
(ஐ.எல்.எம். தாஹிர்)
அட்டாளைச்சேனையில் வாழ்ந்த முன்னோர்கள் வரிசையில் மற்றுமொரு சிறப்புக்குரிய, பாராட்டப்பட வேண்டியவர் தான் அஹமதுலெப்பை மரைக்கார் செய்னம்பு தம்பதியின் தலை மகன் உதுமாலெப்பை அவர்கள்.
அட்டாளைச்சேனையில் கடந்த 1912 ஆம் ஆண்டு பிறந்த மர்ஹூம் உதுமாலெப்பை அவர்கள் தான் பிறந்த மண்ணில் முகைதீன்பாவா சாறா உம்மா என்பவரை 1940 ஆம் ஆண்டு திருமணம் முடித்து ஐந்து ஆண் மக்களுக்கும், எட்டுப் பெண் பிள்ளைகளுக்கும் தகப்பனாக விளங்கினார்.
ஐந்து இளைய சகோதரிகளுடன் முன்னாள் பிரதேச செயலாளராக இருந்து சம காலத்தில் ஓய்வு பெற்றிருக்கும் நிர்வாகத் திறன் மிகு உத்தியோகத்தர் தேசமான்ய ஏ.ஏல்.இப்றாலெப்பை என்பவர் இவரின் ஒரேயொரு சகோதரராவார்.
கல்வித் துறையில் தனது படிப்பை அட்டாளைச்சேனை அரசினர் கலவன் பாடசாலை (தற்போதைய தேசிய பாடசாலை) யில் மூன்றாம் வகுப்பு வரை மட்டும் படித்து நிறைவாக்கிக் கொண்டவர். இருந்தும் அன்னார் தமிழ், அறபுத் தமிழ், அறபு ஆகிய மொழிகளில் அழகுற எழுதுவதிலும், வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றுக் காணப்பட்டார். அத்துடன் திருக்குர்ஆன், மௌலிது, புர்தா, தலைப்பாத்திஹா, நிய்யத் பாத்திஹா, என்பனவற்றைத் திறம்பட அழகிய தொனியில் ஓதக்கூடிய இனியவராகவும் திகழ்ந்தார்.
மர்ஹூம் உதுமாலெப்பையின் பாட்டன் முன்பைய காலத்தில் அட்டாளைச்சேனையில் பிரபல்யமானவர்களில் ஒருவரான 'சீனி வட்டானை' என்பவர் தனது மூத்த பேரன் உதுமாலெப்பையிடம் காணப்பட்ட திறமைகளை அறிந்து அன்னாரை மனதார ஏற்று மாந்திரீகம் மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகளுக்குத் தனது பேரன் உதுமாலெப்பையை வாரிசாக தனதாக்கிக் கொண்டார்.
அக்காலத்தில் பிரசித்தம் பெற்று விளங்கிக் காணப்பட்ட வைத்திய முறைகளில் ஒன்றான தீராத நோய்களுக்கு ஊதிப் பார்த்தல், பணம், நகை, போன்றவற்றைக் களவாடிய நபர்களைக் கண்டு பிடித்தல் (செம்பு கிறுக்குதல் இதன்போது ஓதுவது யாசீன் சூறா மட்டுமே) மா ஓதிக் கொடுத்தல், உளவியல் யுக்தி, கர்ப்பிணித் தாய்மார்கள் சுகப் பிரசவம் பெற வெற்றிலை ஓதிக் கொடுத்தல், கண் வருத்தம், தலையிடி, போன்றவற்றிற்கு ஊதிப் பார்த்தல், நிய்யத்துப் பாத்திஹா ஓதுதல், என்றெல்லாம் மர்ஹூம் உதுமாலெப்பை அவர்களினால் செயற்படுத்தப்பட்ட நோய்ப்பிணி தீர்க்கும் சிறப்புக்குரிய விடயங்கள் வரிசையில் அடுக்கிக் கொண்டு போகலாம்.
திருமண மாப்பிள்ளை பெண் வீடு வந்ததும் அவரை வாழ்த்திப் பாடல் பாடுவது, கிராமியப் பொல்லடிக்கான அண்ணாவியாக இருந்து விருத்தப் பாடல் பாடுவது, ஹதீஸ் மஜ்லிஸ் இடைவேளைகளில் 'பைத்' பாடல் பாடுவது, போன்ற இந் நிகழ்வுகளில் மர்ஹூம் உதுமாலெப்பை முதன்மை நிலை வகித்தவர்.
அக்கால தற்பாதுகாப்புக்கான சீனடி, சிலம்படி, விளையாட்டுக்களில் அதி கூடிய ஈடுபாடு காட்டியதுடன், கட்டுக்கடங்காத காளை மாடுகளை தூரத்தில் நின்று 'கயிறு வீசி' பிடிப்பதில் சாமர்த்தியமானவராகவும் இவர் விளங்கினார்.
