மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களை அதிகரியுங்கள்: முன்னாள் அமைச்சர் சுபைர் ஆளுநரிடம் வேண்டுகோள்
(ஏ.எல்.றியாஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதனால், பெண்கள் மற்றும் சிறுவர்கள் சிகிச்சை பெறுவதற்காக, மேலும் கொரோனா சிகிச்சை நிலையங்களை மாவட்டத்தில் நிறுவுமாறு கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபைர் (18) குறிப்பிடுகையில்,
கொரோனா வைரஸின் தீவிர பரவலினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் மக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்துவரும் நிலையில், இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இக்கொடிய வைரஸிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக, கொரோனா தொற்றாளர்களுடைய எண்ணிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், அம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களிலும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்கானப்படுகின்ற நோயாளர்களை சிகிச்சைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தினால் ஏறாவூர் பிரதேசத்திலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களை திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் கோமரங்கடவெல பிரதேசங்களில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களில் இடவசதியின்மை காரணமாகவே இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்களை மேற்குறித்த வெளிமாவட்ட சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதனால், அவர்கள் அச்சத்துடன் செல்வதாகவும், மொழி ரீதியாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் அறியக்கிடைத்துள்ளது. குறிப்பாக, மாவட்டம் தாண்டி செல்லும் நோயாளர்கள் உள ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த விடயமாக கிழக்கு மாகாண ஆளுநரை தொடர்புகொண்டு தெளிவுபடுத்தியதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மேலும் கொரோனா சிகிச்சை நிலையங்களை அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார்.
Reviewed by Editor
on
June 18, 2021
Rating:
