புத்தளம் மண்ணின் மைந்தனனின் இழப்பு ஓர் பேரிழப்பாகும் - ரவூப் ஹக்கீம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் துணிகரமான அரசியல் போராளிகளில் ஒருவராக மதிக்கப்பட்ட புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் காலமான செய்தி அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக அன்னாரின் மறைவையிட்டு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மறைந்த எமது ஸ்தாபக பெருந் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அசைக்க முடியாத ஆளுமையினால் தமது பாடசாலைக் காலத்திலேயே பெரிதும் கவரப்பட்டிருந்த கே.ஏ. பாயிஸ், புத்தளம் மண்ணின் மைந்தனாக கட்சிக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றார். நாடு முழுவதிலும் கட்சியை வியாபிக்கச் செய்வதில் தேசிய அமைப்பாளராக இருந்து அவர் அரும் பணியாற்றியிருக்கின்றார்.

நீண்ட காலமாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்திருந்த புத்தளம் மாவட்டத்திற்கு தேசியப் பட்டியல் ஊடாக அன்னாரை நியமித்து முஸ்லிம் காங்கிரஸ் கெளரவப்படுத்தியது.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், அப்போதைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தபோதும்  இன,மத,மொழி வேறுபாடுகளற்று குறிப்பாக புத்தளம் மாவட்ட மக்களுக்கும்,பொதுவாக நாட்டு மக்களுக்கும் பல்வேறு சேவைகளை அவர் செய்துள்ளார்

ஒரு காலப் பிரிவில் அவர் கட்சியோடு இல்லாதிருந்த நிலைமையிலும்கூட, நாம் அவரது ஈடுபாட்டை மறந்துவிடவில்லை. முஸ்லிம் காங்கிரஸோடு மீண்டும் இணைந்துகொண்ட அன்னார், தனது பணியைத் தொடர்ந்தார். உயர்பீடக் கூட்டங்களிலும் பங்குபற்றி அவ்வப்போது ஆக்கபூர்வமான,ஆணித்தரமான கருத்துக்களைத் தெரிவித்துவந்தார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மஃபிரத்தை அருளி, மேலான ஜன்னதுல் பிர்தெளஸ் சுவனவாழ்வை வழங்குவானாக.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், புத்தளம் வாழ் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தனிப்பட்ட முறையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.



புத்தளம் மண்ணின் மைந்தனனின் இழப்பு ஓர் பேரிழப்பாகும் - ரவூப் ஹக்கீம் புத்தளம் மண்ணின் மைந்தனனின் இழப்பு ஓர் பேரிழப்பாகும் - ரவூப் ஹக்கீம் Reviewed by Editor on May 24, 2021 Rating: 5