(ஐ.எல்.எம். தாஹிர்)
மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவ் அனைத்திலும் பெண்களே உலகின் கண்கள். அணைத்து வளர்ப்பவளும் தாய்; அணைப்பில் அடங்குவதும் தாய். அன்னையில் தொடங்கி, சகோதரியாக, மனைவியாக, மகளாக, பேத்தியாக, தோழியாகப் பல பரிமாணங்களில் பெண்களே நம்மில் நிறைந்து காணப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். பெண்தானே என்று தாழ்வாக எவரும் பெண்களை நினைப்பது தவறு. அவள் அங்கீகரிக்காவிட்டால் உலகமே ஒரு போதும் ஆண் மகன் என்று ஏற்றுக்கொள்ளாது. கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண்.
அவள் சந்தோஷமாக இருந்தால் பேசுவதை யாராலும் நிறுத்தி விட முடியாது. சோகமாக இருப்பின் அவளை யாராலுமே பேச வைக்கவும் முடியாது. பெண்கள் சிரித்தால் அழகாக இருக்கும். அந்தச் சிரிப்புக்குள் ஆயிரம் கவலைகளும் இருக்கத்தான் செய்யும். புலவர் பாடுவதும், கவிஞர் நாடுவதும், கலைஞர் தேடுவதும், பெண்ணைத்தான். பெண் என்பவள் இயற்கையின் சீதனப் பரிசு.
சர்வதேச ரீதியில் மகளிர் தினம் பிரதி வருடமும் மார்ச் 08 ஆம் திகதி கொண்டாடப்படுவதும் சிறப்புக்குரிய விடயமே. தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலகப் பெண்களுக்கும் ஆண் வர்க்கம் பூரண ஆதரவினைத் தெரிவித்துக் கொள்ளும் பாரிய கடப்பாடு உள்ளதென்பதை இத் தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.
தமிழ்த் திரையில் தன் தனித்துவத் திறமையால் முத்திரை பதித்த பெண் மணிகள் பலர் இருக்கக் காண்கிறோம். அதனைப் பட்டியலிடுவதானது இலேசுப்பட்ட காரியமல்ல. நீண்டு கொண்டே போகும். இதில் இசைப் பேரரசி பி. சுசீலா அம்மையாரின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. இவரது இனிமையான தேன் மதுரக் குரலில் பெண்களைச் சிறப்பிக்கும் பாடல்கள் அனைத்துமே 'பொக்கிஷம்'தான்.
'இளமை கொலுவிருக்கும், இனிமை சுவையிருக்கும், இயற்கை மணமிருக்கும் பருவத்திலே... பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே' எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் கண்ணதாஸன் வரிகளில் பி. சுசீலா பாடிய இப்பாடலை இங்கு நினைவுக்கு எடுத்துக் காட்டுகின்றேன்.
கடந்த 1992 ஆம் ஆண்டு திருமதி. பி. சுசீலா அம்மா இலங்கைக்கு வருகை தந்த அந்த நாள் ஞாபகம். அவ்வேளை அவரைத் தினகரன் பத்திரிகையின் சார்பில் பேட்டி காணும் சந்தர்ப்பம் அப்பொழுது எனக்குக் கிடைத்தது.
கொழும்பு செட்டியார் தெரு, ஜெயநித்தியக் கல்யாணி நகை மாளிகையினரின் ஆதரவில்; அன்றைய நாள் பண்டாராநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இரசிகர்கள் கூட்டம் நிறைந்த இனிமையான இவரது இன்னிசைக் கச்சேரி இரவு நேரம் இனிதே நடைபெற ஏற்பாடாகி; அந் நிகழ்ச்சியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. இராஜேஸ்வரி சண்முகம் மற்றும் அறிவிப்பாளர் நண்பர் ஸனூஸ் முஹம்மத் பெரோஸ் ஆகியோர் முன்னின்று சிறப்புற ஒருங்கமைத்து அறிவிப்பாளர்களாகக் கடமையாற்றிய ஆனந்தமான அந் நாள் நிகழ்வு மனதை மறக்காத பசுமையான நினைவாகும்.
தாய்க்குல உணர்வோடு திருமதி. பி. சுசீலா அம்மாவை நினைவிலிருத்தி அவருக்காக எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைச் சொரிவதில் மன மகிழ்வடைகின்றேன்.
(ஐ.எல்.எம். தாஹிர்)
சிரேஷ்ட ஊடகவியலாளர்
இனிய குரலால் இனிக்க வைத்துத் தடம் பதித்த இசைக்குயில் பி. சுசீலா அம்மா
Reviewed by Editor
on
March 24, 2021
Rating:
