(ஐ. எல். எம். தாஹிர்)
பொத்துவில் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அல்ஹாஜ் எம். ஐ. உதுமாலெப்பை BA (Hons) காலமான செய்தியினை வானொலி மூலம் கேட்ட கடந்து விட்ட காலத்தின் அந்தத் துயரமான நாள் இப்போது எம் நினைவலைகளில்…..
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் ஊடகங்கள் ஒலி, ஒளி பரப்பிக் கொண்டிருந்த வேளையில்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அல்ஹாஜ் எம். ஐ. உதுமாலெப்பை மறைந்த செய்தி தரணியெல்லாம் பேசப்பட்டது.
நல்லதொரு ஆசிரியர், நாணயமான அதிபர், நாகரீக அரசியல்வாதி, பூவிலும் மெல்லிய புன் சிரிப்புடன் பாலும் பழமுமாய்ப் பழகுகின்ற பண்பாளராகவும், திறமைப் பேச்சாளராகவும், விளங்கிய அன்னார் அக்கரைப்பற்றின் ஒளி விளக்காய் மிளிர்ந்த அகல் விளக்கானவர்.
“கற்கக் கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்று வாழ்வாங்கு வாழ்ந்த பண்பான மனிதரான மர்ஹூம் எம். ஐ. உதுமாலெப்பை அவர்கள், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தற்பொழுது தேசிய பாடசாலை) ஆக்கப்பாட்டுக்கு ஊக்கப்பாடளித்த கடின உழைப்பாளி என்பதுடன், அன்னார் மறைக்கப்பட்டாலும், மறக்கப்பட முடியாதவர் என்பதனை நாம் ஏற்று; அவருக்காகத் துஆச் செய்வோம்.
அரசியல் பிரவேசத்திற்கு முன்பும், பின்பும் ஊடகவியலாளர்களை மதித்து, நேசித்து அவர்களுடனான தனது உறவைப் பேணி நெருக்கமாக்கித் தன்னுடன் சேர்த்துப் பயணித்துக் கொள்பவர்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்திள் மாவட்ட ஆலோசகருமாக விளங்கிய முன்னாள் பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஐ.உதுமாலெப்பை அவர்கள் 2015 – 01 – 09 ஆம் திகதி எம்மை விட்டும் பிரிந்தார்.
ஜென்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கத்தின் சுகம் அன்னார் அனுபவிக்க அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.
Reviewed by Editor
on
July 04, 2021
Rating:
