
(றிஸ்வான் சாலிஹூ)
ஆத்மீகத்தை அரசியலிலிருந்து பிரிப்பது மலரிலிருந்து நறுமணத்தைப் பிரிப்பது போன்ற காரியமெனவும், அரசியல் தலைவர்கள் பள்ளிவாசல்கள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை கெளரவ உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தொடர்ச்சியாக 30நாட்கள் இடம்பெற்று வந்த ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸ் நிகழ்வின் இறுதி நாளான இன்று (13) சனிக்கிழமை தலைமையுரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கூறியவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தனது தலைமையுரையில் தெரிவித்ததாவது,
அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் 64 வருடங்களாக ஸஹீஹுல் புஹாரி கிரந்தம் ஓதப்பட்டு வருகிறது. சுமார் ஆறு இலட்சம் ஹதீதுகளைத் திரட்டிய இமாம் புகாரி அவர்கள் சுமார் 7563 ஹதீதுகளை நூலாகத் தொகுத்தார்.
நபியவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை , முன்மாதிரிகள் தான் ஹதீதுகளாக இருந்து அது அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்ற உதவுகிறது. புனித குர்ஆனுக்கு அடுத்தபடியாக ஹஹீஹுல் புகாரி கிரந்தத்தை மதிக்கிறோம். ஜும்ஆ பிரசங்கங்கள் சுருக்கமாக இருப்பதால் எல்லாவற்றையும் அதில் சொல்ல முடியாதுள்ளது. இவ்வாறான ஹதீஸ் மஜ்லிஸ்களில் தான் புஹாரியின் முழுமையான விளக்கத்தைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. இவ்வாறான மஜ்லிஸ்களை ஏற்பாடு செய்த எமது முன்னோர்களை இந்த உயரிய சபையில் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
அது மட்டுமல்லாமல் பள்ளிவாசல்களில் கடமையாற்றிய முஅத்தின்கள், இமாம்கள் மற்றும் கடமையாற்றிய பெரியவர்களையும் கௌரவிக்க வேண்டிய பாரிய தேவையும் கடப்பாடும் எமக்கு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் செய்யவுள்ளோம்.
தனியே மார்க்க விடயங்களை மாத்திரமன்றி சமூகப்பணிகளையும் செய்வதுதான் மஸ்ஜித்களின் நிர்வாகத்தின் கடமையாக இருக்கிறது. நபியவர்களின் காலந்தொட்டு, பள்ளிவாசல்கள் தான் சமூகத்தை வழி நடாத்தின என்பதை இந்த ஹதீஸ் கிரந்தம் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
சிறந்த அரசியல் தலைமைகளும் பள்ளிவாசல்களிலே புடம்போடப்பட்டன. அரசியலையும், ஆத்மீகத்தையும் பிரிக்க முடியாதென்பது இதிலிருந்து புலப்படுகிறது. இந்நிலைமைகள் பின்னர் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்களால் மாற்றமடைந்தன. இதனால், தலைமைகளைப் புடம்போடும் நல்ல சந்தர்ப்பங்கள் இல்லாமலாகியது. தன்னைப் பொறுத்தவரை சிறந்த சமூக மற்றும் அரசியல் தலைமைகளுக்கான பாடசாலைகளாகவே பள்ளிவாசல்கள் உள்ளது என்று தனது தலைமையுரையில் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் சபீஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் தனதுரையில், அக்கரைப்பற்றில் தற்போது இளம் தலைமைகள் பள்ளிவாசல்களைப் பொறுப்பேற்று நிர்வாகம் நடாத்துவது கடும் மகிழ்ச்சியளிப்பதோடு, சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற புகாரி மஜ்லிஸ் நினைவுகள் போன்று இது தம்மை ஆட்கொள்ளவதாகவும் அவர் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
March 13, 2021
Rating: