எம்மை விட்டு பிரிந்த சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா ஆசிரியரின் வரலாறு முஸ்லிம் சமூகத்தில் நாளாந்தம் நினைவூட்டப்பட வேண்டியது என்று அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் வெளியிட்டுள்ள தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் மறைவு குறித்து எஸ்.எம் சபீஸ் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
பதவிகளை ஆண்டவன் வழங்கிய அமானிதமாகக் கருதிப் பொறுப்புடன் செயற்பட்ட மிகச்சிறந்த சமூகத் தலைவர் மர்ஹும் ஹனீபா ஆசிரியர். சாய்ந்தமருது ஊருக்கு அரசியல் விழிப்பூட்டிய அவர், ஏமாற்றப்படும் தனது மக்களை பள்ளிவாசல் தலைமையால் ஒன்றிணைத்தார்.
இந்த மக்களின் ஒன்று படலில் பல பிரதேசங்களும் ஒற்றுமைப்படத் துணிந்தன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றுவாய் காலங்களிலும், பள்ளிவாசல்கள்தான் மக்களை ஒன்றுபடுத்தி கட்சியைப் பலப்படுத்தியது. எமது சமூகத்துக்கு இவ்வாறான ஒன்றுபடுதலே இன்று அவசியப்படுகிறது. மர்ஹும் ஹனீபா ஆசிரியரை முழு ஊருமே அங்கீகரித்தமைக்கு அவரது நேர்மை, கடமை மற்றும் சமூகப் பொறுப்புக்களே பிரதான பங்களித்தன.
சகல நேரங்களிலும் ஆத்மீக சிந்தனையில் செயற்பட்ட அவரை, ஒரு சமூகத் தலைவனாக மட்டுமன்றி சிறந்த மார்க்க ஞானமுள்ளோராகவே நாங்கள் பார்க்கின்றோம் .அல்லாஹ்வின் வீட்டை (பள்ளிவாசல்) தலைமையேற்று நடத்துவது சாதாரண விடயமல்ல.ஊசி போன வழியானாலும் அதற்கு மறுமையில் பதிலளிக்க வேண்டுமென்ற பொறுப்புமிக்க அமானிதம்தான் பள்ளிவாசல் தலைமை. இந்த அமானிதத்தை அவர் உறுதியாகப் பேணி, பிறருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
மூத்த ஊர்களில் ஒன்றான சாய்ந்தமருது மக்கள் கடந்த தேர்தல்களில் காட்டிய முன்மாதிரிகள் இன்று பல அரசியல் தலைமைகளை பொறுப்புடன் செயற்பட வைத்துள்ளது. இவர் கற்றுத் தந்த இந்தப் பாடங்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வராலாற்றில் நாளாந்தம் புரட்டப்பட்டு படிக்கப்படும் என்பது எங்களது நம்பிக்கை.
மரணத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பிக்க இயலாது என்ற இறைவனின் நியதில் மர்ஹூம் வை.எம் ஹனீபாவும் ஆசிரியரும் சென்று விட்டார்.அந்நாரது இழப்பில் துயருறும் சகலருக்கும் இறைவன் "ஷகீனத்" என்ற பொறுமையை கொடுக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம் என்று அவர் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
