(எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி) BA (Hons)
கொரோனா கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. உலகளவில் 30 லட்சம் மரணங்கள் எனும் அச்சத்திற்குரிய எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மீளும் வழியறியாது தவித்துக் கொண்டிருக்கிறது உலகம். ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் அந்த வைரஸின் தொடக்கம் பற்றி மட்டும் நம்மால் அறிய முடியவில்லை. எந்த ஒரு தொற்றுநோய்க்கும், அந்த நோய் எங்கு ஆரம்பித்தது என்ற மூலம் அறிந்த பின்னர் தான் வெற்றிகரமான தீர்வு என்பது கிடைக்கும். ஆனால், கோவிட் 19 வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா, இயற்கையாக உருவானதா என்ற அடிப்படை கேள்வி கூட இன்று வரை சர்ச்சைக்குள்ளாகி விவாதிக்கப்படுகிறது.
சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலில் இந்த வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இதே கொரோனா வைரஸ் வகையான சார்ஸ் நோய் தொற்று அதே பகுதியில் உள்ள வௌவால்களால் பரவியது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த வைரஸ் கூட அப்படி உருவாகியிருக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
வூஹானின் அரிய வகை உயிரினங்களின் மாமிச சந்தையில் இருந்த பலருக்கு மொத்தமாக இந்த வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டதால், இந்த சந்தையில் இருந்துதான் வைரஸ் உருவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் சீன அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு ஆய்வு செய்து அவ்விடத்தில் அதற்கான சான்றுகளே இல்லை என அறிவித்தது. வூஹான் நகரில்இருக்கும் வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைரஸ் பரிசோதனை கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. அதே சிறப்பு குழு, அதே சான்றுகள் இல்லை என்ற காரணத்தை சொல்லி அந்த சாத்தியக்கூறுகளையும் நிராகரித்தது.
அந்தவகையில், பல லட்சம் உயிர்களை பலிவாங்கி, உலகையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரு பெருந்தொற்று நோயினை பற்றி நாம் இன்னும் முழுதாக அறியவில்லை. தினம் உருமாற்றம் அடையும் வைரஸ் தொடங்கி, கருப்பு பூஞ்சை வரை நோய் பற்றிய முழு புரிதலே இன்னும் கிட்டிய பாடில்லை. நோய்க்கான காரணம் ஒன்றரை வருடங்கள் தாண்டியும் கேள்விக்குறியாக இருக்கிறது. இன்னும் நோய்த்தீர்க்கும் வழியும் ஐயமின்றி தெளிவுபடுத்தப்படவில்லை.
இலங்கையில் கடந்த காலங்களில் அதிகளவிலான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு கடந்த காலங்களில் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 14,455 படுக்கைகளின் எண்ணிக்கையை, மேலும் அதிகரிக்க கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் நாட்டு மக்களின் செயற்பாடுகள் காரணமாக கோவிட் 3 ஆவது அலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் பெருமளவிலான மக்கள் ஆடை, அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு பொருள் கொள்வனவிற்காக சுகாதார வழிமுறையை மீறி செயற்பட்டிருந்தனர். இந்த நிலையில், புத்தாண்டு முடிவடைந்ததன் பின்னர், இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருந்தது.
குறிப்பாக நாளொன்றில் 500 தொற்றாளர்கள் கூட அடையாளம் காணப்படாதிருந்த இலங்கையில், தற்போது 2900 த்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் நாளொன்றில் அடையாளம் காணப்படும் அளவிற்கு கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனைகளில் கோவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சை வழங்க போதிய இடவசதி காணப்படாத பின்னணியில், சில கோவிட் தொற்றாளர்கள் தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தன.
இவ்வாறான நிலையில், தற்போது மருத்துவமனைகளில் இடவசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் தற்போது கோவிட் வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதிகளவிலான கோவிட் தொற்றாளர்கள் பதிவாகும் இடங்கள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக நாட்டின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் போலீஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். அதேபோன்று, கோவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கும் பகுதிகள், அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகளை மாத்திரம் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று பெரும்பாலும் தலைநகர் உள்ளடங்களாக மேல் மாகாணத்திலேயே அதிகளவில் காணப்படுகின்றது,
இலங்கையில் இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரம் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 1178 மரணங்கள் பதிவாகியுள்ளன. தவிர, கொரோனா தொற்று அபாயத்திலிருந்து ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் மீண்டுள்னர். இலங்கையில் இதுவரையான காலம் வரை நாளொன்றில் பதிவான அதிகளவிலான கோவிட் தொற்றாளர்கள் நேற்று மே 23 ஆம் திகதி பதிவாகியிருந்தனர். நேற்றைய தினம் (23) புதிதாக 2959 கொரேனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2945 தொற்றாளர்கள் புது வருட கொத்தனியைச் சார்ந்தவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்சமயம், 34416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இம்மாதம் மே 20 கொரோனா வைரஸ் தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதுவரையில் இலங்கையின் கொரோனா நோய்த் தொற்றின் மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கை இதுவாகும் என கூறப்பட்டுள்ளது. இதுவே மே 7-ஆம் திகதி முதல் மே 20ஆம் திகதி ஒரே நாளில் பதிவான அதிகரித்து உயிரிழப்புகள் ஆகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 19 பேர் பெண்களும் 19 பேர் ஆண்களும் அடங்குவர்.
