(ஐ.எல்.எம்.தாஹீர்)
கொழும்பு மாவட்டத்தின் மொறட்டுவ எகொட உயன றோட், மோதர எனும் கிராமத்தில் 1960.07.16 ஆம் திகதி பிறந்தவர் ஷேஹு ஜுனைத் முஹம்மத் லாபிர் என்பவராவர்.
இவர் 1979.12.15 ஆம் திகதி பொலிஸ் திணைக்களத்தில் கான்ஸ்டபிளாக இணைந்து; ஆரம்ப நியமனமாக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் 1980.09.01ஆம் திகதியிலிருந்து 1982.01.01 ஆம் திகதி வரை கடமையாற்றினார். பின்னர் கிடைக்கப்பெற்ற இடமாற்றத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலான இரு வருடங்கள் வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவ்வேளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லலானார்.
நாட்டுக்காகச் சேவை செய்யக்கூடியதொரு பொறுப்பு வாய்ந்த தொழிலைச் செய்வதே தனது ஒரேயொரு நோக்கமாகக் கருதி அதி விருப்பத்துடன் பொலிஸ் சேவையில் தான் சேர்வதற்கான அவகாசம் அன்னாரது 19 ஆவது வயதில் கிடைத்தது.
அன்று நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் ஆரம்ப கால கட்டம். 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ். நகருக்குச் சுமார் 10 மைல் தொலைவில் உள்ள சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை மையமாக வைத்து தற்கொலைப் போராளிகளினால் நடாத்தப்பட்ட திடீர் தாக்குதலினால் அப் பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சுமார் 25 பொலிஸ் உத்தியோகத்தர்களில் நாட்டுக்காக உயிர் நீத்த பட்டியலில் உள்ளடங்கிய ஒரேயொரு முஸ்லிம் கான்ஸ்டபிள் இவர் ஆவார்.
இவரது மறைவிற்குப் பின் பொலிஸ் திணைக்களத்தின் மூலம் நஷ்ட ஈடாகக் கிடைக்கப்பெற்ற தொகையான 75,000.00 ரூபா அன்பளிப்புப் பணம் அன்னாரது ஞாபகார்த்தமாக தனது கிராமத்தின் (மொறட்டுவ – மோதர) மஸ்ஜிதுல் ஹஸனாத் ஜும்ஆப் பள்ளிவாசலில் அழகிய தோற்றத்தில் 'மிம்பர்' அமைக்க நன்கொடையாக வழங்கி வைத்தமை அக் கிராம வரலாற்றில் அவ் ஊர் மக்களின் அபிமானத்தைப் பெற்று இன்றும் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதொரு நல்ல விடயமாகும்.
மர்ஹூம் லாபிர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது விடுமுறையில் வீடு வந்த வேளை அவருக்குத் திருமணப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட விருந்தும்; அவை நிறைவேறாது போன தனது உள்ளத்தில் உள்ள உள்ளக்கிடக்கைகளைக் கவலை தோய்ந்த முகத்துடன் அன்னாரது அன்புத் தாயாரான 90 வயதை எட்டிய ஜனாபா பாரியத் உம்மா மிக வேதனைப்பட்டுக் கூறினார்.
நாட்டுக்காக உயிர் நீத்த தேசிய வீர்களின் பட்டியலில் மர்ஹூம் லாபிரின் பெயர் உள்ளடக்கப்பட்டதோடு அன்னாரின் குடும்பத்தவருக்கு முழுச் சம்பளத்தையும் அரச விதிமுறைகளுக்கமைய பொலிஸ் திணைக்களத்தால் இற்றை வரை வழங்கப்பட்டு வருவது எறிக்கும் வெயிலுக்கு மர நிழலின் கீழ் அமர்ந்து ஆறுதலடையும் விடயத்திற்கு ஒப்பானதாகும்.
ஏரிக்கரை பணிமனை (லேக் ஹவுஸ் நிறுவனம்) விநியோகப் பகுதி முன்னாள் முகாமையாளரும், மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்று மொழிபெயர்ப்பாளராக விளங்கும் எஸ்.ஜே.எம். நிஸாம் மர்ஹூம் லாபிரின் மூத்த சகோதரராவார். மற்றும் எஸ்.ஜே.எம். பரீத், எஸ்.ஜே.எம். ஜலீல் ஆகியோர் மறைந்த கான்ஸ்டபிள் லாபிரின் இளைய சகோரர்களுமாவர்.
அன்னாரின் மறுமை வாழ்வில் உயர் சுவனம் கிடைக்கப் பிரார்த்திப்போமாக.
Reviewed by Editor
on
March 30, 2021
Rating:
