உலகை ஆட்டிப்படைக்கும் பெருந்தொற்றில் இருந்து உலக மக்கள் மீட்சி பெறவும், உலகம் தழுவிய ரீதியில் இன்னல்களை சந்திக்கும் முஸ்லிம் உம்மாவின் விடிவிற்காகவும் இப்புனித நாளில் பிரார்த்திப்பதாக அக்கரைப்பற்று மாநகர சபையின் கௌரவ முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தனது "ஈதுல் பித்ர்" நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கௌரவ முதல்வரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பெரு நன்மையும், பேரன்பும் பொருந்திய சங்கை மிகு ரமழான் எம்மிடம் இருந்து விடைபெற்று "ஈதுல் பித்ர்" பெருநாள் எனும் பேருவகை தினத்தில் இருக்கின்றோம்.
ஏக இறைவனின் வாக்கினை ஏற்று, முப்பது நாள் நோன்பு நோற்று, ஷவ்வால் பிறையின் பூரிப்பில் நாம் அனைவரும் ஈகையின் இன்பத்தை கொண்டாட விரும்பினாலும் சர்வதேசம் தழுவிய கொரோனா பெரும் தொற்று மற்றும் உலக முஸ்லிம்கள் மீதான ஏகாதிபத்திய நாடுகளின் அடக்குமுறை என்பன இத்தருணத்தில் மனதை காயப்படுத்தும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, பலஸ்தீன்-காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் மிலேச்சத்தனமான தாக்குதல், நமது முதல் கிப்லா அல் அக்சா பள்ளிவாசலில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஈமானிய உறவுகள் மீதான வன்முறைகள் நாம் இலகுவாக கடந்து செல்லும் விடயங்கள் இல்லை.
சாந்தி,சமாதானம், ஐக்கியத்தை நேசிக்கும் முஸ்லிம் உம்மத் ஆகிய நாம் இப்புனித நாளில் உலக அமைதிக்காய் எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்வோம்.
மேலும், கொரோனா கொடும் தொற்று அபாயத்தில் இருந்து நமது நாடு விரைவாக மீள, அரசாங்கம் மற்றும் சுகாதார தரப்பினருக்கு பொதுமக்கள் அனைவரும் பாரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மலர்ந்திருக்கும் ஈகைப் பெருநாள் எனும் இந்த மேன்மை மிகு நாளில் எமது உள்ளங்களில்- இல்லங்களில் நிம்மதியான,நிலைபேறான அமைதியை, சுபீட்சத்தை,சௌஜன்யத்தை, சௌபாக்கியத்தை வேண்டி மீண்டும் மீண்டும் எல்லாம் வல்ல இறைவனை துதிப்போமாக.
(முதல்வரின் ஊடகப் பிரிவு)
Reviewed by Editor
on
May 12, 2021
Rating:
