(றிஸ்வான் சாலிஹூ)
ஊவா மாகாணத்திற்கு உட்பட்ட வலயக் கல்வி பணிப்பாளர்களுடனான சந்திப்பொன்று ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஊவா மாகாண ஆளுநர் கெளரவ ஏ.ஜே.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், ஓய்வூதிய திட்டங்கள், ஆசிரியர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள், ஆசிரியர்கள் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கூடிய கவனம் இந்த சந்திப்பில் செலுத்தப்பட்டது என்று ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பிலான கொள்கை ஒன்றை விரைவில் தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன், மேலும் மீள் அறிவித்தல் வரும்வரை கல்விசாரா ஊழியர்களுக்கான நியமனங்களை வழங்குவது இடைநிறுத்துவது தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. பி.வி.விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் திரு. நிஹால் குணரத்தன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி. சந்தியா அபன்வெல உட்பட வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
