மலையக மக்களின் துயர் துடைக்கத்தவறும் தூரநோக்க சிந்தனையற்ற அரசியல் சில தலைவர்கள்!

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையக மக்களின் குறிப்பாக தேயிலைத் தோட்டங்களை நம்பி தொழில் செய்யும் குடும்பங்களின் துயரம் என்பது விரல்விட்டு எண்ணிக்கொள்ளமுடியாத அளவு காணப்படுவதை சமகாலத்தில் ஊடகங்கள் வாயிலாகவும், கலந்துரையாடல்கள் மூலமாகவும் அறியமுடிகின்றது. 

குறைந்த சம்பளம், ஊழியம் சுரண்டப்படுகின்றமை, வருமானம் இழந்த பல குடும்பங்கள், 5000 ரூபா கொடுப்பனவு புறக்கணிப்பு, அடிப்படை வசதிகளாக வீடு, சுத்தமான குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து, மின்சாரம் என பல உரிமைகள் மறுக்கப்பட்டும் மறக்கப்பட்டும் தொழிற்சங்கங்களால் ஏமாற்றப்பட்டும், ஏன் தனது ஓய்வுகாலக் கொடுப்பனவான ஈரிஎப் எனும் நிதியைப் பெற்றுக்கொள்ளமுடியாமலும் கல்விவாய்ப்பை பெற்றுக்கொள்ளமுடியாமலும் தவிக்கும் அம்மக்களின் உரிமைகளை வெறும் பேச்சளவில் மட்டுமே கொண்டுசெல்லும் அல்லது கண்துடைப்பாக ஒன்றிரண்டை செய்துகொடுக்கும் தலைவர்களே அச்சமூகத்தின் தலைவலியாக மாறக்கூடிய நிலை காணப்படுகின்றது. 

அம்மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதில் சௌமியமூர்த்தி தொண்மான் போன்ற தலைவர்கள் செயற்பட்ட விதம் இந்நாட்டுக்கு முன்னுதாரணமாக இருந்தாலும் இன்றைய அரசியல் தலைமைகள் அவற்றில் பின்தங்கியுள்ளதேயே காணலாம். ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் வேறு வேறு கோணங்களில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவருவது அம்மக்களின் உரிமைகள் அழிக்கப்படுவதில் தாக்கம் செலுத்தும் ஒரு பிரதான காணியாகத் திகழ்கின்றது. 

இந்நிலையில் எத்தனையோ கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றபோது அரசியல் ரீதியாக தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவும் வித்தியாசமான கோணத்துடனும் அண்மைய நாட்களில் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு மக்களை வீதிக்கு இறக்கி அரசியல் செய்வது சிறுபான்மையின் இருப்புகள் மீதான இறுக்கத்தை தளர்த்துவதாகவே அமைகின்றது. 

உண்மையில் குறித்த எம்பியின் வீட்டில் இடம்பெற்ற தீயினால் மரணித்த சிறுமியின் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து குற்றம் இழைக்கப்பட்டிருந்தால் உரிய தரப்பினர் யாராயினும் தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டியது பொலிஸ், நீதித்துறையின் தலையாய கடமையாகும். இதனை சிறப்பாக கண்காணிக்கவேண்டியது சட்டத்துறையும் அரசாங்கமுமாகும்.

எனவே, இவ்விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தினை வலியுறுத்தி விசாரணைகளை நீதியான முறையில் தீவிரப்படுத்துவது தலையாய கடமையாகும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதுவே நியாயம் குற்றத்துக்கான தண்டணை என்பது சட்டத்தின் முன் தராதரம் பாராது வழங்கப்படவேண்டும் என்பதே இலங்கையர் ஒவ்வொருவரதும் வேண்டுகோளும் பிராரத்த்தனையுமாகும். 

ஆக, இங்கு ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் காட்டப்படும் காட்சிகளானது குறித்த எம்பியின் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்தை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போன்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் விதைத்துவருகின்றது. ஆனால் பொலிஸார் தெரிவிக்கின்ற கருத்துக்கள் அவ்வாறில்லாமல் நீதியான விசானைகள் துரிதமாக இடம்பெறுவதை தெளிவுறுத்துகின்றது.

மேலும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகின்ற முக்கிய செய்தி யாதெனில் மலையக மக்கள் கல்வி உரிமை இழந்த நிலையில் அல்லது மறுக்கப்பட்ட நிலையில் இளம் வயதிலேயே தரகர்கள் ஊடாக வேலைக்கு அமர்த்தப்படுகின்ற துயரமான வாழ்க்கை முறையினையாகும். வருமானம் போதாத நிலையில் வயதான பெற்றோர் தமது பிள்ளைகளின் ஊடாக வருமானம் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகின்றனர் என்பதனை இது தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. 

எனவே, மலையக மக்களின் தலைவர்கள் அம்மக்களுடைய ஏழ்மை நிலையை வெற்றிகொள்வதற்கான நீண்டாக நிலைபேண் திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டிய தேவை அதிகமிருக்கின்றது. அதனூடாக கல்வி உட்படி அடிப்படை உரிமைகளை அம்மக்கள் பெற்று சுபீட்சம் பெற வழிசமைக்க வேண்டுமே தவிர வெறுமனே அரசியல் பூச்சாண்டி காட்டி இனங்களுக்கிடையிலான விரிசல்களை அதிகரிக்கக்கூடாது. 

(எஸ்.எம். சஹாப்தீன், நிந்தவூர்)


மலையக மக்களின் துயர் துடைக்கத்தவறும் தூரநோக்க சிந்தனையற்ற அரசியல் சில தலைவர்கள்! மலையக மக்களின் துயர் துடைக்கத்தவறும் தூரநோக்க சிந்தனையற்ற அரசியல் சில தலைவர்கள்! Reviewed by Sifnas Hamy on July 24, 2021 Rating: 5