யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் யானை-மனித மோதலை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று அம்பாறை  பிரதேச செயலகத்தில் இன்று (26) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 

வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனவளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

வனத்தை அண்டிய பொத்துவில் பிரதேச கிராமங்களான களப்புக்கட்டு, கொட்டுக்கல், இன்ஸ்பெக்டர் ஏத்தம், ஊரணி,  பசறிச்சேனை, ஆற்றுமுனை, ஒருக்காமலை மற்றும் இன்னோரன்ன பிரதேசங்களில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் தாக்குதல்களினால் பிரதேச மக்கள் உயிரச்சுறுத்தலுடன் தமது இரவுவேளைகளை தூக்கமின்றி பீதியுடன் கழித்து வருவதையும், யானைகளின் அட்டகாசத்தினால் அழிக்கப்படும் மக்கள் சொத்துக்கள், விவசாயப் பயிர்களுக்கு ஏற்படும் நாசம் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரஃப் அவர்கள் அமைச்சரின் கவனத்திற்கு விரிவாக எடுத்துரைத்தார். 

இது தொடர்பில் மக்களின் உயிர்கள், உடமைகளை பாதுகாக்க வேண்டி அவசரமாக யானை வேலிகளை அமைத்துத் தருமாறு இராஜாங்க அமைச்சரை அவர் கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனவளங்கள் இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், டாக்டர் திலக் ராஜபக்ஸ, அம்பாறை அரசாங்க அதிபர், மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் டீ. வீரசிங்க, அம்பாறை பிரதேச செயலாளர் அடங்கலாக உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் Reviewed by Editor on October 26, 2021 Rating: 5