(எஸ்.எம்.அறூஸ்)
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் திடீரென அதிகரித்து வருகின்ற நிலையில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (06) வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் சாபீர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எ.எல்.அமானுல்லா, அக்கறைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல், சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.சலீம், அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி ஜூனைதீன்,கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
இங்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்தல், மற்றும் கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் மத்தியில் முன்னெடுக்கும் விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு அரசாங்கத்தினதும், சுகாதாரத்துறையினரதும் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்றவும், பெறுமதிமிக்க மனித உயிர்களைப் பாதுகாப்பதற்காகவும் சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் சாபீர் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.
Reviewed by Editor
on
May 07, 2021
Rating:


