கெளரவமான நோன்பாளிகளை விரட்டும் இழிநிலையை உருவாக்கிட வேண்டாம் - பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள்!!!


 

(முஹம்மட் அஸ்மி)

முழு நாளும் பசித்திருக்கும் நோன்பாளிகளுக்கு கண்ணியம் வழங்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம் , மனிதாபிமான உணர்வுடன் என்றும் பொலிசார் செயற்படுவர் , ஆனால் தற்போதைய நிலையிலே சுகாதார வழிகாட்டல்களை எல்லாம் மீறி சிலர் பொறுப்பற்ற விதத்திலே இப்தார் நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றனர் , இவ்வாறான நேரத்திலே அந்த இடங்களுக்கு சென்று பசியோடிருக்கின்ற நோன்பாளிகளை விரட்டுகின்ற , அல்லது சட்ட நடவடிக்கைக்கு ஆளாக்குகின்ற இழிநிலையை யாரும் உருவாக்கிட வேண்டாம் என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டப்ளியூ.கீர்த்தி ஜயந்த வேண்டிக் கொண்டார்.

ஏறாவூர் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தெரிவித்தார்.

கொரோனா அச்சம் நிலை கொண்டுள்ள இத்தருணத்தில் எமது கடமையை மிகவும் பொறுப்புடன் முழு நேரமும் முன்னெடுத்து வருகிறோம், இந்நிலையில் பொது மக்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் விடயத்தில் மிகவும் பொறுப்பற்ற விதத்திலே சிலர் நடந்து கொள்வதையிட்டு மிகவும் கவலையடைகிறேன், சில இடங்களிலே கூட்டாக நோன்பு திறக்கின்ற ஏற்பாடுகளை செய்வதாக எமக்கு தகவல்கள் கிடைக்கிறது, அதற்கான புகைப்படங்களை கூட பார்க்க கிடைத்தது, விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் , தனி நபர்களாக இருந்தாலும், பள்ளிவாசல்களது, அமைப்புக்களது நிருவாகிகளாக இருந்தாலும் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் தயங்கப் போவதில்லை, 

எமது பிரதேசத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத சுமார் 85பேருக்கு எதிராகவும் , டெங்கு நோய் பரவக்கூடிய வகையில் சூழலை பேணிய சுமார் 65பேர் வரையானோரும் அண்மையில் சட்டநடவடிக்கைகளுக்காக நீதி மன்றத்திலே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் எமது கடமைகளை முன்னெடுக்கிறோம் , இந்நிலையிலே  அனைவரும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், நடத்தைகளிலே மாற்றங்கள் ஏற்பட வேண்டும், சில பள்ளிவாசல்களில் கூட அசமந்தத்துடன் செயற்படுவதாக அறிய முடிகிறது.

போதைப் பொருள் பாவனை முஸ்லிம் பகுதிகளிலே அதிகரித்து காணப்படுகின்றது இதனை இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், இவ்வாறானவர்களே கொரோனா தொற்று பரவலுக்கும் வழி சமைக்கின்றனர், இவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போதும் எமது பொலிஸ் உத்தியோகத்தர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

நாம் 24மணி நேரமும் மக்களுக்கு சேவையாற்ற தயாராகவே உள்ளோம் , அவ்வாறே  செயற்பட்டும் வருகிறோம், எந்த வேளையும் அழைக்கப்பட்டால் இந்த ஊரின் பாதுகாப்பு தொடர்பில் எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க காத்திருக்கிறோம்,   அரச ஊழியர்கள் தமது கடமைகளை செய்ய ஒரு போதும் பின்நிற்க வேண்டாம் , எவரும் கடமைகளுக்கு  இடையூறு விளைவித்தால் உடன் தெரியப்படுத்துங்கள் , தகுந்த நடவடிக்கை எடுப்போம், அண்மையில் எம்மை கூட முகநூலில் விமர்சித்த ஏறாவூரை சேர்ந்த ஒருவரை கைதுசெய்து அவருக்கும்,  ஏனையோருக்கும் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளோம், எமது கடமையை சரிவர செய்ய அனைவரதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கிறோம் என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கெளரவமான நோன்பாளிகளை விரட்டும் இழிநிலையை உருவாக்கிட வேண்டாம் - பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள்!!! கெளரவமான நோன்பாளிகளை விரட்டும் இழிநிலையை உருவாக்கிட வேண்டாம் - பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள்!!! Reviewed by Editor on April 26, 2021 Rating: 5