வியாபார பொருளியல் பேராசிரியராக கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா பதவி உயர்வு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும், பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளருமான கலாநிதி அப்துல் மஜீத் முஹம்மது முஸ்தபா வியாபாரப் பொருளியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

இவரது பதவி உயர்வு 10.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பல்கலைக்கழகப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் பேசும் சமுகங்களில் வியாபாரப் பொருளியல் துறையில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவது இதுவே முதற்தடவையாகும். பல்கலைக்கழக கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளுடன் தாம் வகிக்கின்ற ஒவ்வொரு பொறுப்புக்களையும் திறம்பட நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனது மாணவனான கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, இன்று ஒரு பேராசிரியராக பதவி உயர்வு பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது. 

பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியினைச் சேர்ந்தவர். இவரது தந்தை மீராலெப்பை அப்துல் மஜீத் ஒரு வர்த்தகர். தயார் முஹம்மது இஸ்மாயில் பாத்துமுத்து. பேராசிரியர் முஸ்தபா தனது பாடசாலைக் கல்வியினை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி (தேசிய பாடசாலை), காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியவற்றில் பெற்றுக்கொண்டார். பாடசாலைக் காலம் முதல் கல்வியில் ஆர்வமுள்ள ஒரு மாணவனாகத் திகழ்ந்த இவர், 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அப்பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் பொருளியல் இளமாணிப் (B.Econ) பட்டப்படிப்பினை தொடர்ந்த இவர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அமையப்பெற்றபோது அப்பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டு தனது பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்தார். 

பேராசிரியர் முஸ்தபா இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை நிறைவு செய்த பின்னர், அப்பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை தற்காலிக உதவி போதனை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் தற்காலிக உதவி விரிவுரையாளராக, தற்காலிக விரிவுரையாளராக, ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளராக பல பதவி நிலைப் பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டார். அர்ப்பணிப்புள்ள ஒரு இளம் பல்கலைக்கழக விரவுரையாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பேராசிரியர் முஸ்தபா, பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் நிரந்த விரிவுரையாளர் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டார். தான் ஒரு நிரந்தர விரிவுரையாளராக இணைத்துக் கொள்ளப்பட்டது முதல், கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு காட்டிய அவர், தனது துறையில் முதுதத்துவமாணிப் (M.Phil) படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் (PhD) பட்டப்பின்படிப்பு ஆய்வினை வெற்றிகரமாக பூர்த்திசெய்தார். 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் விரிவுரையாளர் நிலையில் சிரேஷ்டத்துவ பதவியுயர்வு தரம் – ii, தரம் – i ஆகியவற்றை வெற்றிகரமாகக் கடந்த பேராசிரியர் முஸ்தபா, பல்கலைக்கழக கற்பித்தலில் 22 வருடகால அனுபவத்தினைக் கொண்டவர். இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் கடமையாற்றும் ஒரேயொரு வியாபாரப் பொருளியல் விரிவுரையாளருமாவார். பல்கலைக்கழகத்திற்குள்ளே கற்பித்தல் செயற்பாடுகளில் மட்டுமல்லாது, பல்கலைக்கழக நிருவாகத்திற்கு உதவக்கூடிய பல பொறுப்பான பதவிகளையும் பெற்று, அவற்றினை வெற்றிகரமாக செயற்படுத்திக்காட்டியுள்ளார். இதன்படி பல்கலைக்கழகத்தின் மணவர் நலன்புரிப் பிரிவின் பணிப்பாளராகவும், வெளிவாரிப் பட்டப்படிப்புக்களுக்கும் தொழில்சார் கற்கை நெறிகளுக்கமான நிலையத்தின் பணிப்பாளராகவும், கல்விசார் விடுதிப் பொறுப்பாளராகவும், விசேட தேவையுடைய மாணவர்களின் நலன்புரி இணைப்பாளராகவும், இடர் முகாமைத்துவ இணைப்பாளராகவும், வெளிவாரிக் கற்கைகள் பிரிவின் இணைப்பாளராகவும், சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும், தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். பல்வேறு காலப்பகுதிகளில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார். 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கற்கைகள் பிரிவினை உலக வங்கியின் நிதியுதவியுடன் விஷ்தரித்து, அதனை வெளிவாரிப் பட்டப்படிப்புக்களுக்கும் தொழில்சார் கற்கைகளுக்குமான நிலையமாக மறுசீரமைப்புச் செய்வதில் பேராசிரியர் முஸ்தபாவின் பங்களிப்புக் குறிப்பிடத்தக்கதாகும். நாடு பூராகவும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்நிலையத்தில் இணைந்து தமது கற்கைநெறிகளை தொடர்வதற்கு பேராசிரியர் முஸ்தபா ஊக்கியாகச் செயற்பட்டார். நாட்டின் பல பாகங்களிலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களைக் கொண்டு வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து, மாணவர்களுக்கான வழிகாட்டல் கையேடுகளை வழங்கி, மாணவர்களின் சிரமத்தினைத் தவிர்ப்பதற்கு பல இடங்களில் பரீட்சை மண்டபத்தினை ஏற்பாடு செய்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படாத பல மாணவர்கள் வெளிவாரியாக தமது பட்டப்படிப்பினை நிறைவுசெய்வதற்கு பேராசியர் முஸ்தபா குறிப்பிடும்படியான பங்களிப்பினை வழங்கினார். 

பேராசிரியர் முஸ்தபா: தனது துறைசார் ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடுள்ள பல ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச, தேசிய ஆய்வுச் சஞ்சிகைகளில் சமர்ப்பித்துள்ளார்; இத்தாலி, ஜப்பான், சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், மலேசிய, இந்தியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பல கல்வி – ஆய்வு மாநாடுகளிள் பங்கேற்று தனது ஆய்வு முடிவுகளை சமர்ப்பித்துள்ளார்; வெளிநாடுகளில் இடம்பெற்ற பல சர்வதேச ஆய்வு மாநாடுகளில் சிறப்புரையாளராகவும் கட்டுரைத் திறனாய்வாளராகவும் கடமையாற்றியுள்ளார் ;தனது துறை தொடர்பான ஈடுபாட்டின் உலகளாவியத் தன்மையினைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்க பொருளியல் சங்கம், உலகப் பொருளியலாளர் சங்கம் என்பவற்றின் ஆயுட்கால உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். 

இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் பலவற்றில் வருகைதரு விரிவுரைகளையும் நிகழ்த்திவரும் பேராசிரியர் முஸ்தபா: பொருளியல் பாடவிதானம் தழுவி தேசிய மட்டப் பரீட்சைகளுக்கான பிரதம பரீட்சகர்களுள் ஒருவராகவும் செயற்பட்டுவருகின்றார்; இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய பல்கலைக்கழகங்களின் பட்டநிகழ்ச்சித் திட்டங்களின் தரத்தினை மதிப்பீடு செய்வதற்கான குழுவின் ஒரு உறுப்பினராகவும் உள்ளார். இவர் இலங்கை பல்கலைக்கழக பொருளியல் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேராசிரியர் முஸ்தபா வியாபாரப் பொருளியல் துறையில் தான் பெற்ற அறிவு, அனுபவம் என்பவற்றினைக் கொண்டு, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் போதனை செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கும் சுற்றுலாத் துறை விருத்திக்கும் உள்ள தொடர்பினை ஆராய்ந்து இலங்கையில் அதனை மேம்படுத்துவதற்கான கொள்கைசார் பரிந்துரைகள் பலவற்றையும் வெளியிட்டு வைத்துள்ளார். தனது ஆய்வியல் ஈடுபாட்டினை வெளிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ சஞ்சிகை மற்றும் வியாபாரப் பொருளியல் சஞ்சிகை என்பவற்றின் பிரதம ஆசிரியராகவும் தொழிற்பட்டுவருகின்றார். பேராசிரியரின் ஆய்வு முயற்சிகளுக்கான அங்கீகாரமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான முதன்மை ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் தமிழ் மொழியில் பொருளியல் துறையினைக் கற்கும் மாணவர்கள், அவர்களது சொந்த மொழியில் நூல்களைப் பெறுவது சிரமமானதாக உள்ளது. மாணவர்களின் இந்நெருக்கடியினை உணர்ந்த பேராசிரியர் முஸ்தபா, காலத்தொடர் தரவுகளும் Eviews மென்பொருள் பயன்பாடும், ஐரோப்பிய யுனியனும் ஜீ.எஸ்.பீ.பிளசும், சர்வதேச நாணய நிதியம், சுற்றுலாப் பொருளியல் – ஓர் அறிமுகம், இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு, பணவீக்கம், பொருளியல் சொற்களஞ்சியம், சர்வதேச வர்த்தகம், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு, நிலையான அபிவிருத்தியும் சமூக பொருளாதார போக்கும், நுண்ணியல் பொருளியல், பேரினப் பொருளியல், இலங்கையின் பொருளாதார வரலாறு, வெளிநாட்டு நேரடி முதலீட்டு கோட்பாடுகள், சர்வதேச வர்த்தகமும் நிதியும் உள்ளிட்ட பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் பல இலங்கை நூலகங்கள் பலவற்றில் வாசகர்களின் பயன்பாட்டிற்காக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

இவ்விதம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியிலும் கல்வியியல் மற்றும் ஆய்வியல் ரீதியாக அவர் வழங்கிவருகின்ற பங்களிப்புக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இப்பதவி உயர்வினை பார்க்கமுடிகின்றது. பேராசிரியர் முஸ்தபாவின் உயர்வில் அவரது துணைவியார் உம்மு பரீதா முஸ்தபா மற்றும் அவரது பிள்ளைகள் வழங்கிவருகின்ற ஒத்துழைப்புக்கள் குறிப்பிடத்தக்கதாகும். பேராசிரியர் முஸ்தபா தனது கல்விப் பயணத்தில் இன்னும் மிக நீண்டதூரம் பல அடைவுகளுடன் பயணிக்க வேண்டும் என்பதே எனது அவா. அதற்காக எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள்புரிய வேண்டும்!


நன்றி-

கலாநிதி ஏ.ஏ.எம். நுபைல்
தலைவர்
பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை 
கலை, கலாசார பீடம் 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.



வியாபார பொருளியல் பேராசிரியராக கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா பதவி உயர்வு வியாபார பொருளியல் பேராசிரியராக கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா பதவி உயர்வு Reviewed by Editor on September 25, 2021 Rating: 5