப்படுவது ஒரு துறைசார்ந்த பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றுக்கொண்டு பட்டதாரி எனும் நிலையினை அடைவதாகும். பாடசாலைக் கல்வியை முறையாக நிறைவுசெய்யும் பலரும் பின்னர் தமது உயர்கல்வியினுடாக ஒரு பல்கலைக்கழக பட்டத்தை தமது வாழ்நாளில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் அவாவுடன் முயல்வது கல்வி உலகை மேலோட்டமாகத் தரிசிக்கும் போதே காணக்கூடிய சாதாரண சம்பவமாகும்.

பல்கலைக்கழக பட்டமொன்றைப் பெறுதல் அல்லது பட்டதாரியாக மாறுதல் என்பது எமது பிரதேசத்தின் பல குடும்பங்களின் கூட்டுக்கனவாக இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. பட்டதாரி ஒருவரை உருவாக்குதல் என்பது ஒரு சமூகக் குழுமத்தின் வாழ்நாள் கனவாகக் இருப்தைக் கூட பல சந்தர்ப்பங்களில் காண முடிகின்றது.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களின் மகிழ்வை ஒரு குடும்ப நிகழ்வாக பகிர்ந்து நிறைவு காணும் பலர் நம் சமூகத்தில் உள்ளனர். இது ஒரு வகையில் சமூக எழுச்சிக்கும் முன்னுதாரணத்துக்கும் வழிகாட்டுதல் மற்றும் பின்பற்றுதலுக்கும் அவசியமானதும் கூட. 

இவ்வாறு பல்கலைக்கழக பட்டம் ஒன்றுக்கான மதிப்புணர்வு என்பது எமது தமிழ்ச் சமூகத்தில் கொண்டுள்ள தாக்கம் மிகவும் கனதியானது. பிரதேசத்தின் கல்வி சார் அடைவு முன்னேற்றங்களின் ஊக்க விசையாகவும் அது உள்ளது. இந் நிலையில் அண்மைக்காலமாக எமது பிரதேசத்தை மையப்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் பட்டக்கற்கைகளை அல்லது பட்டங்களை வழங்கிவரும் பின்னணியில், மேலே விபரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக பட்டம் என்பது ‘குடும்பத்தின் கூட்டுக் கனவு’ ‘சமூகத்தின் வாழ்நாள் கனவு’ ‘கல்வி அடைவுக்கான ஊக்க விசை’ எனும் சமூக தத்துவங்களில் சில தளர்வு நிலை தோன்றிவிடும் அபாயச் சூழ் நிலை தோன்றியுள்ளது. 

அதையும் தாண்டி இலங்கையில் உள்ள கல்வி சார் சட்ட ஏற்பாடுகள் மற்றும் முறைமைப்படுத்தல்களுக்கு முரணாக ‘பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்’ எனும் மகுடத்தின் கீழ் இப் பட்டங்கள் வழங்கப்படும் தோற்றப்பாடானது மிகவும் ஆபத்தானதாகும். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்றால் என்ன? – (University Grants Commission)

ஒரு நாட்டின் உயர்கல்வியை முறைமைப்படுத்துவதற்காகவும் அதனை உரிய முறையில் வழிப்படுத்துவதற்காகவும் தாபிக்கப்படும் உயர்தாபனமே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பதாகும். இவ் ஆணைக்குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த நாட்டின் அரச பல்கலைக்கழகங்களும் அதனோடு இணைந்த நிறுவனங்களும் இருப்பதுடன் குறித்த நாட்டில் இயங்கும் அரச சார்பு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது பட்டக்கற்கைகளை வழங்கும் நிறுவனங்கள் அதன் கண்காணிப்பு வலயத்தினுள் உள்ளடக்கப்பட்டுமுள்ளன. 

