தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளராக இருந்த இனிய நண்பர் முஹம்மது யூசுப் சுகவீனமுற்று சென்னை,மண்ணடி மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான செய்தியறிந்து, அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ரவூப் ஹக்கீம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்ததாவது,
மறைந்த நண்பர் யூசுப், அதன் தலைவர் அன்புத் தோழர் தொல்.திருமாவளவனின் வலது கரமாகச் செயற்பட்டவர்.
அன்னாருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினராலும்,ஏனையோராலும் கட்சித் தலைமையகம் அம்பேத்கரில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டதோடு, ஜனாஸா சாலி கிராமத்தில் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதையும் அறிந்தேன்.
எங்கள் கனிஷ்ட புதல்வியின் திருமண நிகழ்வில் தோழர் தொல்.திருமாவளவன் சார்பிலும், தனிப்பட்ட விதத்திலும், மறைந்த நண்பர் முஹம்மது யூசுப்,அவரது கட்சியை சேர்ந்த இள நண்பர் ஆளுர் ஷா நவாஸ் மற்றும் ஏனைய கட்சிகளையும் சேர்ந்த தமிழக , கேரள அரசியல்,சமூக முக்கியஸ்தர்கள் சகிதம் நேரில் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததையும் இந்த துக்ககரமான சந்தர்ப்பத்தில் நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றேன்.
ஆழமான இறை நம்பிக்கை மிக்கவராக இருந்த அன்னாருக்கு அல்லாஹ் மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வை அருள்வதோடு, அவரது பிரிவினால் துயருற்றிக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் அளிப்பானாக என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
