உல்லை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவிற்கு சுற்றுமதில்

(ஏ.எல்.றியாஸ்)

பொத்துவில், உல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் சுற்றுமதில், 3மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உல்லை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின், சுற்றுமதில் 3மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இச்சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உல்லை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் பீ.எஸ்.ரீ.பெம்மாதுவ தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித், திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.ஜமாஹிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சுற்றுமதிலுக்கான அடிக்கல்லினை நாட்டினர்.

உல்லை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பரிவினை தரமுயர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், அடுத்த வருடம் உலக வங்கி செயற்திட்டத்தில் இதனை இணைத்துக்கொள்வதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் உறுதியளித்துள்ளார்.

உல்லை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பரிவினை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அறுகம்பே அபிவிருத்தி போரம் பொத்துவில் பிரதேசத்தில் கல்வி, கலாசார, விளையாட்டு மற்றும் சமூக சேவைகள் என பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் ஹாஜித் மேலும் தெரிவித்தார்.






 

உல்லை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவிற்கு சுற்றுமதில் உல்லை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவிற்கு சுற்றுமதில் Reviewed by Editor on August 20, 2021 Rating: 5