தனது நாட்டின் உயர்கல்வி குறித்த குறிப்பாக பட்டக்கற்கைகைள் குறித்த பண்புத்தரத்தைப் பேணும் பெரும் பொறுப்புணர்வு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கே உண்டு. அதனால் அப் பொறுப்புணர்வை வினைத்திறனாக மேற்கொள்ளத்தக்க சட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் 1978ம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஒன்று இருப்பதுடன் இதன் கீழ் 16 அரச பல்கலைக்கழகங்களும் அவற்றோடு இணைந்த மூன்று வளாகங்கள் (Campuses) மற்றும் 18 நிறுவனங்கள் (Institutions) இலங்கையில் செயற்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 500க்கும் அதிகமான பட்டக்கற்கைகளும் 160க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்புக்கான கற்கைநெறிகளும் வழங்கப்படுகின்றன. 

இவற்றுள் பெருமளவான பட்டக்கற்கைகள் இலவசமானதாகவும் பட்ட மேற்கற்கைகள் சுயநிதியிடல் கற்கைகளாகவும் (Self Finance Courses) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இக் கற்கைநெறிகள் மீது செல்வாக்குச் செலுத்தும் அதிகாரமும் அவற்றுக்கான அங்கீகாரத்தன்மை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பரப்புக்களில் தீர்மானம் எடுக்கும் சட்ட வலிதாண்மையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கே உண்டு.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட பட்டங்கள்

1978ம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டங்களின் பிரிவு 25 A கீழ் பட்டம் வழங்கும் தகைமைமிக்க நிறுவனங்களாக அனுமதிக்கப்பட்ட பின்வரும் நிறுவனங்களினால் வழங்கப்படும் பட்டக்கற்கைகளையும் பெயர்குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரிக்கின்றது.

1. Institute of Surveying and Mapping

2. Aquinas College

3. Sri Lanka Institute of Information Technology (Guarantee) Limited.

4. Sri Lanka Institute of Development Administration

5. Ocean University of Sri Lanka

6. National Institute of Social Development

7. South Asian Institute of Technology and Medicine (Pvt) Ltd. (SAITM)

8. National School of Business Management Limited (NSBM)

9. Colombo International Nautical and Engineering College (CINEC)

10. Sri Lanka International Buddhist Academy

11.The Institute of Chartered Accountants of Sri Lanka

12.SANASA Campus Limited

13.Horizon Campuss

14. KAATSU Highly Advanced Medical Technology Training Centre(Pvt) Ltd

15.Nagananda International Institute for Buddhist Studies (pvt) Ltd

16.Aquinas College of Higher Studies

17.Institute of Technological Studies

18.SLT Campus (Pvt) Ltd

19.Saegis Campus (Pvt) Ltd

20.Sri Lanka Institute of Nanotechnology (Pvt) Ltd

21.Esoft Metro Campus (Private) Limited

22.Institute of Chemistry Ceylon

23.British Computer Society (BCS)

24 Sri Lanka Institute of Architects (SLIA)

மிகவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம் மேற்குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் அனைத்து பட்டக்கற்கைகளையும் கண்மூடித்தனமாக ஆணைக்குழு அங்கீகரிப்பதில்லை. பெயர் குறித்து தனித்தனியாக கற்கைநெறியின் பாடத்திட்டம் மற்றும் அதனோடு தொடர்புடைய விடயங்கள் கண்காணிக்கப்பட்டே அனுமதி வழங்கப்படுகின்றது. இக் கற்கைநெறிகளின் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் காணலாம். (www.ugc.ac.lk)

அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை தனது ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட தொடர்கண்காணிப்புக்குள் வைத்திருப்பதுடன் அவற்றின் நிறுவனப் பண்புத்தரம் ((Institutional Quality) ) மற்றும் கற்கைநெறிகளின் பண்புத்தரத்தை (Programme Quality)அவசியமான கால இடைவெளிகளில் உறுதிப்படுத்தும் மீளாய்வுகளை (Reviews – IR and PR) செய்வதற்கான கட்டமைக்கப்பட்ட பொறிமுறையொன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

இவ்வாறான மீளாய்வுகளின் போது குறித்த நிறுவனங்களினதும் அவற்றினால் வழங்கப்படும் கற்கைநெறிகளினதும் தரம் கேள்விக்குட்படுத்தப்படுமானால் குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்துச் செய்யும் அதிகாரமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.

அது போன்று ஏற்கனவேயுள்ள நிறுவனம் தனது எதிர்கால செயற்பாடுகள் கருதி தனது பெயர் மற்றும் கற்கைகளில் மாற்றங்களை கொண்டுவரும் போதும் விசேட வர்த்தமாணி அறிவித்தல்கள் மூலம் அவற்றை முறைப்படுத்தும் அதிகாரமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. இவ் வர்த்தமாணி அறிவித்தல்கள் யாவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வழிப்படுத்தலில் உயர்கல்விக்குப் பொறுப்பான அமைச்சரினால் வெளியிடப்படும். உயர்கல்வி அமைச்சர் தவிர்ந்த வேறு எவருக்கும் இது தொடர்பிலான அதிகாரம் பாரதீனப்படுத்தப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி அமைச்சருக்கோ அல்லது கல்வி இராஐங்க அமைச்சருக்கோ அல்லது கல்வி அமைச்சின் செயலருக்கோ அல்லது மாகாண ஆளுனருக்கோ அல்லது மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கோ அல்லது மாகாண கல்விப் பணிப்பாளருக்கோ இந்த அதிகாரத்தின் சிறு துளியேனும் பகிரப்படவில்லை. எனவே இத்தகையவர்கள் உயர்கல்வி தொடர்பாக வழங்கும் அனுமதிகள் குறித்தான சட்ட வலிதாண்மையை எந்நேரமும் நீதிமன்றின் மூலம் கேள்விக்குட்படுத்தலாம் என்பதுடன் அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிகளின் மூலம் வழங்கப்பட்ட பட்டங்கள் மற்றும் இதர விடயங்களையும் எக் கணத்திலும் வெற்று வெறிதாக்க (Null and Void) முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் இலங்கையில் பாராளுமன்ற சட்டங்களின் மூலம் தாபிக்கப்பட்ட பின்வரும் நிறுவனங்களும் பட்டங்களை வழங்கும் தகைமைபெற்ற நிறுவனங்களாகும்.

1.  Ministry of Defense– The General Sir John Kotelawala Defence University (KDU)

2. Ministry of Higher Education – Buddhist and Pali University of Sri Lanka, Bhiksu University of Sri Lanka

3. Ministry of Vocational & Technical Training– University of Vocational Technology

4. Ministry of Skills Development and Vocational Training– Ocean University of Sri Lanka

5. Ministry of Education– National Institute of Education (NIE)

இருந்தும் மேற்குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் பட்டங்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் பல்கலைக்கழக பட்டங்களுக்கு முற்றிலும் சமனானவையாகக் கொள்ளப்படுவதில்லை.

வெளிநாட்டு பல்கலைக்கழகப் பட்டங்கள்

உலகமயமாக்கலின் பல்வேறு நன்மைதரத்தக்க விளைவுகளில் ஒன்றாக கணிக்கத்தக்கது கல்வி வாய்ப்புக்கள் சர்வதேசமயப்பட்டிருப்பது. இதனால் உலகின் வேறு ஒரு நாட்டில் அல்லது பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இணைந்து கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் தற்போது அகலமாக்கப்பட்டுள்ளதுடன் இலகுபடுத்தப்பட்டுமுள்ளன. உள்நாட்டில் வளப்பற்றாக்குறைகள் காரணமாக பல்கலைக்கழக கல்வியை நாடும் அத்தனைபேரினதும் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்ய முடியாத நிலையிருப்பதனால் இவ்வாறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மூலமான கற்றல் வாய்ப்பு பெரும் வரப்பிரசாதமாக அமைகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றில் கற்றல் என்பது பிரதானமாக மூன்று வகைப்படும்.

