பாடம் கற்று பட்டுத்தான் திருந்த வேண்டுமா?

               


முதன் முதலில் சீனாவில் கொரோனா தாண்டவம் ஆடிய போது, அது அவர்களின் உணவுப்பழக்கத்தினால் வந்த வினை என்று சொன்னோம். அசட்டையாக இருந்தோம். இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மரணங்களை பார்த்த போது அங்கு வயதானவர்கள் அதிகம் அவர்களை பராமரிக்க ஆட்கள் இல்லை அதனால் தான் அங்கே அதிக இறப்புகள் என்று சொல்லி மருந்து மாபியாவை குற்றம் சுமத்தினோம்.
இப்படி அமெரிக்காவுக்கு ஒரு காரணம் பிரேசிலுக்கு இன்னும் ஒரு காரணம் என்று காரணங்களை கண்டறிவதிலே தான் நாங்கள் காலங்களை கடத்துகிறோமே அன்றி பாடங்களை படித்ததாக தெரியவில்லை. அது போலத்தான் இப்போதும் இந்தியாவிற்கும் ஏதாவது ஒரு காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறோம்.
மிக வேகமாக பரவக்கூடிய, இலகுவில் உருமாற்றம் பெறும் தன்மை கொண்ட, வைரஸ் பெருந்தொற்று ஒன்று கட்டுக்கடங்காமல் எல்லைமீறிச் செல்லும் போது என்னவெல்லாம் நடைபெறும் என்பதற்கு தற்போதய 'டிஜிட்டல்' இந்தியா கெட்டதொரு முன் உதாரணமாக மாறி இருக்கிறது.
வைரஸ் பண்டமீக் ஒன்றின் போது உருவாகக்கூடிய எண்ணிலடக்க முடியாத நோய்த் தொற்றாளர்களை தேடிக் கண்டு பிடிக்க பார்த்துக்கொள்ள, பராமரிக்க, சிகிச்சை செய்ய போதிய வசதிகளை பெற்றுக் கொள்ள முடியாத, அடிப்படை சுகாதார கட்டுமானங்களுக்கே நாக்கு வழிக்கின்ற நிலையில் உள்ள, வளர்ந்து வரும் நாடுகளில் கொரோனாவின் கோரத் தாண்டவம் எப்படி இருக்கும் என்பதற்கும் இந்தியாவின் இந்தச் சீரழிவு கெட்டதொரு எடுத்துக்காட்டு.
வளர்ந்த, செல்வந்த, சிஸ்டம் சரியாகவுள்ள நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, பிரித்தானியா போன்றவைகளே ஒரு கட்டத்தில் கொரோனாவால் தடுமாறிய நிலையில் நமது நாடுகள் எல்லாம் எம்மாத்திரம்? ஒழுங்கான திட்டமிடலும், அடிப்படை சுகாதார கட்டமைப்பும், விஞ்ஞான அடிப்படையிலான முடிவுகளும் இல்லாத ஒரு நாட்டில், ஒரு பெருந் தொற்றுக் காலத்தில், கொத்து கொத்தாக உயிரிழந்து வருவோருக்கு, இறுதி மரியாதையைக்கூட ஒழுங்காக செய்து கொள்ள முடியாமல் தடுமாறுவதை தவிர வேறு ஒன்றும் அந்த நாட்டால் செய்ய முடியாது என்பதை கூடவா இன்னும் நம்மால் விளங்க முடியவில்லை?
உள்ளே, வோர்ட்டிலே கட்டிலில் இருப்பவன் மண்டையை போட்டால், வெளியே உள்ள எனது அண்ணனுக்கு வைத்தியசாலை கட்டில் ஒன்று கிடைக்குமே என்று நப்பாசை கொள்வதை தவிர வேறு ஒன்றும் அங்கே செய்ய முடியாது என்பதை ஏன் இன்னும் நாங்கள் விளங்கவில்லை?
வென்டிலேட்டரின் இருப்பவன் இறந்து விட்டால் என் அப்பாவுக்கு வென்டிலேட்டர் கிடைக்கும், அவர் உயிர் பிழைத்து விடுவார் என்று ஆசைப்படுவதை வேறு எதையும் அந்த மக்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாது என்பது தான் நிஜம்.
இறப்பவர்களாவது கொஞ்சமாவது மூச்சு எடுக்க சிரமம் இல்லாமல் இருக்க ஒட்சிசன் கொடுக்க முடியாத ஒரு தேசத்தில் எப்படி வென்டிலேட்டரை , ஐஸியூ பெட்டை, எக்மோவை எல்லாம் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும் என்பது கூடவா இன்னும் நம் மக்களுக்கு புரியவில்லை.
நாங்கள் இதுவரை கொரோனா என்று கண்டவைகள் யானையின் வெறும் வயிற்றுப்பகுதி மாத்திரமே. முழு யானையும் அதன் தும்பிக்கையும் எப்படி இருக்கும் என்ற பிக் பிக்ச்சரைதான் இப்போது இந்தியாவில் காட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா. கண் முன்னே நடக்கும் மனிதப் பேரவலம் ஒன்றை இன்னும் விளங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு வரவில்லை என்றால், பிக் பிக்சரை விளங்கும் புத்தி இன்னும் வளரவில்லை என்றால், நாமும் பட்டால் தான் திருந்துவோம் என்றால், பட்டுத் திருந்தும் அந்தக் காலம் நமக்கு வெகு தொலைவில் இல்லை என்பது தான் தற்போதைய நிலை என்பதை புரிந்து கொள்வோம். அவதானமாக இருப்போம். சுகாதார வழி முறைகளை பேணுவோம்.

பிற் குறிப்பு- வைத்தியர்களின் தனிப்பட்ட தரவுகளை, வைத்தியர்களின் குழுமங்களில் நடைபெறுகின்ற உரையாடலை அவதானிக்கின்ற போது நமது நாட்டின் நிலமையும் தற்போதைய நிலையில் அவ்வளவு நல்லதாக இல்லை என்பது தான் உண்மை.


டாக்டர் பி.எம்.அர்ஸாத் அஹமட் (MBBS MD PAED)
குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை
அக்கரைப்பற்று.

பாடம் கற்று பட்டுத்தான் திருந்த வேண்டுமா? பாடம் கற்று பட்டுத்தான் திருந்த வேண்டுமா? Reviewed by Editor on May 02, 2021 Rating: 5