(றிஸ்வான் சாலிஹு)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உருவாகிய "சுபீட்சத்தின் நோக்கு" எனும் உயரிய திட்டத்தின் கீழ் சௌபாக்கியா வார வேலைத்திட்டத்தினூடாக சமூர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இன்று (10) சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிமடு கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சுயதொழிலை ஊக்குவிக்குமுகமாக விவசாயம், பழவகைகள் உற்பத்தி, ஜேம், தும்பு, கூட்டெரு உற்பத்தி போன்றவற்றுக்காக சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு இதில் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சிப்தொர புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் ஐந்து மாணவர்களுக்கான புலமைபரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு.எஸ்.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. மஹேஸ்வரன், மன்னார் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஜனாப். அலியார் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
