
புதிய சமூகமொன்றை உருவாக்கும் போராட்டத்தில் முன்னணி வகிக்க வேலைசெய்கின்ற மக்கள் முன்வரவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள மே தினச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
மே 01 ஆந் திகதி சர்வதேச தொழிலாளர் தினமென்பது வேலைசெய்கின்ற மக்களின் போராட்டக் குணத்தையும் ஒற்றுமையையும் எடுத்தியம்புகின்ற தினமாகும். மே தினமானது லிபரல் முதலாளித்துவ ஆட்சியாளர்களால் மக்களுக்கு வழங்கப்பட்ட வெறுமனே விடுமுறைத் தினமோ அல்லது பொழுதுபோக்குத் தினமோ அல்ல. அது வேலைசெய்கின்ற மக்களின் போராட்டத்தையும் உயிர்த்தியாகத்தையும் நினைவுகூறுகின்ற தினமாகும்.
1886 இல் சிக்காகோ நகரத்தில் தொழிலாளர்கள் 08 மணித்தியால வேலைநாளுக்காக நடாத்திய பிரமாண்டமான போராட்டமே மே தினத்திற்கு அடிப்படையாக அமைந்தது. அதனை ஐக்கிய அமெரிக்க முதலாளித்துவ ஆட்சியாளர்கள் சூழ்ச்சிமிக்கவகையில் தொழிலாளர் படுகொலை மூலமாக அடக்கியபோதிலும் போராட்டத்தை தடுத்துநிறுத்த அவர்களால் இயலாமல் போயிற்று. இறுதியியல் 08 மணித்தியால வேலைநாள் வென்றெடுக்கப்பட்டது. அதற்காக போராடி உயிர்நீத்த தொழிலாளர்களை நினைவுகூறுவதற்காக இரண்டாவது சோஷலிச சர்வதேசத்தின் பாரிஸ் நகரில் இடம்பெற்ற முதலாவது மகாநாட்டின்போதே மே 01 ஆந் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக பெயரிடப்பட்டது. எனவே, மே தினத்தின் உண்மையான உரிமை வேலைசெய்கின்ற மக்களுக்கும் இடதுசாரி இயக்கங்களுக்குமே உண்டு.
எனினும், சிக்காகோ தொழிலாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம்செய்த முதலாளித்துவ வகுப்பினரை பிரதிநிதித்துவம் செய்கின்ற முதலாளித்துவ கட்சிகளைப்போன்றே ஒருசில வியாபாரிகளும் சந்தர்ப்பவாதிகளும் மே தினத்தை தத்தமது நோக்கங்களுக்காக பொருள்விளக்கம் கொடுத்து அதன் உட்பொருளை நாசமாக்கி அதனை நலனோம்பல் தினமொன்றாக, வைபவத் தினமொன்றாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். எனவே, இந்த தருணத்தில் மே தினத்தின் அர்த்தத்தை திரிபுபடுத்துகின்றவர்களிடமிருந்து மே தினத்தின் உண்மையான அர்த்தத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது வேலை செய்கின்ற மக்கள் முன்னிலையில் உள்ள சவாலாகவும் விளங்குகின்றது.
கடந்த வருடத்தில்போல் இந்த வருடத்திலும் உலகம் பூராவிலும் உள்ள வேலை செய்கின்ற மக்களுக்கும் இலங்கைவாழ் வேலைசெய்கின்ற மக்களுக்கும் கொவிட் 19 பெருந்தொற்று நிலைமையினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள மட்டுப்பாடுகளின் கீழேயே தினத்தைக் கொண்டாட நேர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக கட்டுப்படுத்த இயலாமல் மனித உயிர்களை பலியெடுத்து பரவிவருகின்ற கொரொனா பெருந்தொற்று நிலைமையினாலும் வேலை செய்கின்ற மக்களுக்கு பெறுமதிமிக்க பாடமொன்று புகட்டப்பட்டுள்ளது. அது முதலாளித்துவத்திற்குள் முதலாளித்துவ அரசாங்கங்களின், முதலாளித்துவ இயக்கங்களின் முதன்மையான நோக்கம் மனித உயிர்களை பாதுகாப்பதல்ல மூலதனத்திற்காக இலாபத்தை திரட்டுவதே என்பதாகும். இந்த அனர்த்தத்தின் மத்தியில் முதலாளித்துவ இயக்கத்தை எவ்வாறாயினும் பேணிவரவும் இதே அனர்த்தத்தை இலாபமீட்டுகின்ற வியாபாரமாக மாற்றிக்கொள்ளவும் முதலாளித்துவ தீத்தொழில் புரிபவர்களைப் போன்றே அரசாங்கங்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சி மூலமாக முதலாளித்துவம் அதன் கீழ்த்தரமானதன்மையை வெளிக்காட்டியுள்ளது.
உலக முதலாளித்துவம், பேரரசுவாதம், நவலிபரல் உபாயமார்க்கத்திற்குள்ளே நெருக்கடிமேல் நெருக்கடிக்கு இலக்காகி வேலை செய்கின்ற மக்கள் போராடி வென்றெடுத்த உரிமைகளையும் பறித்தெடுத்து, தொழில்களை இழக்கச் செய்வித்து, சம்பளத்தைக் கத்தரித்து மக்கள்மீது சுமையை ஏற்றிக்கொண்டுள்ள நிலைமையிலேயே இத்தடவை உலகம் பூராவிலும் வேலை செய்கின்ற மக்கள் மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அதைப்போலவே, நெருக்கடிக்குள்ளாகிய பேரரசுவாதம் உலகத்தின் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையடிப்பதற்காக யுத்தங்களை நிர்மாணித்து, சுற்றாடலை அழித்து, இனவாதத்தையும் சமயரீதியான தீவிரவாதத்தையும் கட்டிவளர்த்து உலகம் பூராவிலும் மறைவுகளையும் இறப்புகளையும் தாராளமாக்கிக் கொண்டிருக்கின்ற நிலைமையிலாகும். உலக முதலாளித்துவ முறையையும் பேரரசுவாதத்தையும் தோற்கடிப்பதைத்தவிர வேறு மாற்றுவழி உலகம் பூராவிலும் உள்ள வேலை செய்கின்ற மக்களுக்கு தற்போது எஞ்சவில்லை.
இலங்கைவாழ் வேலை செய்கின்ற மக்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் சவால்களின் மத்தியிலேயே இத்தடவை உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டி நேர்ந்துள்ளது. இலங்கையின் முதலாளித்துவ முறைமைக்கு, முதலாளித்துவ அரசாங்கத்திற்கு மற்றும் சனாதிபதிக்கு நாட்டின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க இயலாதென்பதும் அவர்களால் செய்யக்கூடியது பிரச்சினைகளை வளர்த்து நாட்டையும் மக்களையும் பொருளாதாரத்தையும் சிக்கல்மீது சிக்கலில் மாட்டிவிடுவது மாத்திரமே என்பதும் தற்போது நிருபிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உற்பத்தி வழிமுறைகளையும் தகர்த்து பலவீனப்படுத்தி கடன்மீது தங்கியிருக்கின்ற ஒரு நாடாக இந்த நாட்டை மாறியமைத்த முதலாளித்துவ அரசாங்கங்கள் தற்போது கடனுக்கு மாற்றீடாக நாட்டின் முக்கியமான பொருளாதார உயிர்நிலைகள், காணிகள் மற்றும் வளங்களை வெளிநாடுகளுக்கும் கம்பெனிகளுக்கும் வழங்கி நாட்டை விற்றுக்கொண்டிருக்கின்றன. தேசப்பற்றுடைய ஆடைகளை போர்த்திக்கொண்டு அதிகாரத்திற்கு வந்த நிகழ்கால ஆட்சியாளர்களும் வெளிநாட்டுக் கடன்களுக்காக வெளிநாட்டு வல்லரசுகளுக்கு நாட்டைக் காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்குப் பதிலாக மேற்கு முனையமொன்றை அமைத்து இந்தியாவுக்கு கொடுக்க முனைகின்ற இந்த ஆட்சியாளர்களால் போர்ட் சிட்டியை நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட நிலப்பபகுதியாக்க அவசியமான சட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. மறுபுறத்தில் மோசடிகள், ஊழல்கள் மூலமாக பொதுப்பணத்தை சூறையாடுகின்ற முதளித்துவ அரசாங்கம் கள்வர்களுக்கும் ஊழல்பேர்வழிகளுக்கும் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக அவர்களை குற்றமற்றவர்களென விடுதலை செய்யவும் ஊழல்களையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்கவும் விசித்திரமான ஆணைக்குழு மூலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு தண்டனை வழங்குவதாக சபதமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலைக்காட்டி அதிகாரத்தைப் பெற்ற நிகழ்கால ஆட்சியாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை ஈடேற்றுவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நியாயத்தைக் கோருகின்றவர்களுக்கு சேறு பூசவும் அவர்களை வேட்டையாடவும் முயற்சிசெய்து கொண்டிருக்கின்றது.
மறுபுறத்தில் இந்நாட்டுப் பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு கொடுப்பதில் தாம் தோல்விகண்டுள்ளமையை நிகழ்கால ஆட்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள். வேலை செய்கின்ற மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க தாம் தயாராக இல்லையென்பதை, ஓய்வூதியம் பெறுநர்களுக்கு அதிகரித்த ஓய்வூதியத்தை வழங்கக்கூட இயலாதென்பதை அரசாங்கம் வெளிக்காட்டியுள்ளது.
கமக்காரர்களின் விளைச்சலுக்கு நியாயமான விலையையும் சந்தை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவும் யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலுக்காக நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும் அதற்காக 03 மாதங்களுக்கு மேலாக கமக்காரர்கள் மேற்கொண்டு வருகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு செவிசாய்க்கவும் தாம் தயாராக இல்லை என்பதை அரசாங்கம் வெளிக்காட்டி உள்ளது.
