ஜனாதிபதியினால் அரச நிறுவனங்களுக்கு வாகனங்கள் கையளிப்பு

துறைசார் அலுவல்களுக்குத் தேவையான அம்பியூலன் வண்டிகள் 50, தண்ணீர் பவுசர்கள் 52, டபள் கெப் ரக வாகனங்கள் 62 உள்ளிட்ட 164 வாகங்களை, உரிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தின் இன்று (28) வியாழக்கிழமை இடம்பெற்றது. 

அதனடிப்படையில், சுகாதார அமைச்சு மற்றும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளுக்கு 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டதோடு, வனஜீவராசிகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுக்கு, தண்ணீர் பவுசர்கள் மற்றும் டபள் கெப் ரக வாகனங்கள் கையளிக்கப்பட்டன. 

அமைச்சர்களாக ஜனக பண்டார தென்னகோன், கெஹெலிய ரம்புக்வெல்ல, சி.பீ.ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட தலைவர்கள், உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 

இதேவேளை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் அன்பளிப்புச் செய்யப்பட்ட 150 மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸ் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வும், ஜனாதிபதி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. 

அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்கள், இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் போக்குவரத்துச் சேவைக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த மோட்டார் சைக்கிள்கள், ஜனாதிபதி அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் டொக்டர் சரத் வீரசேகர மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்ன ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. 







ஜனாதிபதியினால் அரச நிறுவனங்களுக்கு வாகனங்கள் கையளிப்பு ஜனாதிபதியினால் அரச நிறுவனங்களுக்கு வாகனங்கள் கையளிப்பு Reviewed by Admin Ceylon East on October 28, 2021 Rating: 5