1. நேரடியாக குறித்த பல்கலைக்கழகத்துக்குச் சென்று கல்வி கற்பது

2. தொலைக்கல்வி அல்லது இணையவழிக் கல்வி மூலம் குறித்த பல்கலைக்கழகத்துடன் நேரடித் தொடர்பிலிருந்து கற்பது

3.குறித்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயற்படும் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு நிறுவனம் ஒன்றில் கற்று குறித்த பல்கலைக்கழக பட்டச்சான்றிதழைப் பெறுவது

வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் மேற்குறித்த எவ் வழிகளில் கற்றாலும் அப் பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பல்கலைக்கழகமாகவிருப்பது அவசியமானதாகும். மருத்துவப் பட்டப்படிப்புக்கு இதனையும் ஒரு படி தாண்டி குறித்த பல்கலைக்கழகம் இலங்கை மருத்துவ சபையினால் (Sri Lanka Medical Council- SLMC) அங்கீகரிக்கப்பட்டதாகவிருக்க வேண்டியதும் மிகவும் அவசியம். அல்லாது விடில் ஒரு மருத்துவப் பட்டதாரியாகவிருக்கலாமேயன்றி மருத்துவத்தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதிலும் அதற்காக உள்நாட்டில் தோற்ற வேண்டிய பரீட்சைக்கு (ERPM- Examination to Register to Practice Medicine ) தோற்றுவதும் சிரமாக அமையும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக்கொண்ட பட்டச்சான்றிதழை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்து குறித்த பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் குறித்த கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த நடைமுறையின் தெளிவின்மை காரணமாகவே பலர் போலி நிறுவனங்களினால் ஏமாற்றப்படும் தன்மையை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. இது குறித்து பின்வரும் விடயங்களை அதீதமான கவனத்தில் எடுக்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஒருபோதும் வெளிநாட்டு நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட பட்டத்தை அங்கீகரிப்பதில்லை (Approved) மாறாக பட்டத்தை வழங்கிய நிறுவனத்தையே பரிந்துரைக்கின்றது (Recognized)

மேற்குறித்த பரிந்துரை குறித்த பல்கலைக்கழகம் பின்வரும் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட மூலங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை அடிப்படையாக வைத்து வழங்கப்படுகின்றது.

Commonwealth Universities Year Book

International Handbook of Universities

பட்டத்தை வழங்கிய நிறுவனத்துக்கான பரிந்துரையை வைத்துக் கொண்டு குறித்த பட்டம் செல்லுபடியானது எனும் முடிவுக்கு வந்துவிடலாகாது. நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகளின் போது குறித்த பட்டத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக சம்மந்தப்பட்ட நியமன அதிகார தரப்பு குறித்த பட்டச் சான்றிதழின் பிரதியை குறித்த பல்கலைக்கழகத்துக்கு இரகசியமாகவும் நேரடியாகவும் அனுப்பி பரீசீலனை செய்யவேண்டும். இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கீழான அரச பல்கலைக்கழகங்களில் பெற்றுக்கொண்ட பட்டச் சான்றிதழ்கள் கூட இவ்வாறு அனுப்பி வைக்கப்படுவது அவசியமான நடைமுறையாகும். இவ்வாறு அனுப்பப்படும் கடிதத்தை அல்லது அதன் பிரதியை சம்பந்தப்பட்ட பட்டதாரியிடமோ அல்லது வேறு நிறுவனங்களிடமோ ஒப்படைப்பது நிர்வாகச் சட்டங்களின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் வெளிநாட்டு பரீசீலனைகளுக்கான தபால் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்கு அரச நிதிநடைமுறைகளின் பிரகாரம் பொது நிதியைப் பயன்படுத்த தடையிருப்பதனால் குறிப்பிட்ட பட்டதாரியிடமிருந்து முறைமையாக அதற்கான கட்டணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் பரீசீலனை விடயம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் கடிதத்தில் தெளிவாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“This letter does not indicate the authenticity of the degree certificate or indicate that the students has registered and followed the course in the University. The authenticity of the degree certificate should be verified from the University”

வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த உள்ளுர் நிறுவனங்கள்

தற்போதைய சூழலில் இவ் விடயம் குறித்தே அதிக விழிப்பும் கவனமும் தேவைப்படுகின்றது. கல்வித் துறையை ஒரு வியாபாரத்துறையாகக் கருதும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதன் காரணமாக உயர்கல்விக்கான சமூகக் கேள்வியை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில நிறுவனங்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது பட்டச் சான்றிதழ்களை வழங்கிவருவது புலமைத்துவப் பாரம்பரியத்தை கேள்விக்குள்ளாக்கும் அல்லது நாசமாக்கும் செயலாகும். அவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் எனும் வாசகத்தை தமது விளம்பரங்களில் எதுவித தயக்கமும் இன்றி பயன்படுத்துகின்றமை சட்டத்தின் பாற்பட்டு கேள்விக்குட்படுத்படக்கூடியதும் நடவடிக்கை எடுக்கக்கூடியதுமாகும்.

ஆனால் அதேவேளை குறித்த நியமங்களைப் பின்பற்றிச் செயற்பட்டு வரும் பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் இலங்கையில் உண்டு என்பதும் மறுப்பதற்கில்லை. இந் நிறுவனங்கள் பின்பற்றும் அல்லது பின்பற்ற வேண்டிய முறைசார் செயற்பாடுகள் குறித்து விபரிப்பின் இக் கட்டுரை நீண்டு விடும் என்பதனால் இங்கு அது தவிர்க்கப்படுகின்றது.

பட்டம் என்பது கல்வித்தகைமை மற்றும் தொழில் தகைமைகளில் முக்கியமான வகிபாகத்தைக் கொண்டுள்ளமையால் உயர்கல்வியின் மூலமாக பட்டம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளல் மிக அவசியமான தேவைப்பாடகவுள்ளது. அத்துடன் இலங்கைப் பிரசைகள் அனைவரினதும் பட்டப்படிப்புக்கான கேள்வியை இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசோடு இணைந்த நிறுவனங்களினால் பூர்த்தி செய்யமுடியாது என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. இப் பின்னணியில் தனியார் நிறுவனங்களின் அவசியம் உணரப்படுகின்றது. ஆனால் இத்தகைய தனியார் நிறுவனங்கள் உரிய முறைமைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும் என்பதுடன் உயர்கல்வித் துறையை வெறும் பணம் பெறும் வியாபார நோக்கு நிலையிலிருந்து அணுகவும் கூடாது. 

இவ்வாறு பணத்துக்காக பட்டங்களை விற்கும் கலாசாரம் நாட்டின் பல்வேறு துறைகளிலும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கான பங்களிப்பை வழங்கவல்ல வினைத்திறன் அறிவு ஆற்றல் மிக்க குடித்தொகையில் தாக்கம் செலுத்தும். இது நாட்டின் முழுமை அபிவிருத்தியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தற்காலிக தீர்வுகளை இத் தகைமையற்ற பட்டச்சான்றிதழ்கள் வழங்கினாலும் நீண்ட காலப் போக்கில் நீடித்து நிலைத்திருக்கதக்க பேண்தகு அபிவிருத்தியில் புற்றுநோய் போல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். 

அத்துடன் சமூகத்தனித்துவமிக்க புலமைத்துவப் பாரம்பரியத்தை பேணுவதற்காகவும் இவ் விடயம் குறித்து அக்கறை கொள்ள வேண்டியது தரமான கல்வியை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும். எனவே ‘பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம்’ எனும் வாசகம் குறித்தான விழிப்பை சமூகத்திடம் எடுத்துச் செல்லல் காலத்தேவையாகும்.


இ.சர்வேஸ்வரா
விரிவுரையாளர்
கல்வியியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்


 


UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டம், ஓர் கண்ணோட்டம்... UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டம், ஓர் கண்ணோட்டம்... Reviewed by Editor on February 11, 2021 Rating: 5