200 மாணவர்களிற்கு குறைந்த ஆரம்ப பிரிவு பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பம்

கொரோன சூழ்நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த பாடசாலைகளை சுகாதார வழிமுறைகளைப் பேணி மீளவும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் உள்ள ஆரம்பப் பிரிவு  பாடசாலைகள் இன்று (21) மீளவும்  கல்வி நடவடிக்கைகளுக்காக  திறக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 இற்கு குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் அனைத்தும் இன்று  கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி திணைக்கள அதிகாரிகள் வலயங்கள் ரீதியாக பல்வேறுபட்ட  முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் உதவிகளுடன் சிரமதான அடிப்படையில் துப்புரவு பணிகளையும் மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் இன்றையதினம் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 34 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் அதில் ஏறாவூர்ப்பற்று கோட்டத்தில் இருந்து 3 பாடசாலைகளும், மண்முனை வடக்கு கோட்டத்தில் இருந்து 21 பாடசாலைகளும் மற்றும் மண்முனைப்பற்று கோட்டத்தில் இருந்து 10 பாடசாலைகளுமாக மொத்தமாக 34 பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாகவும், இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான கற்றல் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிப் பயிலுனர்களின் உதவியுடன் மகிழ்ச்சிகரமான வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருப்பதாகவும் இன்று அனைத்து பாடசாலைகளும் திறந்துள்ள நிலையில் மாணவர்கள் ஓரளவிற்கு வருகை தந்துள்ள போதிலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட அனைவரும் வருகைதந்து பாடசாலைகள் அனைத்தும் முறையாக திறக்கப்பட்டு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம்  ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கான உரிய சுகாதார பாதுகாப்பு    நடைமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனவா என  ஆராயும்  முகமாக  வலயக்கல்விப்  பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார்  இன்றைய தினம் பாடசாலைகளுக்கு நேரில் சென்று  பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர்  திருமதி.எஸ்.பி.இரவிந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.


(மாவட்ட ஊடகப்பிரிவு - மட்டக்களப்பு)







200 மாணவர்களிற்கு குறைந்த ஆரம்ப பிரிவு பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பம் 200 மாணவர்களிற்கு குறைந்த ஆரம்ப பிரிவு பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பம் Reviewed by Editor on October 21, 2021 Rating: 5