
“சுரக்கிமு கங்கா” (ஆறுகளைப் பாதுகாப்போம்) தேசிய வேலைத்திட்டம் உலக நீர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (22) வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம புண்ணிய நகரில் மாணிக்க கங்கைக்கு அருகில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
"சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட பத்து அம்ச கருத்தியலின் அடிப்படையில் பசுமை சுற்றாடல் முகாமைத்துவத்திற்காகத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தில் பிரதானமானதாக “சுரக்கிமு கங்கா” வேலைத்திட்டம் காணப்படுகிறது.
சுற்றாடல் பாதுகாப்பின் பிரதான பகுதியான நீரின் தூய்மையை உறுதி செய்து நீர் வளத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். ஆறுகளைப் பாதுகாப்பதன் மூலம் மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குதல், சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுலா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஏனைய நோக்கங்களாகும்.
இலங்கையில் உள்ள 103 ஆறுகளை உள்ளடக்கிய வகையில் “சுரக்கிமு கங்கா” நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச அலுவலகங்களினால் இரண்டுவார காலத்திற்குள் கணினி செயலியைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வின் மூலம் இந்த 103 ஆறுகளோடு தொடர்புடைய பிரச்சினைகள் உள்ள இடங்கள் 10,410 பரீட்சிக்கப்படும். ஆற்றின் இருபுறமும் சேதமடைதல், அனுமதியின்றி காணிகளைக் கையகப்படுத்தல் மற்றும் முறையற்ற கட்டிட நிர்மாணங்கள், மணல் அகழ்தல், வீட்டு அசுத்த நீர் ஆற்றில் கலத்தல், மலசலகூட கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவு நீரை ஆற்றில் கலத்தல் போன்றவை இவற்றில் மிக முக்கியமானவையாகும்.
“சுரக்கிமு கங்கா” (ஆறுகளைப் பாதுகாப்போம்) வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து ஆறுகளையும் சுத்தம் செய்வதற்காக 2300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதிப் பற்றாக்குறையானால் இவ்வருட இறுதிக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக மேலதிக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் விஜித்த பேருகொட, ஊவா மாகாண ஆளுநர் கெளரவ ஏ.ஜே.எம்.முசம்மில், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமார, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பி.பீ.ஹேமந்த ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
