(றிஸ்வான் சாலிஹு)
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியுமான அக்கரைப்பற்றைச் சேர்ந்த இஸட்.தாஜூடீன் அவர்கள், அரச சேவை ஆணைக்குழுவின் இலங்கை கல்வி நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு 2021.01.01ஆம் திகதியிலிருந்து பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவருடைய இந்த பதவியுயர்வு சிறுபான்மை இனத்தவர் ஒருவருக்கு கிடைத்த முதலாவது பதவியுயர்வாகும்.
யாழ்.பல்கலைக்கழக வர்த்தக பட்டதாரியான இவர், அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கொரவப்பொத்தான பிரதேச "பத்தாவேவ முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், அதிபராகவும் சிறிது காலம் சேவையாற்றி பின்னர் 1988.09.01ஆம் திகதி இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு கல்வி அமைச்சில் பல பதவிகளை வகித்தார். மும்மொழி ஆற்றலும், அதில் சரளமாக தன்னுடைய பணியை திறம்படவும் செய்தவராவார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 33 வருட கால அனுபவத்தை கொண்ட இவர், கல்வி அமைச்சினூடாக அமெரிக்கா, லண்டன், ஜப்பான், அவுஸ்திரேலியா, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, துருக்கி, தாய்லாந்து, சீனா, நோர்வே, மலேஷியா, இந்தியா, சிங்கப்பூர், கம்போடியா உட்பட 28 நாடுகளுக்கு சென்றுள்ளார்.
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் நீர்கொழும்பு பெரிய முல்லை அல்- ஹிலால் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், தனது MBA பட்டத்தை East London பல்கலைக்கழகத்திலும், M.Phil பட்டத்தை அமெரிக்காவிலும் பூர்த்தி செய்தார்.
செய்னுலாப்தீன் தபால் அதிபர் மற்றும் லெத்தீபா உம்மா ஆகியோர்களின் மூத்த புதல்வரும், அப்துல் கபூர் ஆலிம் (கண்ணாடி ஆலிம்) அவர்களின் பேரனும் ஆவார்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், பரீட்சை ஆணையாளர் நாயகம், கல்வி வெளியீடுகள் ஆணையாளர் நாயகம் போன்ற 14 நான்கு உயர் பதவிகளின் ஒன்றில் மிக விரைவில் அரசினால் இவர் நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