இதேவேளை, இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய நிறுவனங்கள், மதத் தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிள்ளன.
கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தவர்களின் எண்ணிக்கை மாத்திரமன்றி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவர்கள், தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, ஒட்சிசன் தேவையுடையோர் எண்ணிக்கை என்பன சடுதியாக அதிகரித்துள்ளன. கொழும்பு மாநகர எல்லைக்குள் எழுமாறான சோதனைகள் மூலம் கண்டறியப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அத்தோடு அறிகுறியற்ற மற்றும் தொற்று ஏற்பட்ட பின்னர் பாரதூரமான நிலைமை ஏற்படுவதையும் மருத்துவர்கள் அவதானித்துள்ளளர். தற்போதைய வைரஸ் விரைவாக தொற்றுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இளம் நோயாளர்கள் மத்தியில் பாரதூரமான அறிகுறிகளும் அவதானிக்கப்படுகின்றன. கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பிள்ளைகள் மத்தியில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிதுள்ளது. ஆய்வுகூட ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து, சடுதியாக தொற்றும் சாத்தியமுள்ள புதியதொரு உருமாறிய வைரஸ் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த வைரஸ் இலங்கையில் ஏற்கெனவே இருந்த உருமாறிய வைரஸில் இருந்து தோன்றியதாக அல்லது வேறொரு நாட்டில் இருந்து இலங்கைக்குள் புதிதாக வந்திருக்கக்கூடிய வைரஸா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இத்தகைய புதிய வைரஸ் பரவுவதன் சாத்தியம் காரணமாக, ஒவ்வொரு பிரஜையும் மூன்றாம் அலையின் விளைவுகளைப் புரிந்து கொள்வது முக்கியமானது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக உயர் ஓட்டம் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் நன்மைக் கருதி அத்தகைய அலகுகளை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது குறித்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்படும், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புதிய வைரஸ் சடுதியாக பரவக்கூடிய ஆற்றல்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்குமாயின், ஆகக்கூடுதலானோருக்கு தொற்று ஏற்படலாம். அதன் மூலம் பாரதூரமான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனைகள்; கையாள முடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்படக் கூடும். இது கூடுதலான மரணங்களுக்கு வழிவகுக்கும். உருமாறிய புதிய வைரஸ், வயது முதிர்ந்தவர்களை விடவும் இளவயதினரை கூடுதலாக பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, சகல பிரஜைகளும் கொவிட்-19 தொற்றும் அபாயத்தைத் தணிப்பதற்காக சாத்தியமான சகல பொதுச் சுகாதார நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக அனுசரிப்பது மிகவும் முக்கியமானது.
இதற்காக, முகக் கவசம் அணிவதும், ஒரு மீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளி பேணுவதும், அடிக்கடி கைகழுவுவதும் மிகவும் அத்தியாவசியமானவை. கூட்டமான ஸ்தானங்களில் இருந்து விலகியிருப்பது முக்கியமானது.
சகல பொதுச் சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அனுசரித்து, மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரமே வீட்டை விட்டு வெளியில் செல்வது சிறந்தது என்று இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சு, இத்தொற்று கட்டுப்பாடு தொடர்பில் எதிர்வரும் மே 31 வரை நடைமுறையில் இருக்கக்கூடிய விஷேட வழிகாட்டல்களை வெள்ளியன்று வெளியிட்டிருக்கின்றது. அதன்படி. பிரத்தியேக வகுப்புகள், விருந்துபசார நிகழ்வுகள், பொது மக்கள் ஒன்றுகூடல்கள், களியாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், கடற்கரை விருந்துபசாரங்கள் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உல்லாச விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய சேவைகளைத் தவிர வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு திருமண வைபவங்களில் உச்ச பட்சம் 150 விருந்தினருக்கும், பொதுப் போக்குவரத்து பஸ், ரயில்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிக்கவும், கார், முச்சக்கர வண்டிகளில் உச்ச பட்சம் இருவர் பயணிக்கவும், மத தலங்களில் 50 பேருக்கும், மரண வீட்டில் உச்ச பட்சம் ஒரே தடவையில் 25 பேருக்கும் என்றபடிபல்வேறு விடயங்கள் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கைதிகளைப் பார்வையிடுவதற்கான அனுமதியை அடுத்துவரும் இரு வாரங்களுக்கு இடை நிறுத்தியுள்ளது.
ஆகவே தற்போதைய சூழலில் கொவிட் 19 தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை ஒவ்வொருவரும் உச்சளவில் கடைபிடித்தொழுக வேண்டும். அதன் ஊடாக இத்தொற்றின் பரவுதல் தொடரை துண்டிப்பதற்கு பங்களிக்க முடியும். அதுவே இன்றைய அவசரத் தேவையாகும்.
Reviewed by Editor
on
May 24, 2021
Rating:
