இன, மத புரிந்துணர்வுக்கு பல்லின பாடசாலைகளே சிறந்த தீர்வு!

(என்.முகம்மது சப்னாஸ்)

இன்றைய சூழலில் பன்மைத்துவம், மதங்களுக்கு இடையிலான பல்லினத்தன்மை பற்றி அதிகமாக பேசப்படுகின்றது. எனினும் வெறுமனே பேசுவதை விடுத்து குறித்த பன்மைத்தன்மையை  அங்கீகரிப்பதற்கான மனப்பான்மையை இனங்களுக்கு இடையே ஏற்படுத்த தேவையான செயற்றிட்டங்கள் உருவாக்கப்படுவதே மிக முக்கியமாகும்.

சமய, கலாச்சார, மொழி வேறுபாடு ஆரம்பமாகும் ஆதி இடம் பாடசாலையாகும். இலங்கையின் கல்விக் கொள்கையின்படி மாணவர்கள் மொழி, மதம், கலாச்சாரம் சார்ந்து அவர்களின் சிறு பராயத்திலேயே வேறுபடுத்தப் படுகின்றனர். இதுவே பின்னாளில் மாணவர்கள் பிற இன, சமயங்களை வேறு கண் கொண்டு பார்க்க வழிசமைக்கிறது.

பொத்துவில் மெதடிஸ்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும்  மனோஜ் டிரோன் நிர்ஷன் எனும் மாணவர் இது பற்றிக் கூறுகையில்,  நான் தரம் 13 வரை எனது மதம் சார்ந்த பாடசாலையிலேயே கல்வி பயின்று வருகிறேன். எனக்கு இதுவரை எனது மதம் தவிர்ந்த வேறு நண்பர்கள் இல்லை. எனக்கு அவர்கள் கொண்டாடும் விழாக்கள் மற்றும் அவர்களது கலாச்சார விழுமியங்கள் பற்றிய எது வித முன்னறிவும் இல்லை. ஆனால் அவர்களுடன் ஒன்றாக பழக வாய்ப்பு கிடைத்தால் அவர்களைப் பற்றி அறிய ஒரு  வாய்ப்பு கிடைக்கும். ஆனால் எனக்கு இந்த 13 வருடத்தில் அவ்வாறான ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை" என்றார். இலங்கையின் பெரும்பாலான அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களிடம் கேட்டால் அவர்களது ஆதங்கமும் இதுவாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை்

இதனை மாற்ற ஒரு சிறந்த வழியாக அனைத்து இன மக்களும் இன, மத, மொழி பாகுபாடின்றி ஒன்று கூடுவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவது அவசியமாகும்.  இதற்கு பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பை உதாரணமாக குறிப்பிடலாம்.

 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கூறுகையில் " பொதுவாக பல்கலைக்கழகமானது பாடசாலைகளை போலல்லாது பல் இன, மத, மொழி பேசுகின்ற மாணவர்கள் இணைந்து காணப்படுகின்றனர். ஏனெனில் இங்கு பல இடங்களிலிருந்து பல  வாழ்க்கை பின்னணிகளையுடைய, பல்வேறு மொழி பேசுகின்ற, ஒரே மொழியை கூட பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபாடான வழக்கங்களில் பேசுகின்ற மாணவர்கள் ஒரே இடத்தில் கல்வி கற்கக் கூடிய, சாப்பிடக்கூடிய, தூங்கக்கூடிய , கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் பல்கலைக்கழகங்கள் பன்மைத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு நல்ல களமாகும்  என குறிப்பிட்டார்.

ஆனால் இதில் உள்ள பெரிய சவால், பல்கலைக்கழகங்களில் பன்மைத்துவம் கட்டியெழுப்பப்படுகின்றதா?என்பதாகும். சில பல்கலைக்கழகங்களில் இது  வெற்றியளித்தாலும் சில பல்கலைக்கழகங்களில் இது தோல்வியடைந்த விடயமாகவே உள்ளது.

" எமது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் கூட கடந்த காலங்களில், பெரும்பான்மை இன மாணவர்கள் தங்கள் விழாக்களை, நிகழ்வுகளை பல்கலைக்கழகத்திற்கு வெளியில் தங்கள் இன மக்கள் வாழும் பிரதேசங்களில் நடத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இவர்களில்  சிங்களம், முஸ்லிம், இந்து போன்ற எவ் இனத்தவர்களும் தங்கள் நிகழ்வுகளை பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரின் முன்னிலையிலும் நடத்த ஆயத்தமாக இருக்கவில்லை. இதனால் பன்மைத்துவத்திற்கு எதிரான சிந்தனையே அங்கு வளர்ந்ததை காணக்கூடியதாக இருந்தது.

தமது வட்டத்திற்குள் மாத்திரம் சுருங்கி வாழும் கலாசாரம் பல்கலைக்கழகங்களில் தொடர்வது நாட்டின் பன்மைத்துவத்திற்கு சவாலான செயற்பாடாகும்.

பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணம் சிறு பராயத்திலிருந்தே பாடசாலையில் கிடைத்த அனுபவமாகும். பல்கலைக்கழகங்களை பார்க்கிலும் பாடசாலைகளிலேயே பன்மைத்துவ  சூழல் கட்டியெழுப்பப்பட வேண்டும். பாடசாலைகளில் மும் மொழி மூலமாகவும் கற்பதற்கான வசதிகள் ஏற்பட வேண்டும். இதற்கு மாறாக முஸ்லீம் , இந்து , சிங்கள, கிறிஸ்துவ பாடசாலைகள்  என மத ரீதியான பாகுபாட்டின் அடிப்படையிலான பாடசாலை முறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை" என்றும் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் குறிப்பிடுகிறார் .

எமது நாட்டு மக்களிடையே இன, மத, கலாசார ரீதியில் பிரச்சினைகள் ஏற்படக் காரணமே புரிந்துணர்வு இன்மையாகும். இப் புரிந்துணர்வை புத்தகங்களில் வாசித்து பெற்றுக் கொள்ள முடியும் என எண்ணுவது மடைமையாகும். இரண்டு மதத்தவர்களிடையே, இரண்டு மொழி பேசுபவர்களிடயே புரிதல் ஏற்பட வேண்டின் அவ்விருவரும் ஒன்றாக இருப்பதற்கான,  ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாக வேண்டும். 

இந்த அடிப்படியில் மூவினமும் கல்வி கற்கக்கூடிய பாடசாலையான கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி பயின்ற  அபூ சாஹிர் முஹம்மத் அஸீம் என்னும் மாணவன் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்  "எங்களது பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. இது கிறிஸ்தவ, தமிழ், சிங்களம், முஸ்லிம் அனைத்து இன மாணவர்களும் ஒன்றாக கல்வி பயிலும் பாடசாலையாகும். இதனால் எங்களுக்கு மொழி ஒரு பிரச்சினையாக இல்லை. மும் மொழிகளையும் சரளமாக பேச முடிகிறது. 

இங்கு நான்கு சமூக மக்கள் ஒன்றாக கல்வி பயில்வதால் அவர்களின் விழாக்கள், கலாச்சாரம், மதம் தொடர்பான அறிவையும் மற்றும் அவர்களது மத குருமாருடன் தொடர்பாடும் விதத்தினையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் அவர்களுக்கும் எங்களுக்கும் சிறப்பான நட்பு கட்டியெழுப்பப்படுகிறது. 

இப் பாடசாலையில் இருந்து பெற்றுக் கொண்ட அனுபவமானது நாட்டின் எந்த இடத்துக்குச் சென்ற போதிலும் மாற்று இனத்தவர்களுடன் தொடர்பாடக் கூடிய, நட்பு கொள்ள கூடிய அறிவை, அனுபவத்தை பெற்றுத் தந்துள்ளது. சென்ற காலங்களில் முஸ்லிம்கள் சார்ந்த பிரைச்சினைகள் வரும் போதும் என்னுடன் கற்ற எனது அன்பு நண்பர்கள் என்னை அழைத்து நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் , உங்களுக்கு ஏதும் பிரச்சினையா என நலம் விசாரிப்பார்கள்.  

அவர்களது விழாக்களில் நானும் அவர்களது கலாசார ஆடைகளை அணிந்து அவர்களைப் போல் கலந்து கொண்டு அவர்களின் வீடுகளில் உணவு உண்டு அவர்களது குடும்பத்துடன் நெருங்கிய உறவினர் போல் பழகுவேன். அவர்களும் எமது விழாக்களில் கலந்து கொள்வர். எங்களுக்குள் எது வித வேறுபடும் இன்றி பேசி பழகுவோம். எங்களுக்கு ஏதும் இன ரீதியான பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் குரல் கொடுப்பார்கள். அவர்களுக்கு ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டால் நாங்கள் அவர்களுக்காக குரல் கொடுப்போம்.நாங்கள் எல்லோரும் ஒரு பாடசாலையில் கல்வி கற்றதனால் தான் இவ்வாறு ஒருவரை ஒருவர் புரிந்து நட்புறவு பேண முடிகிறது". என தெரிவித்தார். 

ஆகவே பல்லின மாணவர்களும் ஒரு சேர கற்கின்ற பாடசாலைகள் அதிகரித்தால் தான் மாணவர்கள் மாற்று இன மக்களுடன் பழக, பேச  வாய்ப்பு கிடைக்கும். இவ் வாய்ப்பினை பெற்றுத் தரும் களமாக பாடசாலையை மற்ற முடியும். இன்று வரை பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் வயது,பால், ஏழை பணக்காரன், உயர்ந்தவர் தாழ்ந்தவர், மேதை பேதை போன்ற எவ்வித வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ளாது ஒற்றுமையாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் தமிழர், சிங்களவர், முஸ்லீம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடும் இல்லாது ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக வாழ வசதியளிக்கும் இடமாக பாடசாலைகளை நாம் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறான நிலைக்கு பாடசாலைகள் மாற்றப்படுமானால் அனைத்து மதத்தவர்களையும் மரியாதை செய்யுமாறு பாடசாலையின் செயற்பாடுகள் ஒழுங்கு படுத்தப்படுமானால்,  அனைத்து மதத்தவர்களிற்குரிய விசேட தினம்களும் பாடசாலையில் கொண்டாடப்படுமானால் மாணவர்களிடம் மாற்று மதத்தவர் பற்றிய நல்லபிப்பிராயம் உருவாகும்.

எனினும் இதனை சாத்தியமாக்குவது சவால்கள் நிறைந்தது. ஒரே இரவில் இதனை சாதிக்கவும் முடியாது. இது குறித்து ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உதுமா லெப்பை முஹம்மது ஹாசிம் குறிப்பிடுகையில்,  "இலங்கை போன்ற பல்லின சமூகம் வாழுகின்ற நாடுகளிலே நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் அது அடிமட்டமாகிய பாடசாலை மாணவர்கள் மத்தியில் இருந்து ஏற்படுத்தப்பட வேண்டும். 

அந்த அடிப்படையில் இன்று சமய, சமூக, இன ரீதியாக பிரிந்திருக்கின்ற பாடசாலை ஏதோ ஒரு குடையின் கீழ் எல்லா மாணவர்களும் பல்லினத்தவர்களுடன் கற்கின்ற ஒரு பாடசாலை எதிர்காலத்திலே அமைந்தால் அது நாட்டிற்கு சாதகமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.  எமது நாட்டை அமைவு ரீதியாகப் பார்க்கும் போது தமிழ் மாணவர்கள் வேறாகவும், முஸ்லிம் மாணவர்கள் வேறாகவும், சிங்கள மாணவர்கள் வேறாகவும் இருக்கின்றபடியினால் இவ்வாறான மாணவர்களை ஒரே இடத்திலே அமர்த்தி இக்கலைத் திட்டத்தினை அமுல்படுத்துவது என்பது மிகவும் பாரதூரமான ஒரு சவாலாகும். அதே வேளையில் இம் மாணவர்கள் பல சமூக, சமய பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். 

