ஜனாதிபதி ஊடக மையம் திறப்பு!!

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஊடக மையம் (PMC), ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களின் தலைமையில், இன்று (29) வியாழக்கிழமை முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. 

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் அமைந்துள்ள பழைய சார்டட் வங்கிக் கட்டிடத்தின் கீழ் மாடியில், இந்த ஊடக மையம் அமையப்பெற்றுள்ளது.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நனவாக்கும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் ஜனாதிபதி அவர்களினதும் ஜனாதிபதி அலுவலகத்தினதும் தகவல்களை, சரியாகவும் வினைத்திறனாகவும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்குவதே, இந்த ஜனாதிபதி ஊடக மையத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

வாராந்தம் நடத்தப்படும் ஊடகச் சந்திப்புகளின் போது, தெரிவு செய்யப்பட்ட தலைப்பின் கீழ், ஜனாதிபதியின் பேச்சாளரிடமோ, அரச அதிகாரிகளிடமோ, நேரடியாகவோ அல்லது இணைய வழி ஊடாகவோ கேள்விகளை எழுப்புவதற்கு, ஊடகவியலாளர்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது. 

40 ஊடகவியலாளர்கள் ஒரே தடவையில் அமரும் வகையிலும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான அனைத்து அம்சங்களுடனும், இந்த ஊடக மையம் அமையப்பெற்றுள்ளது. 

இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்கள், பிரபலமான ஊடகப் பயன்பாட்டுக்கு அப்பால் சென்ற ஒரு முழுமையான ஊடகக் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு, இந்த ஜனாதிபதி ஊடக மையம் உறுதுணையாக இருக்குமென்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். 

கொவிட் தொற்றொழிப்புக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம், அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில், இன்றைய தினத்தில் ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. 

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த லலித் வீரதுங்க அவர்கள், செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள், 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறைவடையும் என்றார். 

அதேபோன்று, 18 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகள் கிடைத்தவுடன், அப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும், லலித் வீரதுங்க அவர்கள் குறிப்பிட்டார். 

சமீபத்திய அறிக்கையின்படி, உலகின் செல்வந்த நாடுகளிடையே 90 சதவீதத்துக்கும் அதிகளவான தடுப்பூசிகள் பகிரப்பட்டுள்ளன என்றும் எஞ்சிய 5 சதவீதத்துக்கும் குறைவானவையே, அபிவிருத்தி அடைந்துவரும்  நாடுகளிடையே பகிரப்பட்டுள்ளன என்றும், இருந்த போதிலும், தடுப்பூசி ஏற்றலில் இலங்கையின் முன்னேற்றமானது, ஒரு பெரிய சாதனையென்றும், லலித் வீரதுங்க அவர்கள் தெரிவித்தார். 

இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டிஆரச்சி அவர்கள், உண்மைத் தகவல்களைப் பரிமாற்றிக்கொள்ளும் கேந்திர நிலையமாக இந்த ஜனாதிபதி ஊடக மையத்தை மாற்றிக்கொள்வது, ஊடகவியலாளர்களாகிய எம் அனைவரதும் பொறுப்பாகும் என்றார். 

இதேவேளை, மக்களுக்குச் சரியான தகவல்கள் போய்ச் சேரவேண்டும் என்று, ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒன்றாகவே, இந்த ஜனாதிபதி ஊடக மையம் காணப்படுகிறது என, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அவர்கள் தெரிவித்தார். 

கொவிட் ஒழிப்புக்கான தடுப்பூசி வேலைத்திட்டம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் அந்த வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  


(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)







ஜனாதிபதி ஊடக மையம் திறப்பு!! ஜனாதிபதி ஊடக மையம் திறப்பு!! Reviewed by Editor on July 29, 2021 Rating: 5