பழைமையான முன்னோர் காலத்தில் எல்லோராலும் அறியப்பட்ட விடயம் கல்யாணங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று வாழ்வுக் கல்யாணம், மற்றொன்று கத்னா கல்யாணம். பெரும் கோலாகலமாக பொல்லடிகளுடன் 'பைத்' முழங்க ஊர்வலமாக இக்கல்யாணங்கள் நடந்தேறும். அக்காலத்தை இக்காலத்தில் ஞாபகமூட்டி தற்கால இளஞ்சந்ததியினரும் அறிய வேண்டுமென்பதில் நாம் புளகாங்கிதம் அடைகின்றோம்.
மற்றும் திருமண வீடுகளில் இங்கிதமான இரா நிலா நேரங்களில் ஒலி பெருக்கியின் பழைய பாடல்களைக் கேட்கவென நண்பர்கள், அன்பர்கள், உறவினர்கள் என்றெல்லாம். எல்லோருமாக திறந்த வெளியில் அமர்ந்திருந்து இனிமையான மனதை மறக்காத பாடல்களைக் கேட்டு இரசித்;த கடந்து விட்ட காலத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் எம்மையெல்லாம் மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டேயிருக்கின்றது.
'காலம் கறங்கு போற் சுழன்று மேலது கீழதாய், கீழது மேலதாய் மாறிடும் தோற்றம் என்பர்'.
நவீனத்தால் அழிந்து போன முன்னைய அழகிய வாழ்வியல் ; அழகிய இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. சம காலத்தில் மாற்றம் கண்டு விட்டன.
தனது தகப்பன் அஹமதுலெப்பை மரைக்காருடன் இணைந்து ஏழு அங்கத்தவர்களைக் கொண்ட தன் தாய்வழிக் குடும்பத்தையும், பதின் மூன்று பிள்ளைகளைக் கொண்ட தனது குடும்பத்தையும், திறம்பட நிர்வகித்து எல்லோருக்குமாக தான் பயணித்து வந்த பாதையில் தடைகளைத் தாண்டி வாழ்ந்து வழி காட்டிய அன்னார் எல்லோரும் கல்வி கற்று முன்னிலையில் வர வேண்டுமென்ற உயரிய சிந்தனையை தன் இதயத்தில் இறுக்கமாக இருத்திக் கொண்டவர். எல்லோரும் ஆங்கிலம் கற்க வேண்டுமென்ற தனது ஆசையை அடிக்கடி தனது குடும்பத்தவர்களுக்கும், ஏனையோருக்கும் உணர வைத்தவருமாவார்.
தனது மகன்மார்களான ஓய்வு நிலைக் கல்விப் பணிப்பாளர் யூ.எம். வாஹிட், மற்றும் இளைஞர் சேவைகள் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ. மஜீட் போன்றோரை கல்முனை ஸாஹிறாக் கல்லூரி விடுதியில் தங்க வைத்து கல்வி கற்க வழி வகுத்திருந்தவர். ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் மௌலவி யூ.எம். நியாஸ் அவர்கள் கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி விடுதியில் தங்கி மார்க்கக் கல்வி கற்கவும் வழி சமைத்தவர். இதன் விளைவாக நியாஸ் மௌலவி ஒரு பட்டதாரியாகவும், கல்வி டிப்ளோமாதாரியாகவும், கல்வியில் முன்னேறி தனது தகப்பனின் கனவை நனவாக்கிக் கொண்டார். மூத்த மகன் செய்னுலாப்தீன் மரைக்கார் மற்றும் இளைய மகன் ஹாஜி பாறூக் போன்றவர்கள் சம காலத்தில் நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அன்னாரது ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'ஒஸ்மானியா பௌண்டேஷ' னில் ஏறத்தாழ 500 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஐ வேளைத் தொழுகையில் முறையான பேணுதலைக் கடைப்பிடித்த மர்ஹூம் உதுமாலெப்பை ஜம்ஆத் தொழுகையில் கறுப்பு நிறத் துருக்கித் தொப்பி அணிந்து பள்ளிவாசலில் முன் வரிசையில் அமர்ந்திருக்கக் காணப்படுவார்.
அட்டாளைச்சேனை முதுசங்களுள் மர்ஹூம்களான அல்ஹாஜ் ஜே.எம். பதுறுதீன் மௌலானா, சம்சுதீன் மௌலானா, நசுறுதீன் மௌலானா, அஷ்ஷெய்க் பி. உமறலியார் ஆலிம் ஆகியோருக்கெல்லாம் இவர் 'உதுமாலெப்பைக் காக்கா' எனும் மரியாதை நாமத்துடன் அழைக்கப்பட்டவருமாவார்.
அட்டாளைச்சேனை மூத்த பிரஜைகளில் ஒருவரான உதுமாலெப்பை அவர்களின் வாழ் நாள் சாதனைகளை நவீன உலகுக்கு முன்னுள்ள காலப்பகுதியில் வைத்துப் பார்த்தால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
இத்தகைய சிறப்புக்குரிய மர்ஹூம் உதுமாலெப்பை அவர்கள் கடந்த 1994 ஆம் ஆண்டு எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து இறையடியெய்திவிட்டார். அன்னாரின் பாவங்களை மன்னித்து உயர்தரமான சொர்க்கத்தை அன்னாருக்கு நசீபாக்குவாயாக!
Reviewed by Editor
on
March 07, 2021
Rating: