ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 வது ஆண்டு மாநாடு இலங்கையில்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 55 வது வருடாந்த மாநாடு அடுத்த ஆண்டு (2022) மே 2 முதல் 5 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (30) வியாழக்கிழமை முற்பகல் நிதி அமைச்சில், நிதி அமைச்சர் கெளரவ பசில் ராஜபக்ச அவர்களால் கைசாத்திடப்பட்டது.

இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பாக தெற்காசியாவின் பிராந்திய இயக்குனர் ஜெனரல் திரு ஆத்திகல்லே மற்றும் திரு. கெனிச்சி யோகோயாமா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் முன்னிலையில் உரையாற்றுகையில்,

 “ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55வது வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்த வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. தெற்காசிய பிராந்தியத்தில் மாநாட்டை நடத்தும் இரண்டாவது நாடு இலங்கையாகும். இந்த மாநாட்டை நடத்த இலங்கை சிறந்த இடம் என்று நான் நம்புகிறேன்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில், இலங்கையானது தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் கோவிட் தொற்றுநோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்ததுள்ளது. மேலும், கோவிட் பேரழிவை நிர்வகிப்பதில் ஆசிய மேம்பாட்டு வங்கி தொடர்ந்து எங்களுக்கு உதவியதையும் நினைவுகூறுவதுடன் அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 

இந்த மாநாடு கோவிட்டுக்கு பிந்தைய பருவத்தை வெல்ல ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.  குறிப்பாக கோவிட் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையை புத்துயிர் பெற வைப்பதே எங்கள் தலையாய தேவையாகவுள்ளது.  இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் முழு ஆதரவையும் நாம் எதிர்பார்க்கிறோம்.  முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினரையும் இலங்கைக்கு வருமாறு நான் அழைக்கிறேன். ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

ஆசிய அபிவிருத்தி  வங்கியின் பொதுச் செயலாளர் முகமது இஷான் கான், பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள ADBயின் தலைமையகத்திலிருந்து செயலியின் மூலம் பேசினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 வது ஆண்டு மாநாட்டை நடத்தவுள்ள இலங்கை அரசுக்கு விசேட நன்றி. இலங்கையில் கோவிட் தடுப்பூசி திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருப்பதை நாங்கள் கவனிக்கிறோம். அதே நேரத்தில், ஒட்டுமொத்த இலங்கையும் கோவிட் பேரழிவை நிர்வகிப்பதில் முன்னணியில் உள்ளது.  எனவே, எங்கள் வருடாந்திர மாநாட்டை நடத்த இலங்கை மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு, கொவிட்-க்குப் பிந்தைய காலத்தை எதிர்கொள்ள கொழும்பில் நடத்தப்படுவது இலங்கைக்கு கூடுதல் பலமாக இருக்கும்.  கோவிட் பேரழிவினால் சரிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குகிறோம்.  காலநிலை மாற்றம் மற்றும் பசுமை பொருளாதாரம் எங்கள் முக்கிய கருப்பொருள்களாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.





ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 வது ஆண்டு மாநாடு இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 வது ஆண்டு மாநாடு இலங்கையில் Reviewed by Editor on September 30, 2021 Rating: 5