வெவ்வேறு சமய ரீதியான பின்னணியைக் கொண்ட இம் மாணவர்கள் ஒரே பாடசாலையில் கற்கின்ற போது அங்கு சமய விழுமியங்களை கைக்கொள்கின்ற ஒரு பொதுவான அமைப்பு வேறு ஒரு சவாலாக அமையும். ஆகவே, அதற்கேற்ப செயற்றிட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். அதே போல் மாணவர்களுக்கிடையே மொழி வேறுபடுகின்ற போது கல்விச் செயற்பாடுகளை எந்த மொழியில் மேற்கொள்வது எனும் குழப்ப நிலை உருவாகும். அந்த வகையில் பெரும்பாலும் நாம் ஆங்கில மொழியையே சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற அடிப்படையில்  இணைப்பு மொழியாகவும் போதனா மொழியாகவும் கொண்டு கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.இதற்காக நடைமுறைச் சாத்தியமான விடயங்களை எதிர்காலத்தில் கைக்கொள்ள வேண்டும்.

முன்னொரு காலத்தில் அவ்வாறான நிலை காணப்பட்டது. அக்கரைப்பற்றிலும் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் இருந்தன. அதிலே அந்த பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம், தமிழ், சிங்களம் ஆகிய மாணவர்கள் ஒன்றாக கற்ற வரலாறுகள், அனுபவங்கள் நம் முன் உள்ளன. பின்னால் வந்த அரசியல், ஏனைய விடயங்கள் அடிப்படையிலேயே இன்றைய பாடசாலைகளும் சமூகங்களும் பிரிந்துள்ளன.

இந்நிலை எதிர்கால பன்மைத்துவ இலங்கைக்கு பொருத்தமானதல்ல. எதிர்காலத்தில் எல்லா சமூக மாணவர்களும் ஒன்றாக கற்கக்கூடிய பாடசாலைகளை உருவாக்குவதே இதற்கு தீர்வு என நம்புகிறேன்" என்றார்.

இன்று கல்வி அமைச்சின் கீழ் 10122 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் வெறும் 113  பாடசாலைகள் மாத்திரமே மும் மொழிப் பாடசாலைகளாகும். ஏனைய பாடசாலைகள் அங்கு கற்கும் மாணவர்களின் தாய் மொழியிலேயே இயங்குகின்றன (தகவல்: வழிகாட்டல் புத்தகம், ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பு ) இந்நிலை மாற்றப்பட வேண்டும். எமது நாட்டில் உள்ள பெரும் பான்மையான  பாடசாலைகளை மும் மொழிப் பாடசாலையாக மாற்ற வேண்டும்.  இதன் வாயிலாக வெவ்வேறு மொழியை பேசுகின்ற, வெவ்வேறு மத நம்பிக்கையினை கொண்ட மாணவர்கள் ஒன்றாக வாழ, ஏனைய மதத்தவரை புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகாரிக்கின்றன. இதனால் எதிர் காலத்தில் ஏற்படும் புரிந்துணர்வின்மைகளை, வன்முறைகளை கணிசமாக குறைக்க முடியும்.

நாட்டிலுள்ள மக்கள் ஒற்றுமையாக இருப்பார்களானால் அது தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும். அது தேசத்தின்  வளர்ச்சிக்கு, அபிவிருத்திக்கு வழிகோலும்.எனவே எமது பன்மைத்துவமிக்க அழகிய இலங்கைத் தீவின் எதிர்கால சுபீட்சத்திற்கான மாற்றத்தை பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிப்போம்.



இன, மத புரிந்துணர்வுக்கு பல்லின பாடசாலைகளே சிறந்த தீர்வு! இன, மத புரிந்துணர்வுக்கு பல்லின பாடசாலைகளே சிறந்த தீர்வு! Reviewed by Editor on May 15, 2021 Rating: 5