(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச சபை உருவாக்கம் பெற்று இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் முன்மொழியப்பட்ட சேதனப் பசளை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அக்கரைப்பற்று பிரதேச சபையினால் திண்மக் கழிவுகளை உக்கும் குப்பைகள், உக்காத குப்பைகள் என்று பிரித்து அதனை சேகரிப்பதற்கான உரப்பை பைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (09) திங்கட்கிழமை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.ஏ.றாசிக் அவர்களின் தலைமையில் சபையின் கெளரவ உறுப்பினர்களின் பங்குபற்றலுடன், அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளர் ஜனாப் இர்பான் அவர்களிடம் உரப்பைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நிகழ்வினை ஆரம்பித்து வைத்த பின்னர் தவிசாளர் எம்.ஏ.றாசீக் கருத்து தெரிவிக்கையில்,
எமது பிராந்தியத்தில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக குப்பைகளை இரண்டு வகைப்படுத்துவதற்காக இரண்டு நிறங்களில் உரப்பைகள் இன்று முதல் மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதோடு, இந்த உரப்பைகளை மக்கள் நேரடியாக பிரதேசசபை நிர்வாகத்தினரிடம் ஒரு உரப்பைக்கான நிர்ணய விலை 50 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதோடு, ஜனாதிபதி அவர்களின் இந்த செயற்திட்டத்திற்கு எமது பிரதேச சபை ஒரு முன்மாதிரியாக இருந்து செயற்பட்டு இதனை வெற்றிகரமாகவும், நூறு வீதம் நடைமுறைப்படுத்தி வெற்றியளித்த சபையாக எம் திருநாட்டில் திகழ வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரதேச சபை கௌரவ உறுப்பினர் ரீ.எம் ஐய்யூப் கருத்து தெரிவிக்கையில்,
எதிர் வருகின்ற காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து மக்களும் உரப்பைகளில் குப்பைகளை பிரித்து வழங்குமாறும் இல்லாதபட்சத்தில் குப்பைகள் எமது வாகனத்தில் ஏற்றுவதற்கு அனுமதிக்கப் படமாட்டாது என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக்கொண்டார்.
உலகளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் திண்மக்கழிவகற்றல் மிக முக்கியமான பிரச்சினையாக காணப்படுவதனால் எமது பிராந்திய மக்கள் அக்கரைப்பற்று பிரதேச சபையுடன் ஒருமித்து பயணிக்கக்கூடிய மக்கள். எனவே எங்களுடைய அறிவுறுத்தல்களை பின்பற்றி சிறப்பாக ஒரு முன்மாதிரியான மக்களாக திகழ்வார்கள் என்பதையும் அவர் இவ்விடத்தில் சுட்டிக்காட்டினார்.
Reviewed by Editor
on
August 10, 2021
Rating:
