தங்க நகை கொள்ளையுடன் தொடர்புடையவர், நீர்வழங்கல் சபையைச் சேர்ந்தவர் அல்ல

(அமீன் எம் றிலான்)

பலாங்கொடை, பம்பகின்ன பகுதியில் வீடொன்றில் வயது முதிர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றி அவரிடம் இருந்து 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்த குழுவினரை அண்மையில் சமநலவெவ போலீசார் கைது செய்தனர். இந்தக் கூட்டத்தில் ஒரு உறுப்பினர் நீர் மானி வாசிப்பாளராக இருந்துள்ளார்.

இதுதொடர்பில் நீர் வளங்கள் அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நீர் மானி வாசிப்பாளர் நீர் வழங்கல் அமைச்சுக்கு கீழ் வரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழோ அல்லது சமூக குடிநீர் திணைக்களத்தின் கிழோ பணியாற்றுபவர் அல்ல.

அவர் பலாங்கொடை, இம்புல்பே பிரதேச சபை ஊடாக அந்தப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் நீர் வழங்குவதற்காக செயற்படும் சிறிய கிராமிய நீர் திட்டமொன்றின் நீர் மானி வாசிப்பாளராகப் பணியாற்றும் இம்புல்பே பிரதேசசபையின் பணியாளர் ஒருவராவார்.

இலங்கை பூராகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் இயங்கும் நீர்மானி வாசிப்பாளர்கள் பலநூறு பேர் காணப்படுவதனால், இந்த செய்தியை அடுத்து வீடுகளுக்குச் சென்று தமது கடமைகளை நிறைவேற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஒரு சில நீர் மானி வாசிப்பாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

பல ஆண்டுகாலமாக இலட்சக்கணக்கான நீர் வாடிக்கையாளர்களுக்கு தமது கடமைகளை நிறைவேற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் மானி வாசிப்பாளர்கள் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் நிரந்தர பணியாளர்கள் என்பதுடன் அவர்கள் தமது கடமைகளை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்கின்றனர் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் திலின விஜேதுங்க இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.



தங்க நகை கொள்ளையுடன் தொடர்புடையவர், நீர்வழங்கல் சபையைச் சேர்ந்தவர் அல்ல தங்க நகை கொள்ளையுடன் தொடர்புடையவர், நீர்வழங்கல் சபையைச் சேர்ந்தவர் அல்ல Reviewed by Editor on August 24, 2021 Rating: 5