ஒரு இலட்சம் புத்தகங்களின் வாசனையை நுகர்ந்தபடி ஒரு தேநீரை, காப்பியை அருந்தக் கிடைத்தால் எந்த வாசம் மூக்குத் துவாரங்களை முந்திச் செல்லும்?
”நெவம்கான் ஷாஹில்” ஒரு பிரமாதமான படைப்பு. பூமியில் உள்ள அத்தனை சிறப்புக்களையும் ஒரே இடத்தில் உருவாக்கிப் பார்க்கும் பேராசையுடன் உஸ்குதார் நகரில் நிமிர்ந்து நிற்கிறது.
இதுபோலவொரு இடத்தைக் கண்கொண்டு காணாதவரைக்கும் கற்பனைகூடச் செய்யமுடியாதென்றே சொல்லலாம். ஒரு நூலகத்திற்கு என்னவெல்லாம் தேவை? புத்தகங்கள், அலுமாரிகள், மேசைகள், நாற்காலிகள். அவ்வளவுதான். ஆனால் நெவம்கான் ஷாஹில் ”நகரை நாகரீமாக்கல்” என்ற செயற்றிட்டத்தின் கீழ் இரண்டு மாடிகள் திருமண மண்டபமாக இருந்த ஓர் அற்புதமான கரையோர இடத்தை நூலகமாக மாற்றியதனால் உருவாகியிருக்கிறது. இரண்டாண்டுகள் முன்பு உருவான மிகப் புதிய கருப்பொருள் திட்டம் இது. ஒரு இலட்சம் புத்தகங்கள். கட்டட வடிவமைப்பும் மெத்தைகளும், நாற்காலிகளும் அங்கேயே வாழந்துவிடக் கேட்கும்.
உணவகத்தை நூலகத்திலிருந்து பிரிக்கவில்லை. புத்தகங்கள் சூழ நடுவேயிருந்து உணவருந்தலாம். கஃபே என்றால் ஏதோ நான்கு வகை நிறம் பூசிய கேக் துண்டுகளும், தேநீரும், வாயில் நுழையாத பெயரில் முதலாளித்துவ வியாபாரிகள் கண்டுபிடித்த சில காப்பிகளும் என்று எண்ணவேண்டாம். முற்றிலும் ஃபிரஷ் பழச்சாறுகள், குளிர்பானங்கள், சாலட்கள் முதல் நீங்கள் உலகின் எந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும் ஏதோவொரு வகையில் உங்களைத் திருப்தி காணச் செய்யும் வகையிலான உணவுகளைப் பரிமாறுகிறார்கள்.
நூலகம் என்றால் மாணவர்களும், வயதான பேராசிரியர்களும் தஞ்சம் கோரும் இடம் என்பதாகத் துருக்கி மக்கள் எண்ணிவிடக்கூடாது என்று பார்த்துப் பார்த்து அமைத்திருக்கிறார்கள். ஒட்டமான் பேரரசர்களின் அரண்மனைகளைப் பார்வையிடும்போது, ”வாழ்ந்திருக்கிறார்கள்” என்று சொல்லவகைக்கும். அதே அனுபவத்தை மக்களுக்கும் தர நினைத்தோ என்னவோ இந்த பிரமாண்டமான நூலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தரைகள், சுவர்கள், யன்னல்கள்,தேர்வு செய்திருக்கும் வண்ணங்கள், மின்விளக்குகள், படிக்கட்டுக்கள், கதவுகள் எல்லாமே ஒரு அரண்மனைக்குள் வாசம் செய்கின்ற பிரம்மிப்பைத் தருகின்றது.
நான் நேற்று அங்கு சென்றபோது நூலகத்தில் அமர்வதற்கு இடமே இருக்கவில்லை. இளம் பெண்களும் ஆண்களும் புத்தகங்களுக்குள் அப்படியே மூழ்கிக் கிடந்த அந்தக் காட்சி ஒரு கனவுபோல என்னை திகைத்து உறைந்துபோய் நிற்கச் செய்தது. 24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்த நூலகத்தில் இணைய இணைப்பு, பாரம்பரிய டேர்கிஸ் தேநீர் முழுநேரமும் இலவசமாகக் கிடைக்கின்றது. உணவகம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் மட்டும் இயங்கும்.
குழந்தைகளுடன் நூலகத்திற்குச் செல்கின்ற பெற்றோர்களுக்கு அங்கேயே டே கெயார் வசதியிருக்கிறது. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை பால்கனி வழியாகப் பார்த்துக் கொண்டோ பார்க்காமலோ நீங்கள் புத்தகங்களை வாசிக்கலாம். எழுதலாம். கணனியில் வேலையைச் செய்யலாம். குழந்தைகளுக்கான புத்தகங்கள், அவர்கள் விரும்பக்கூடிய உணவுகள் எல்லாமும் கிடைக்கின்றது. வெளியே உள்ள உணவகங்களுடன் ஒப்பிடும்போது விலை நியாயம். சுவையான உணவு. அத்துடன் பாரம்பரிய விருந்துபசார முறை.
பல மணி நேரங்கள் புத்தகங்களை வாசித்ததினாலோ, எழுதியதினாலோ, கணனித் திரையைப் பார்த்துக் கொண்டிருந்ததனாலோ கண்கள் கடுத்தால் அப்படியே எழுந்து கலேரியை ஒரு பார்வையிடலாம். மியூசியத்திற்குள் சென்று ஒரு நடை நடக்கலாம். வரலாற்றுக்குள் சென்று வரலாம். அல்லது சற்றுக் காலாற நடக்க எண்ணினால், எப்போதும் ஒரே நீல நிறத்தில் தவளும் பொஸ்பரஸ் கடலைப் பார்த்துக் கொண்டு பூங்காவினுள் உலவலாம். சுத்தமான மலசலககூடங்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள். வேறென்ன வேண்டும்?
கற்ற சமுதாயத்தை உருவாக்குவதும் அவர்களை கௌரவம் செய்வதும் தான் நாகரீகமயமாக்கலும் அபிவிருத்தியும். சொல்லாமல் செயல் படுத்தியுள்ளார்கள்.
கூடுதல் தகவல் எங்கள் வீட்டில் இருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் இந்த சுவர்க்கம் இருக்கிறது. நடந்தே செல்கிறேன்.
நன்றி - சர்மிளா செய்யத்
