முஸ்லீம் சமூகத்திற்கு பாரிய இழப்பானது பாயிஸின் மறைவு - முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

புத்தளம் நகர முதல்வரும் முன்னாள் கால்நடை பிரதி அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாயிஸ் அவர்கள் துணிச்சல் மிக்க மிகவும் தைரியமான ஒருவர் என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லீம் சமூகம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற போதெல்லாம் அந்தந்த பிரச்சினைகளுக்கு தைரியமாக தலை நிமிர்ந்து தோள் கொடுத்த ஒரு தலைவர். 

 புத்தளம் மாவட்டத்திலே அம் மாவட்ட முஸ்லீம்கள் இன ரீதியான அடக்குமுறைகளுக்கு உட்படுத்த முனைந்த போதெல்லாம் அம்மாவட்டத்தினதும்,அரசினதும் தேசிய தலைமைகளுக்கு எதிராக புத்தளம் நகரையும்,முஸ்லீம்களையும் பாதுகாப்பதிலே மிகவும் அர்ப்பணிப்பாக செயற்பட்ட ஒருவர்.

மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் சேர் அவர்களோடு மற்றும் என்னோடு இணைந்து வடக்கிலே இருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்ட போது அம் முஸ்லீம்களுடைய மீள் குடியேற்றம் அவர்களுடைய வீடுகளை கட்டுதல் போன்ற விடயம் இன ரீதியான முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்து   மிக தைரியமாக துணிச்சலோடு செயற்பட்ட ஒருவர்.

நான் பல் தடவைகள் அப் பிரதேசங்களுக்கு போகின்ற போது இரவு பகலென்று பாராது அப் பிரதேசங்களுக்கு எம்மை ஏற்றிச் சென்று அம் மக்களின் துயர் துடைத்த ஒருவர். அவ்வாறான ஒரு நல்ல தலைமைத்துவத்தை நாம் இழந்து இருக்கின்றோம். 

பலஸ்தீன் விவகாரத்திலே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இடம்பெறும் போதெல்லாம் அதற்காக பல்வேறுபட்ட கட்டங்களில் குரல் கொடுத்த ஒருவர். அவரின் நல்ல பணிகளை அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டும். அவரின் கப்பரை சுவர்க்கப் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும். அவருடைய பாவங்களை இறைவன் மன்னிக்க வேண்டும் . அவரை இழந்து தவிக்கின்ற  அவரது குடும்பத்தவர்கள்,அவரது ஆதரவாளர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன். கொரோனா சூழ்நிலை காரணமாக அவரது ஜனாஸா நல்லடக்கத்திலே கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன் என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.



முஸ்லீம் சமூகத்திற்கு பாரிய இழப்பானது பாயிஸின் மறைவு - முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் முஸ்லீம் சமூகத்திற்கு பாரிய இழப்பானது பாயிஸின் மறைவு - முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் Reviewed by Editor on May 24, 2021 Rating: 5