சாணக்கியன் எம்.பியின் கடல் வழி போராட்டம் ஆரம்பமாகியது

(அலுவலக செய்தியாளர்)

இலங்கை அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவு- பருத்தித்துறை வரையான போராட்டம் ஆரம்பமாகியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்தப் போராட்டமானது இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமோ அல்ல. தமிழ்நாடு மீனவர்களில் ஒரு சிலர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, மீன்பிடித்துறை அமைச்சர் பார்த்தும் பாராது செயற்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் இடம் பெறுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அசமந்தச் செயற்பாடானது தமிழ் நாடு மற்றும் வடக்கு- கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமிடையிலான நல்லுறவு பாதிக்கப்படுவதோடு, மீன்பிடித்துறை அமைச்சர் வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.




சாணக்கியன் எம்.பியின் கடல் வழி போராட்டம் ஆரம்பமாகியது சாணக்கியன் எம்.பியின் கடல் வழி போராட்டம் ஆரம்பமாகியது Reviewed by Editor on October 17, 2021 Rating: 5