சேதனப் பசளை தயாரிப்பினை ஊக்குவிப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் முன்வர வேண்டும் - ஆணையாளர் அஸ்மி

(ஏ.எல்.றியாஸ்)

சேதனப் பசளை தயாரிப்பினை ஊக்குவித்து நஞ்சற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம். அஸ்மி தெரிவித்தார்.

சாய்ந்தமருது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (14) அச்சசங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

சாய்ந்தமருது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது, அதிகமான சொத்துக்களைக் கொண்ட பாரியதொரு சங்கமாகும், தற்போதைய அதன் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகும். இச்சங்கமானது திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் பின்பற்றி, அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கூட்டுறவுத்துறை இலஞ்சம், ஊழலற்ற துறையாக மிளிர்வதற்கு சங்கத்தின் இயக்குனர் சபையின் அர்ப்பணிப்பு மிக இன்றியமையாததாகும்.

5000 வியாபார ஸ்தலங்களை ஆரம்பிக்கும் அரசாங்க  கொள்கைக்கு அமைவாக கல்முனை பிரிவில் முதலாவது வியாபார நிலையத்தை சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் ஆரம்பிக்க சங்கத்தினர் உரிய நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

சாய்ந்தமருது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஓய்வுநிலை நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கலாதேவி உதயராஜா, தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம்.ஷாபி, எம்.ஐ.எம்.பரீட் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜாபீர் மற்றும் சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்கள், பணியாளர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான திட்ட அறிக்கையினை சங்கத்தின் தலைவர் உதுமாலெப்பை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அஸ்மியிடம் வழங்கி வைத்தார்.




சேதனப் பசளை தயாரிப்பினை ஊக்குவிப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் முன்வர வேண்டும் - ஆணையாளர் அஸ்மி சேதனப் பசளை தயாரிப்பினை ஊக்குவிப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் முன்வர வேண்டும் - ஆணையாளர் அஸ்மி Reviewed by Editor on July 16, 2021 Rating: 5