கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான சட்டமூலம் இன்று (08) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. நேற்று (07) கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்புகளில் பல்வேறு தொழிற்சங்கங்கள், பல கட்சிகள் இந்த சட்டமூலத்தை கடுமையாக விமர்சித்தன.
இதனை நிறைவேற்றுவதற்கு எதிராக இன்று 08.07.2021 காலை 10.00 மணியளவில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தின் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் கொண்ட குழுவினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு பொலிஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்படும் போதும் அவர்கள் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய வண்ணம் சென்றனர்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியமைக்காகவே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகட, தலங்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் கூட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய சட்டமூலமானது பட்டங்களை பணத்திற்கு விற்பனை செய்வதை சாத்தியமாக்கும் என்று இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.
