கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அரச சேவையிலிருந்து ஓய்வு.

(ஐ.எல்.எம்.றிஸான்)

கிழக்கு மாகாண உள்ளுராட்சி, கிராம அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை, சட்டமும் ஒழுங்கும், நிதி, போக்குவரத்து, சுற்றுலாத்துறை, கட்டடங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் தேசமான்ய யூ.எல்.ஏ.அஸீஸ் 37வருட அரச சேவையிலிருந்து 2021.08.11ம் திகதி ஓய்வுபெற்றார். 2021.05.11ம் திகதி அவர் 60 வயதைப் பூர்த்தி செய்த போதிலும் அவருக்கு 03 மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

அட்டாளைச்சேனையில் உதுமாலெவ்வை - ஹதீஜா உம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த அஸீஸ், அட்டாளைச்சேனை அல்-முனீறா வித்தியாலயம், அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) என்பனவற்றில் கல்வி பெற்று பேராதனை பல்கலைக்கழக கலை (சிறப்பு) பட்டதாரியானார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொதுத்துறை நிர்வாகத்திலும் அவர் முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார்.

சுமார் 06 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய அஸீஸ், 1990ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் நியமனம்பெற்று, 1990 முதல் 1993ம் ஆண்டுவரை புத்தளம் உதவி அரசாங்க அதிபராகவும், 1993 முதல் 2005 வரையான காலப்பகுதியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகவும் பணியாற்றினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் விஷேட ஆணையாளராக சுமார் 08 வருடங்கள் கடமையாற்றிய அஸீஸ் 2005-2009 வரையான காலப்பகுதியில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கிழககு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்று 2009-2012 காலப்பகுதியில் பணியாற்றினார். 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 11ம் திகதிவரை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார். 

தனது சேவைக்காலத்தில் புலமைப்பரிசில் பெற்று ஜேர்மனி, தாய்லாந்து, அவுஸ்திரேலியா, தென்கொரியா, கம்போடியா, இந்நியா, சிங்கப்பூர், ஹொங்ஹொங் போன்ற நாடுகளுக்கும் அவர் பயணித்துள்ளார். 

அரச துறையில் தான் ஆற்றிய பணிகளுக்காக அஸீஸ், பல்வேறு அமைப்புக்களினால் மக்கள் தொண்டன், அகில இலங்கை சமாதான நீதவான், சாமசிறி, தேசமான்ய, சமூக சேவை சிரோண்மணி, தியாக தீபம் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் மூன்று தசாப்தங்களை நிறைவு செய்துள்ள, ஓய்வுநிலை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ் சிறந்த தலைமைத்துவம், அறிவு, திறண், நேர்மை, மனிதாபிமானம், எளிமை போன்ற உயர்பண்புகளுடன் மிளிர்ந்தார். கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களுக்கு பாகுபாடின்றி அவரது சேவை வியாபித்திருந்தது என்றால் அதனை யாரும் மறுக்காது ஏற்றுக் கொள்வர்.

நிர்வாகத்திறன், நேர்த்தியான பணி என்பன காரணமாக குறுகிய காலத்தில் அரசியல்வாதிகள், மேலதிகரிகளின் அபரிமித அன்பையும், நெருக்கத்தையும் பெற்றுக் கொண்டமை கடந்த கால வரலாறாகும். அந்தவகையில், மறைந்த சி.மு.கா. தலைவர், முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரஃப், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் உள்ளிட்டவர்கள் அடங்கலாக அமைச்சர்கள், இராஜாங்க ,பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு ஆளுணர்கள் மற்றும் இதர மேலதிகாரிகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். 

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக அப்துல் அஸீஸ் கடமையாற்றிய, கடந்த 1997ம் ஆண்டு, தேசிய மீலாதுன் நபிவிழா அட்டாளைச்சேனையில் கோலாகலமாக நடைபெற்றது. சுமார் மூன்று நாட்கள் விழாக் கோலம் பூண்ட இவ்விழா வெற்றிகரமாக நிறைவு பெறுவதற்கு தன்னலான முழுமையான பங்களிப்பை நல்கியிருந்தார். அதற்காக மறைந்த அமைச்சர் அஷ்ரஃப் உள்ளிட்ட பலரின் பாராட்டை அவர் பெற்றுக் கொண்டார்.

'அஸீஸ் சேர்' என்று எல்லோராலும் அறியப்பட்ட அப்துல் அஸீஸ் அவர்கள் அனைவருடனும் இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்டவர். யார்?, எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் உடன் பதிலளிக்கும் பழக்கத்தை ஆரம்பம் முதல் இன்றுவரை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அவரால் அதிகமானவர்கள் நன்மையடைந்துள்ளனர் என்பதற்கு அவர்களே சாட்சியாவர்.

சிறுவயது முதல் சமூக சேவையில் அதிக ஆர்வம், ஈடுபாடு கொண்ட அஸீஸ் அட்டாளைச்சேனை கல்வி வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பு நல்கியுள்ளார் என்பது வெள்ளிடைமலை. தற்போதும் நல்கி வருகின்றார். கடந்த 1984ம் ஆண்டு அட்டாளைச்சேனை கல்வி வட்டம் சமூகசேவை அமைப்பை ஆரம்பிப்பதிலும், அதனை வெற்றிகரமாக வழிநடாத்துவதிலும் அவர் வெற்றிகண்டார். 

அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக மாலை நேர வகுப்புக்களை, கல்வி வட்டம் அமைப்பின் மூலம் இலவசமாக நடாத்துவதில் தனது நண்பர்களுடன் இணைந்து தீவிரமாகத் தொழிற்பட்டார். இதனால், கட்டணம் செலுத்தி பிரத்தியேக கல்வி பெற முடியாத ஏழை மாணவர்கள் பெரிதும் நன்மையடைந்தனர். தற்போது பல்வேறு உயர் பதவிகளை வகிக்கும் அன்றைய மாணவர்கள் இதற்கு சான்று பகர்வர். 

அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகம் ஊடாகவும் அவரது சமூகப் பணிகள் தொடர்ந்தன. வருமானமில்லாத சமூகசேவை அமைப்புக்களை உயிரோட்டமுள்ள அமைப்புக்களாக இயங்கச் செய்வதில் எதிர்கொண்ட சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டார். அவ்வப்போது அவசியமான பணத் தேவைகள், மாணவர்களுக்கு முன்னோடி மாதிரிப் பரீட்சைகளை நடாத்துவதற்குத் தேவையான காகிதாதிகள் உள்ளிட்டவற்றை மனங் கோணாது தனது கரங்களினால் வழங்கி உதவினார். 

ஊருக்கான சமூகசேவைகளை மேலும் விரிவுபடுத்தும் உயர் நோக்கத்தின் அடிப்படையில், பின்னாளில் கல்வி வட்டம் அமைப்பு 'அட்டாளைச்சேனை அபிவிருத்திச் சமூகம்' (ADS) அமைப்பாக மாற்றம் பெற்றது. 

அஸீஸ் நிகழ்வுகளை நெறிப்படுத்தி நடாத்தி முடிக்கும் விதம் வித்தியாசமானது. ஆரம்பம் முதல் இறுதிவரை நேர்த்தியாக பணிகளை முன்னெடுக்கும் வழக்கம் அவரிடம் எப்போதும் குடிகொண்டுள்ளது. அதனை பல சந்தர்ப்பங்களில் காணக் கிடைத்துள்ளது. 

இலக்கியத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்து, பொன்விழாக் கண்ட ஆசுகவி அன்புடீன் பொன் விழாக் குழுவை சிறப்பாக வழி நடாத்தி நிறைவுகண்டார். எதிரும் புதிருமான அரசியல்வாதிகளை அதிதிகளாக அழைத்து, சமகாலத்தில் ஒரு மேடையில் அமரச் செய்தார். இவ்வாறு பல சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அஸீஸ் சமூக சேவையில் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றார். அதிகமான பணம், பொருள், கால, நேரங்களை அவர் சமூக சேவைக்காக செலவிட்டு வருகின்றார். வாரத்தின் திங்கள் முதல் வெள்ளி வரை திருகோணமலை முதலமைச்சில்; கடமையாற்றிவிட்டு சனி, ஞாயிறு, பொது விடுமுறை தினங்களில் தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்கு வருகை தரும் அவர், சமூகசேவைக் கூட்டங்கள், நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

பன்முக ஆளுமை, நிர்வாகத் திறண் கொண்ட ஓய்வுநிலை செயலாளர் அஸீஸின் பணிகள் தொடர்ந்தும் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும்.



கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அரச சேவையிலிருந்து ஓய்வு. கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அரச சேவையிலிருந்து ஓய்வு. Reviewed by Editor on August 19, 2021 Rating: 5