
தமிழகத்தில் 16-வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 6 ஏப்ரல் 2021 அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் பின்னர் இன்று (02) காலை ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கவுள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத இத்தேர்தலில் முதன்முறையாக திமுக கூட்டணி சார்பில் ஸ்டாலின் அவர்களும் அதிமுக கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்களும் முதல்வர் வேட்பாளர்களாக மக்களை சந்தித்தனர். பெரும்பான்மையான தமிழக மக்கள் வழங்கியுள்ள ஜனநாயக முடிவின் படி தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு முதல்வரின் வாரிசும் தமிழக முதலமைச்சராகவில்லை என்ற வரலாற்றினை மாற்றியமைத்து தமிழக முதலமைச்சராக அரியணை ஏறுகிறார் திரு மு.க.ஸ்டாலின்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டினை கொண்டுள்ள ஒரு கட்சியினை பெரும்பான்மை தமிழக மக்கள் ஆதரித்து ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்துள்ள திமுக கூட்டணி அரசிற்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினிற்கும் எனது வாழ்த்துக்கள். இலங்கைவாழ் தமிழ் மக்கள் மற்றும் உலகவாழ் தமிழ் மக்களின் கருத்தியலுக்கு இணங்க மத்தியில் ஆளும் தேசிய கட்சியின் ஆதிக்கம் இல்லாத ஒரு மாநிலக்கட்சி அரசமைப்பது வரவேற்கத்தக்கது
மேலும் 2009இல் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட்ட ஈழம் தொடர்பான கலங்கத்தினை நிவர்த்திசெய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிதாக அரியணை ஏறும் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் இதனை மனதில் கொண்டு இலங்கைவாழ் தமிழ் மற்றும் முஸல்லிம் மக்களுக்கு எதிராக நடைபெறும் சிறுபான்மை இன அடக்குமுறைகளை கண்டித்து நிரந்தர தீர்வினை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தர உறுதியான ஆதரவு வழங்குவார் என்று நம்புகிறேன்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழக மக்களின் உடன்பிறப்புகள். ஆகவே புதிதாக அமையவுள்ள இவ்வரசு இலங்கை வாழ் தமிழ் மக்களையும் கவனத்திற்கொண்டு தீர்வுகளை பெற்றுத்தரும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன் மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடக்கவிருக்கும் இந்த ஆட்சி தமிழக மக்களுக்கு மட்டுமின்றி இலங்கைவாழ் தமிழர்களுக்கும் நன்மை பயக்குமாறு அமைய வேண்டும்.
அந்த நம்பிக்கையுடன் திமுக கூட்டணி ஆட்சிக்கும் முதல்வர் திரு மு.க ஸ்டாலினிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
May 02, 2021
Rating: