(றிஸ்வான் சாலிஹூ)
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் எண்ணத்தில் உருவான நாடளாவிய ரீதியில் ஆயிரம் தேசிய பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் தேசிய பாடசாலை அங்குர்ப்பன நிகழ்வையொட்டிய ஆரம்ப வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியுமான (விசேட தரம்) இஸட்.தாஜூடீன் அவர்கள் சனிக்கிழமை (12) மாலை திடீர் விஜயமொன்றினை பாடசாலைக்கு மேற்கொண்டிருந்தார்.
பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு வருகை தந்த கல்வி அமைச்சின் உயரதிகாரி அவர்களை அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.றிபாயுடீன் அவர்கள் வரவேற்று, பாடசாலை பழைய மாணவ சங்கத்தினால் (2021-2022) அன்பளிப்பாக பொருத்தப்பட்டுள்ள தேசிய பாடசாலை பெயர்ப்பலகை மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிதியால் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசியமை இன்னும் பல முடிவுற்றுள்ள வேலைத்திட்டங்களை பார்வையிட்டதோடு ஏனைய வேலைகளை உடனடியாக செய்து முடிக்கும் படியும் அவர் அதிபரை வேண்டிக்கொண்டார்.
பாடசாலை அதிபர் எஸ்.றிபாயுடீன், பிரதி அதிபர் எம்.எல்.எம்.றிபாஸ், அஸ்-ஸிறாஜ் ஜுனியர் கல்லூரி அதிபர் எஸ்.றினோஸ்டீன், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் ஆசிரியர் ஏ.ரீ.நகீல், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தொழிலதிபர் எம்.ஏ.எம்.பாயிஸ் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
