(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
தற்போது அ.இ.ம.காவின் அம்பாறை மாவட்ட கட்சி முக்கியஸ்தர்களிடையே சில முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதன் தொடக்க புள்ளி, மக்கள் காங்கிரஸ் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக சிலர் மஹிந்த சார்பு கொள்கையுடன் செயற்படுவதாகும் என சுருக்கமாக கூறலாம். இந்த உள்ளக முரண்பாடுகள் சில நாட்களாக ஊடக மாநாட்டினூடாக சந்திக்கு வந்துள்ள கேவலம் அரங்கேறியுள்ளது. இதற்கு யார் காரணம் என்பது அறியப்பட வேண்டிய ஒன்று.
20க்கு ஆதரவளித்த பா.உறுப்பினர்கள் பொது மக்களால் நையாண்டிக்குட்படுத்தப்படுவது யாவரும் அறிந்ததே! இது பா.உறுப்பினர் முஷர்ரபுக்கு மாத்திரம் நடந்ததல்ல. மு.காவின் பா.உறுப்பினர்களுக்கும் இதே நிலையே! பா.உறுப்பினர் முஷர்ரப் நையாண்டிக்குட்படுத்தப்பட்டமைக்கு சில காரணங்கள் உள்ளன. 20க்கு ஆதரவளித்த யாரெல்லாம், தன்னை நியாயப்படுத்த மக்கள் மத்தியில் வந்தார்களோ, அவர்கள் எல்லாம் மக்களால் மிகக் கடுமையாக தூற்றப்பட்டார்கள்.
பா.உ முஷர்ரப், தன்னை கடுமையாக நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தார். அவரின் முயற்சியை விட பல மடங்கு மக்களால் விமர்சிக்கப்பட்டார். இவ் விமர்சனங்களை தனது கட்சியிலுள்ளவர்களே செய்கிறார்கள் என்பது அவருடைய எண்ணம். சந்தர்ப்பம் பார்த்து சில அரசியல் நகர்வுகளும் நடைபெறலாம். அந்த நகர்வுகளுக்கு பா.உறுப்பினர் முஷர்ரபே வழியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்பதை அவர் உணர வேண்டும். இது இன்னும் ஆழமாக பேச வேண்டிய பகுதி. இது பற்றி விரிவாக பேச இது பொருத்தமான நேரமில்லை.
பா.உறுப்பினர் முஷர்ரபின் மீது விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தன்னை மேலும் நியாயப்படுத்தவும், வேறு சில நகர்வுகளையும் கருத்தில் கொண்டும், அவரே முதன் முதலில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். இதில் அவர் பல்வேறு விமர்சன கருத்துக்களை கையில் எடுத்து பேசியிருந்த போதும், கட்சி, தன்னுடைய மறுப்பை, நிலைப்பாட்டை கட்டாயம் தெரிவித்தாக வேண்டிய இரண்டு விடயங்கள் பற்றி பேசியிருந்தார்.
அவை....
1. இடைக்கால தலைவர் நியமனத்தை விமர்சித்தமை.
2.பெருநாள் தினமன்று கொடியேற்றும் அவரது தீர்மானம்.
இடைக்கால தலைவர் நியமனத்தை பா.உறுப்பினர் முஷர்ரப் விமர்சிப்பது ஏற்க முடியாதது. அந்த ஊடக மாநாட்டில் இடைக்கால தலைவர் நியமனம் தேவையற்றதென கூறி மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். ஏற்கனவே கட்சிக்குள் தலைமைத்துவ போட்டி உள்ளதான விம்பம் சிலரால் கட்டமைக்கப்பட்டிருந்தது. பா.உறுப்பினர் முஷர்ரப் இவ்வாறு கூறியதும், அது இன்னும் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை தோற்றுவித்திருந்தது. அது குழப்பத்துக்குரிய ஒன்றல்ல என்பதை பா.உறுப்பினர் முஷர்ரப் அறியாதவரல்ல. இடைக்கால தலைவர் நியமனம் பிழையென்றால், அதனை அரசியல் உயர்பீட கூட்டத்தில் பேசியிருக்கலாமே! அங்கு மௌனமாக இருந்துவிட்டு ஊடக மாநாட்டில் விமர்சிப்பது பொருத்தமானதல்ல. எதை, எங்கு பேச வேண்டுமோ, அதை அங்கு பேசுவதே பொருத்தமாகும். பா.உ முஷர்ரப் இடைக்கால தலைவர் நியமனத்தை விமர்சித்ததன் பின்னணியில் வேறு சில விடயங்கள் உள்ளன. அது நீண்ட கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய பகுதி. இந்த விடயத்தை தெளிவு செய்ய வேண்டிய கடமை அரசியல் உயர்பீடத்திற்குண்டு.
பெருநாள் தினமன்று கொடியேற்றும் தீர்மானத்தை பா.உறுப்பினர் முஷர்ரப் அறிவித்திருந்தார். இது என் பார்வையில் நல்லதொரு தீர்மானம் என்பது மறுப்பதற்கில்லை. இந்த முடிவு அவரது சுய தீர்மானம். கட்சியோடு ஆராய்ந்து செய்திருக்கலாம். ஒரு கட்சியில் இருந்தால் அவ்வாறே செய்ய வேண்டும். பா.உறுப்பினர் முஷர்ரப் குறித்த தீர்மானத்தை வெளிப்படுத்தியதும், அது பாரிய விமர்சனத்தை தோற்றுவித்திருந்தது.
பெருநாளில் கறுப்பு கொடி கட்டுவதா என்ற விமர்சனம் பலரை சிந்திக்க செய்திருந்தது. பொதுமக்களிடம் சிறிதேனும் ஆர்வத்தை அவதானிக்க முடியவில்லை. பொது மக்கள் ஆர்வமின்றி காணப்பட்டமைக்கு, அதனை பா.உறுப்பினர் முஷர்ரப் கூறியமை பிரதான காரணமாக அமைந்தது. நீங்கள் பிரதமரிடம் சென்று கஞ்சி குடிப்பது, நாங்கள் இங்கு கொடி கட்டுவதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியதில் நியாயம் இருக்கவே செய்கிறது. பா.உறுப்பினர் முஷர்ரப் சுய விருப்பில் எடுத்த முடிவை நாங்கள் ஆதரிக்க போவதில்லை என்பது கட்சியின் பலரது முடிவாக இருந்தது. வெளியிலும் ஆதரவில்லை, உள்ளுக்கும் ஆதரவில்லை என்பதால், அவரது குறித்த திட்டம் தோல்வியடையும் என்பதை முன் கூட்டியே யூகிக்க முடிந்தது. இத் திட்டம் தோல்வியடைந்தால், அத் தோல்வியை கட்சி பொறுப்பெடுக்க முடியாது என்பதை வெளிப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் கட்சிக்கிருந்தது. இது கட்சியின் செல்வாக்கை கேள்விக்குட்படுத்தும் செயல் அல்லவா?
இவற்றின் அடிப்படையிலேயே அம்பாறை மாவட்ட செயற்குழு சார்பாக ஒரு ஊடக மாநாட்டை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் கட்சி ஆதவாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியவைகள். இதற்கு பதில் வழங்கும் விதத்தில் சில நாட்கள் முன்பு ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை பா.உறுப்பினர் முஷர்ரப் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியதில் ஒருவர் கூட கட்சியின் உயர்பீடத்தில் இல்லை. கட்சியின் சொல்லுமளவு எந்த பதவியிலும் இருப்பவர்களுமல்ல. பிராந்திய ரீதியான ஆதரவாளர்கள். அவ்வளவு தான். இதுவே பா.உறுப்பினர் முஷர்ரப் அ.இ.ம.காவிற்குள் இருக்கும் நிலை. அவருக்கு கட்சியின் உயர்மட்ட அங்கீகாரம் இல்லை என்பதை அறிய இதுவே போதிய சான்று.
கட்சியின் உள்ளகச் சண்டை தெருவுக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல. இத்தோடு இதனை நிறுத்துவது நல்லது. யார் பக்கம் பிழையிருந்தாலும், இதன் பிறகாவது தொடராமல் இருப்பார்கள் என நம்புகிறேன் இன்சா அல்லாஹ்.