கிராமிய நுண் நிதிக் கடன் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டின் பெரும்பான்மை கிராமிய வறிய பெண்களின் கடன் நெருக்கடிக்கு இன்னமும் தீர்வு கிடையாது. பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்குகின்ற எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வினை வழங்க அனைத்து அரசாங்கங்களும் தோல்விகண்டுள்ளன. கொரோனா காரணமாக ஒன்லயின் கல்வியில் வீழ்ந்துள்ள பெரும்பான்மையான வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அவசியமான வசதிகளையும் சலுகைகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையால் அத்தகைய பிள்ளைகள் கல்வியில் இருந்து உதிர்வதற்கான அபாயநிலை தோன்றியுள்ளது. கல்வியில் நிலவுகின்ற நெருக்கடிகளுடன் இதுவும் சேர்ந்தவிடத்து முழுக் கல்விமுறைமையும் கவலைக்கிடமாகின்றது.
இந்நாட்டின் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு சிறிய உற்பத்தியாளர்களின், சுயதொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு, கொரோனாவின் தாக்கம் காரணமாக தொழில்களை இழப்பவர்களின் சிக்கல்களுக்கு, தனியார்துறை ஊழியர்களின் சிக்கல்களுக்கு என்றவகையில் அனைத்து மக்கட்குழுக்களினதும் எந்தவிதமான சிக்கலுக்கும் எளிமையான ஒரு தீர்வினையோ பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது தொழிலற்ற பட்டதாரிகளை உள்ளிட்ட இளைஞர் தலைமுறையினரின் சிக்கல்களுக்கான தீர்வின்மையால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது முதலாளித்துவத்தின் தோல்விநிலையாகும்.
சுற்றாடலைப் பாதுகாப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது சுற்றாடலை டோசர் பண்ணவும் பாதுகாக்கப்பட்ட வனங்களை உள்ளிட்ட நிலப்பகுதிகளை பல்வேறு கம்பெனிகளுக்கு அல்லது தமது அன்பர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. எம்மெதிரில் தற்போது இருப்பது பிரச்சினைகள் மாத்திரமேயன்றி தீர்வுகள் இல்லாத ஒரு நாடாகும். கண்ணீரேயன்றி சிரிப்பு இல்லாத ஒரு நாடாகும். பாதிப்புகளேயன்றி சுதந்திரமில்லாத ஒரு நாடாகும். அடக்குமுறை, அச்சுறுத்தல்களேயன்றி சனநாயகம் இல்லாத ஒரு நாடாகும். எனவே, இத்தடவை மே தினத்தில் வேலைசெய்கின்ற மக்களை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் முன்னிலையில் இருப்பது பாரிய சவாலாகும்: பிரமாண்டமான பொறுப்பாகும். மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகொடுப்பதில் முதலாளித்துவ முறைமையும், முதலாளித்துவ ஆட்சியும் தோல்விகண்டுள்ளதென்பது தற்போது மிகவும் தெளிவாகின்றது. நாட்டை அழிவிலிருந்து அழிவுக்கு கொண்டுசெல்லல், நாட்டை கடன் சமுத்திரமொன்றில் அமிழ்த்தி துண்டுதுண்டாக விற்பனை செய்தல், மக்களை விஞ்ஞானமல்லாத மூடநம்பிக்கையின்பால் அமிழ்த்துதல், இனவாதத்தையும் சமயம்சார்ந்த தீவிரவாத்தையும் கிளரிவிட்டு மக்களை பேதமுறச்செய்வித்தல், பொதுப் பணத்தை திருடுதல், சனநாயகத்தை வாரிச் சுருட்டிக்கொள்ளல், உரிமைகளைக் கோருகின்ற மக்களை அடக்குதலைத் தவிர வேறு எதனையும் செய்வதில் முதலாளித்துவம் தற்போது தோல்விகண்டுள்ளது.
எனவே, தொடர்ந்தும் முதலாளித்துவ கட்சிகள் பற்றி, முதலாளித்துவ தலைவர்கள் பற்றி எதிர்பார்ப்பினை வைத்துக்கொள்வதில் பலனில்லை. முதலாளித்துவம் இப்போது காலங்கடந்ததாகி விட்டது. முதலாளித்துவத்தை தோற்கடிக்கின்ற மற்றும் சோஷலிச சமூகமொன்றுக்கான போராட்டத்திற்காக மக்களை அணிதிரட்ட வேண்டும். பேரரசுவாதத்தை தோற்கடித்து மனித வர்க்கத்திற்கு விடுதலையை பெற்றுக்கொடுப்பதற்காக போராடவேண்டும். அதற்கான முன்னணி செயற்பொறுப்பினை ஈடேற்றுகின்ற பொறுப்பு தற்போது வேலைசெய்கின்ற மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமது தொழில்சார் உரிமைகளுக்காக போராடுகின்ற அதேவேளையில் புதியதொரு சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்ட முன்னணிப் படையணியின் செயற்பொறுப்பினை ஏற்றுக்கொள்ள முன்னணி வகிக்க வருமாறு வேலை செய்கின்ற மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்ற நாங்கள் அதற்காக எம்முடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு வேலை செய்கின்ற மக்களை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிடமும் அனைத்து முற்போக்கு மற்றும் சனநாயக சக்திகளிடமும் கேட்டுக்கொள்கிறோம்.
Reviewed by Editor
on
May 01, 2021
Rating: