உங்களால் ஆனந்தமானது எங்கள் பொழுதுகள் - எஸ்.எம்.சபீஸ்

ஓ.எல். களமாடி வென்ற, 

வீராங்கனைகளே, வீரமகன்களே,

உங்கள் அழகான பெறுபேற்றுச் செய்திகள், எங்கள் கண்களைப் பனிக்கச் செய்தன; மனங்களை நனைத்திருக்கின்றன மகிழ்ச்சி! பெருமகிழ்ச்சி! அல்ஹம்துலில்லாஹ்! 

அக்கரைப்பற்று மண்ணின் மகுடத்தில் மேலும் முத்துப் பரல்களைக் கொண்டுவந்து பதித்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் உளமார வாழ்த்துகிறோம், பெருமைப் படுகிறோம்   என்று வெளிவந்த 2020 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களிள் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை, அக்கரைப்பற்று மாநகர சபை கெளரவ உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் வாழ்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்த வெற்றிகளைச் சாத்தியமாக்க உறுதுணையாய் இருந்த, ஆசிரியர்களையும் அதிபர்களையும் பெற்றோர்களையும் மெச்சுகிறோம்- எல்லாவற்றிற்கும் மேலாக அந்த இறையோனின் அருளுக்காக, அவனுக்கு நன்றி சொல்கிறோம்.

பிள்ளைகளே,

ஓ.எ.லில் நீங்கள் பெற்ற இத்தனை அழகான அடைவால்,  இந்த மண்ணின் வானத்தில் புதிய நட்சத்திரங்களாகத் தோன்றி மின்னிக் கொண்டிருக்கிறீர்கள்! இந்த ஒளிர்தல் மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்பதே, எமது அவாவும் ஆவலான எதிர்பார்ப்பும்.

கரையே இல்லாத கல்விக்கடலில், நீங்கள் தொடங்கிய உங்கள் முக்கிய முதல் பயணத்தை சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். இப்போது ஒளிரும் உங்கள் வெற்றி, அணையாத ஜோதியாய் எரியவேண்டும்! 

அதற்கு ஓ.எல்.இல் நீங்கள் காட்டிய ஆர்வத்தை காட்டிலும்- முயற்சியை விடவும்- இரண்டு மடங்குக்கு மேல் உங்கள் உழைப்பை, ஏ.எல்.இல் கொடுக்க வேண்டியிருக்கிறது. காரணம் ஓ.எல்.ஐ விட ஏ.எல்.இக்கான பயணம் மிகத்தொலைவானது. இப்படித்தான் இதற்குப் பின்னான மேற்படிப்புகள் எல்லாமும் அமையும்.  நிற்க.

இந்தப் பெறுபேறுகளில் பெண்பிள்ளைகள் நிரூபித்திருக்கும்- அவர்களின் கற்றல் தாகமும் வேட்கையும் எம்மை இன்னும் பூரிக்க வைக்கிறது;  இந்த ஆரோக்கியப் போட்டி மேலும் ஆறுதல் தருகிறது.

எங்கள் தாய்மார்களுக்குக் கிடைக்காத இந்தப் பாக்கியத்தை இப்போதுள்ள பெண்பிள்ளைகளுக்குக் கிடைக்க வைத்த இறைவனைப் போற்றுகிறோம். 

இனிவரும் சந்ததிகளின் கல்வி, அதிஉயர் தரத்தில் அமையும்! என்பதில் எங்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. காரணம் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியை தாய்தானே. அப்படிப்பட்ட தாய் கற்றவளாக அமையும்போது, அந்தக் குழந்தையின் கற்றல் செயற்பாடுகள் எத்தனை செம்மையாக அமையும்.

மாணவ மணிகளே,

உங்கள் கல்விப் பயணத்தில்,  நாங்கள் கப்பலாகவும் மாலுமிகளாகவும் இருப்போம்! நீங்கள் உயர உயர ஏற ஏணிகளாக இருப்போம்! பறந்து பறந்து செல்ல விமானங்களாகவும் இருப்போம்! இன்ஷாஅல்லாஹ்! 

இத்தனைக்கும்...

உங்கள் இடையறாத முயற்சியே முழு மூலதனம்! என்பதை நீங்கள் உங்கள் அடிமனதில், மலையின் அடித்தளம் போல் பதித்துச் செயற்படவேண்டும். இதை எப்போதும் எந்த நிலையிலும் நினைவில் வைத்திருங்கள். என்பதை அழுத்திச் சொல்லி மீண்டும் உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். 

“...மன்னர்க்குத் தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை;

 கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு” 

என்ற ஔவையாரின் மூதுரைத் துளியொன்றை உங்களுக்குள் விதைத்தவனாக- மன நிறைவோடு என்று மாநகர சபை உறுப்பினர் சபீஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




உங்களால் ஆனந்தமானது எங்கள் பொழுதுகள் - எஸ்.எம்.சபீஸ் உங்களால் ஆனந்தமானது எங்கள் பொழுதுகள் - எஸ்.எம்.சபீஸ் Reviewed by Editor on September 25, 2021 Rating: 5