அதிபர், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்திற்கொள்ள வேண்டும் -மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலி தெரிவிப்பு

 (ஏ.எல்.றியாஸ்)

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளைக் காரணம் காட்டாது, அதிபர் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடன் நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தெரித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை காரணம் காட்டி, அதிபர், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்யாது, அவர்களுடைய சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வினை வழங்கி, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

24வருடகாலமாக நிலவும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தற்போதுள்ள 2/3 பெரும்பான்மையினைக் கொண்டுள்ள அரசு தீர்வினை வழங்க வேண்டும். குறைந்த வேதனத்தைப் பெறும் அதிபர், ஆசிரியர்களின் மனநிலை பாதிக்கப்படுமானால், அது கற்பித்தல் நடவடிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறான விடயங்களை கருத்திற்கொள்ளாது இந்த அரசு செயற்படுமானால், மாணவர்களின் கல்வி நிலை மேலும் பாதிப்படையும்.

கொவிட் தாக்கத்தினால் நாடு பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகானங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வன்னமுள்ளது. வாழ்க்கைச் செலவுச் சுமையால் மக்கள் தடுமாறுகின்றனர். பணங்களை அச்சிடுவதன் மூலம் பொருளாதார பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாது. தற்போதைய ஆட்சியில் நாட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் என அனைத்துமே சீரழிந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



அதிபர், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்திற்கொள்ள வேண்டும் -மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலி தெரிவிப்பு அதிபர், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்திற்கொள்ள வேண்டும் -மாவட்ட அமைப்பாளர் ஹசன் அலி தெரிவிப்பு Reviewed by Editor on August 03, 2021 Rating: 5