முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தின் இரங்கல்

முன்னாள் அமைச்சரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான மங்கள சமரவீர அவர்கள் நேற்று (24) முற்பகல் மறைந்தார்,மறையும்போது அவருக்கு 65 வயதாகும்.

அவரின் திடீர் மறைவு தொடர்பில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையிலான இலங்கை பாராளுமன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று இலங்கை நாடாளுமன்றம் சார்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1983ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை அமைப்பாளராக அரசியலுக்குள் நுழைந்த மங்கள சமரவீர அவர்கள், 1989ஆம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதன் பின்னர் பல தடவைகள் இவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

1994ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவர்களின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சராகப் பணியாற்றிய மங்கள சமரவீர அவர்கள், 2005ஆம் ஆண்டு முதல் 2007 வரை முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.

அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்த அவர் 2015ஆம் ஆண்டு முதல் அந்த அரசாங்கத்தில் நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றினார். அனுபவம் மிக்க அரசியல்வாதியான மங்கள சமரவீர அவர்கள் பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துள்ளார்.

1956 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மாத்தறையில் பிறந்த மங்கள சமரவீர அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். 

மங்கள சமரவீர அவர்களின் ஆத்மா சாத்தியடைய இலங்கை பாராளுமன்றத்தில் நாம் அனைவரும் பிரார்த்திக்கின்றோம் என்று சபாநாயகர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தின் இரங்கல் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தின் இரங்கல் Reviewed by Editor on August 25, 2021 Rating: 5