( ஏ.எல்.றமீஸ் )
முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களை மறந்து சகிப்புத் தன்மையுடன் இன ஒற்றுமைக்காக விட்டுக் கொடுப்புகளை செய்தாலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் போன்ற தமிழ் அரசியல் வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
நேற்று (05) புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் 30 ஆண்டு காலமாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.
கல்முனையில் இருக்கின்ற பிராந்திய சுகாதார பணிமனை முஸ்லிம்களுக்கு மாத்திரம் சேவை செய்யும் நிலையமல்ல, மாறாக இங்கு தமிழ் பேசும் மக்களுக்கான சேவை நடைபெறுகிறது. இதன் பணிப்பாளராக ஒரு தமிழ் சகோதரர் கடமையாற்றுகின்றார்.
இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற ஒரேயொரு வர்த்தக கேந்திர நிலையம் கல்முனையாகும். தமிழர்களுக்கு என்று மட்டக்களப்பு வவுணியா யாழ்ப்பாணம் என்று பல நகரங்கள் இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களுடைய ஒரு சொற்ப நிலத்தை நீங்கள் அபகரிக்க எத்தனிப்பது உங்களுடைய பாசிசத்தை தெட்ட தெளிவாக்கியுள்ளது.
எனவே உங்களது குறுகியகால சிந்தனைகளையும் இனவாதத்தையும் கைவிட வேண்டும். சாணக்கியன் ஒரு சிறந்த அரசியல் வாதி என்ற நன்நோக்கில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான சாத்வீக போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.அது தவறு என்று இப்போது வருந்துகிறேன்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக எமது கட்சி தலைவரோடும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹரீஸ் அவர்களோடும் பேசி தீர்வுகளை பெறுவதற்கு தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவித்தார்.

Reviewed by Editor
on
May 06, 2021
Rating: