மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறுகின்ற வேளையில் லொஹான் ரத்வத்தேவின் செயல் ஒரு விளையாட்டல்ல -சட்டத்தரணி சுனில் வட்டகல

நாட்டுக்குள்ளே போல் சர்வதேச ரீதியாகவும் மாபெரும் பரபரப்பினை ஏற்படுத்திய ஒருசில செயல்கள் மெகசின் சிறைச்சாலையிலும் அநுராதபுர சிறைச்சாலையிலும் இராஜாங்க அமைச்சரால் புரியப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பதவி விலகி உள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்ற வகையில் நாங்கள் இந்த பதவிவிலகல் எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பதை வலியுறுத்துகிறோம் என்று தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் பத்தரமுல்ல மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், 

சிறைச்சாலை நிர்வகிக்கப்படுவது அதனோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் மூலமாகவேயாகும். லொஹான் ரத்வத்தேவின் செயல்கள் சிறைச்சாலைகள் சட்டம் மற்றும் அதன்கீழ் நிலவுகின்ற விதிகளையும் பிரமாணங்களையும் முழுமையாகவே மீறுவதாகும்.   

குடிபோதையில் சிறைச்சாலைக்குள் உரிய நேரத்திற்குப் புறம்பாகச் சென்றுள்ளார்.  அதைப்போலவே காதலி சகிதம் சென்றுள்ளார் அல்லது செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் குறிப்பாக கவனஞ் செலுத்தப்பட வேண்டிய விடயம் அநுராதபுரம் சிறைச்சாலையில் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள சிறைக்கைதிகளை மண்டியிடச்செய்வித்து தனது கைத்துப்பாக்கியால் குறிவைத்து மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவமாகும்.    

இது மிகவும் பாரதூரமான ஒரு சம்பவமாகும். சிறைச்சாலைகள் சட்டம், தண்டனைச் சட்டக்கோவை, சுடுபடக் கலங்கள் சட்டம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை உள்ளிட்ட கணிசமான அளவிலான பல சட்டங்களை மீறியமையாகும்.  சர்வதேச சட்டம் சம்பந்தமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைகூட இந்த சம்பவம் தொடர்பில் தலையிட்டுள்ளது.

1990 செத்தெம்பர் 14 அந் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட 45/111 இலக்கமுடைய சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான அடிப்படைக் கொள்கைகளுக்கு இது முற்றிலும் முரணானதென்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. மெண்டெலா கொள்கைக்கிணங்க  இலங்கையின் சிறைக்கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தினால்  உள்நாட்டுச் சட்டமும் சர்வதேச சட்டமும் மீறப்பட்டுள்ளது.  இது சம்பந்தமாக அரசாங்கத்தின் பக்கத்தில் இராஜாங்க அமைச்சர் பதவியை அகற்றியமையாக கூறப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக  பாரிய ஆர்ப்பாட்டம் தோன்றுகின்ற நிலையில் அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படுகின்ற இந்த நடவடிக்கை மக்களை தவறாக வழிநடாத்துவதாகும்.  குற்றவியல் சட்டக் கோட்பாடுகளுக்கிணங்க இடம்பெறுகின்ற தவறுகளை சேர்ந்திணங்கச்  செய்விக்க முடியாது.  இந்த குற்றச்செயல் இடம்பெறுவது அரசாங்கத்திற்கு  எதிராகவே ஆகும். ஆனால் எமது நாட்டில் குற்றவியல் சட்டத்துடன் தொடர்புடைய செயற்பாங்கின்போது பதவியிலிருந்து நீக்குதல் அல்லது திருடப்பட்ட ஆதனத்தைக் கொண்டுவந்து ஒப்படைக்கின்ற முன்னுதாரணம் அமுலில் இருக்கின்றது.  

லொஹான் ரத்வத்தே இராஜாங்க அமைச்சரின் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெயர் மாத்திரம் கழற்றப்பட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் நிறுவனத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் பதவியில் தற்போதும் அவர் இருக்கிறார்.

சதொச தலைவர் 15 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட மோசடி செய்தமை வெளிப்பட்ட பின்னர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். திருவாளர் அஜித் நிவாட் கப்ரால் பொது திறைசேரியின் பணத்தை கிரேக்க முறிகளில் ஈடுபடுத்தியவராவார்.  அவரை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுனராக நியமித்துள்ளார்கள்.

ஆட்கொலை தொடர்பில் தவறாளியான ‘சொக்கா மல்லீ’  பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமர்கிறார். உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதி ஆயம்கூட அங்கீகரித்த  ஆட்கொலையுடன் தொடர்புடைய ஒருவர் சனாதிபதி மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டு  நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்படுகிறார். 

தமது பெற்றோர்களின் கல்லறைகளை பொதுப்பணத்தில் கட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் சனாதிபதியாகி இருக்கிறார். மல்வானையில் காணியொன்றைக் கொள்வனவுசெய்து பொதுப்பணத்தில் நிர்மாணிப்புகளைச்செய்து இன்றளவில் உரிமையாளர் அற்ற காணியாக மாற்றப்பட்டுள்ளது. அவர் தற்போது நிதி அமைச்சர். நாட்டை சிரிக்க வைக்கின்ற உலகத்தை சிரிக்க வைக்கின்ற செயற்பாடுகள் இவ்வவாறுதான் இடம்பெற்றன. 

நீதிமன்றத்தில் கட்டுக்காவலில் உள்ள சிறைக்கைதி ஒருவரின் தலையில் சுடுபடைக்கலனை வைத்து மண்டியிடச்செய்து அச்சுறுத்தியமை பாரதூரமான ஒரு செயலாகும். சிறைச்சாலைகள் அமைச்சர் சிறைச்சாலைக்குள் துப்பாக்கியொன்றை எவ்வாறு எடுத்துச் சென்றார்? குற்றவியல் சட்டத்தின்கீழ் கொள்ளப்படுகின்ற பல சட்டதிட்டங்களை மீறி அவர் இன்னமும் நிம்மதியாக  நடமாடுகிறார். சாதாரண பொதுமக்களை பாதிக்கின்ற சட்டங்கள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சருக்கு ஏற்புடையதாகாமல் போவது எப்படி? ஆசிரியர் சம்பள போராட்டங்களில் பங்கேற்ற  ஆசிரியர்களை கைதுசெய்ததும் சட்டத்தரணிகளுக்குக்கூட பார்க்க அனுமதி வழங்கவில்லை.

சிறைச்சாலைகள் சட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினரொருவர்கூட காலை 5.30 தொடக்கம் மாலை 5.30 இற்கு இடைப்பட்ட நேரத்திலேயே சிறைக்கைதியொருவரை பார்க்கமுடியும். ஆனால் அமைச்சர் இரவில் சிறைச்சாலைக்குள் அத்துமீறிப் பிரவேசித்துள்ளார்.  ஒருசில அரச உத்தியோகத்தர்களுக்கும் இதில் பங்கு உண்டு. இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறும்போது சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் பதவிவிலகுகிறார். இந்த இரண்டில் எது உண்மை?  இந்த நிலைமையை அரசாங்கம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை  நாங்கள் வலியுறுத்துகிறோம்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெறுகின்றவேளையில்கூட இவ்விதமாக நடந்துகொள்வது விளையாட்டல்ல என்று அவர் தெரிவித்தார்.



மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறுகின்ற வேளையில் லொஹான் ரத்வத்தேவின் செயல் ஒரு விளையாட்டல்ல -சட்டத்தரணி சுனில் வட்டகல மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறுகின்ற வேளையில்  லொஹான் ரத்வத்தேவின் செயல் ஒரு விளையாட்டல்ல -சட்டத்தரணி சுனில் வட்டகல Reviewed by Editor on September 18, 2021 Rating: 5