இலங்கையின் 2022 வரவுசெலவுத்திட்டம் நாளை பாராளுமன்றத்தில்

2022ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களால் நாளை (12) வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். வரவுசெலவுத்திட்ட விவாதம் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இது சுதந்திர இலங்கையின் 76வது வரவுசெலவுத்திட்டமாகும்.

இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

2022ஆம் நிதியாண்டுக்கான சேவைகளுக்கான செலவீனங்களுக்கு திரட்டு நிதியத்திலிருந்து மற்றும் அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே கடன் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.

இதற்கமைய 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான சேவைக்காக மதிப்பிடப்பட்டதான இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐந்து பில்லியன் முன்னூற்று நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டாயிரம் ரூபா அரசாங்கத்தின் செலவீனத்துக்குப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அரசியலமைப்பின் xvii  பிரிவுக்கு அமைய அரசாங்கத்தின் நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், வரிவிதிப்பு, திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வது உள்ளிட்ட விடயங்களுக்குப் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை முதல் நவம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏழு நாட்கள் வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். நவம்பர் 22ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 05.00 மணிக்கு  இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நவம்பர் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்காக இவ்வருடம் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய வரவுசெலவுத்திட்டம் நடைபெறும் காலப்பகுதியில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழியிலான ஒளிபரப்புக்கு தனியான கட்டமொன்று ஒதுக்கப்பட்டிருக்கும்.

வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நாளையதினம் (12) முதல் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் சுகாதார பாதுகாப்பு ஒழுங்குவிதிகளுக்கு அமைய பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் பொதுமக்கள் கலரி மக்களுக்காக திறக்கப்படாது என்றும், வரையறுக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளனர்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்காக விசேட விருந்தினர்கள் கலரி திறக்கப்பட்டிருக்கும்.

நாளை சமர்ப்பிக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமாகும்.

வரவுசெலவுத்திட்ட உரையின் பின்னர் நிதி அமைச்சரினால் ஏற்பாடு செய்யப்படும் சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரம் இடம்பெறும். பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள்  உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் மாத்திரம் இதில் கலந்து கொள்வர்.

(பாராளுமன்ற ஊடகப் பிரிவு)



இலங்கையின் 2022 வரவுசெலவுத்திட்டம் நாளை பாராளுமன்றத்தில் இலங்கையின் 2022 வரவுசெலவுத்திட்டம் நாளை பாராளுமன்றத்தில் Reviewed by Editor on November 11, 2021 Rating: 5