‘சினோவக்’ தடுப்பூசியை தயாரிக்க WHO ஒப்புதல் அளித்துள்ளது...


இலங்கை அரச மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனம் (State Pharmaceutical Manufacturing Corporation - SPMC) Sinovac கோவிட் தடுப்பூசிகளை சீனாவுடன் கூட்டாகத் தயாரிப்பதற்கு - உலக சுகாதார நிறுவனம் (WHO) நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது என்று ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் அந்த ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Sinovac தடுப்பூசியானது - “சர்வதேசத் தரம், பாதுகாப்பு மற்றும் செயற்திறன்” எனபவற்றைக் கொண்டிருப்பதனை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளதுடன், அது சர்வதேச பாவனைக்கு உகந்தது எனவும் அங்கீகரித்துள்ளது.

பெய்ஜிங் நகரை மையமாக கொண்டு இயங்கும் சினோவக் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த தடுப்பூசி - சீன அரசாங்கத்திற்கும் எமது அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சி தயாரிப்பாக இலங்கையில் உருவாக்கப்படவிருக்கின்றது. 

கோவிட் நோய்த்தொற்றுக்கு எதிரான எமது நாட்டின் போராட்டத்தில் இது ஒரு பாரிய முன்னேற்றமாகும். இது உண்மையில், திறந்த சந்தைக் கொள்கை ஒன்றின் கீழ் இயங்கும் ஓர் அரச வணிக நிறுவனத்திற்கு, SPMC, பெரியதொரு வெற்றி ஆகும்.

எமது அரசாங்கத்திற்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கின்ற இந்த முன்னேற்றமானது - எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச் சேர்க்கும் பெரும் சந்தை வாய்ப்பு ஒன்றினையும் உலகளாவ உருவாக்க இருக்கின்றது என்பது ஓர் அற்புதமான செய்தி ஆகும்.

இன்றைய சர்வதேச மற்றும் பூகோள அரசியல் நிலவரத்தில் - எமது அரச மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் ஒரு சாதனை என்றே இதனை குறிப்பிடுவேன் என்று ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


‘சினோவக்’ தடுப்பூசியை தயாரிக்க WHO ஒப்புதல் அளித்துள்ளது...  ‘சினோவக்’ தடுப்பூசியை தயாரிக்க WHO ஒப்புதல் அளித்துள்ளது... Reviewed by Editor on June 02, 2021 Rating: 5