(றிஸ்வான் சாலிஹு)
நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையானது தீவிரமாய் பரவி வரும் நிலையில், அதனை அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கட்டுப்படுத்தும் முனைப்புடனான பிரதேச மட்ட Covid 19 செயலணியின் குழுக்கூட்டமானது இன்று (30) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கௌரவ மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஜனாப். எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இராணுவ உயர் அதிகாரி,வர்த்தக சங்க பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச மக்களின் அன்றாட அடிப்படை அத்தியாவசிய சேவைகளை மக்களின் காலடிக்கு நடமாடும் வாகன சேவைகள் ஊடாக உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும், இவ்விடயங்கள் சீராக நடைபெறுவதை கண்காணிக்க குழுக்கள் நியமித்தல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேச சுகாதாரப் பிரிவில் அண்மைகாலத்தில் ஒரு சில கோவிட் 19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள சூழலில், இத்தொற்றின் பரவலை தவிர்க்கும் முகமாக தொடர்ந்தும் இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து இங்கு ஆராயப்பட்டது.
அத்தியாவசிய தேவைகள்,தகுந்த காரணங்கள் இன்றி வீணான முறையில் பிரதேசத்தின் சுகாதார பாதுகாப்பு ஒழுங்கில் கரிசனை செலுத்தாது உலாவித் திரியும் இளைஞர்கள், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நலனை கருத்திற் கொண்டு சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு மாநகர முதல்வர் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றார்.
