கருமலையூற்று, இற்றைவரை தீர்க்கப்படாத பள்ளிப் பிரச்சினையும் மறைக்கப்பட்ட மீள்குடியேற்றமும்


(இர்ஷாத் இமாமுதீன்)



பள்ளி மீட்புப் பிரச்சினை

“இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2009 இல் திருகோணமலை மாவட்டத்தை இரு வலயங்களாகப் பிரித்தனர். ஒன்று கைத்தொழில் மயமாக்கல் வலயம். மற்றயது அதியுயர் பாதுகாப்பு வலயம். சேருவல முதலான பிரதேசங்களை கைத்தொழில் வலயங்களுக்குள் உட்படுத்தி கப்பற்றுறையில் கைத்தொழில் பேட்டையொன்று அமைக்கப்பட்டது. இதற்காக முஸ்லிம் தமிழர்களுக்குச் சொந்தமான கிட்டத்தட்ட பல ஆயிரம் ஏக்கர் காணிகளை அரசாங்கம் சுவீகரித்தது. 

லங்காப்பட்டினம்இ உப்புவில், சேனையூர், சம்பூர், கூணித்தீவு, கட்டைபறிச்சான், உப்பாறு, இறால்குழி, தோணா கடற்கரை, மாபிள் பீச், சுவற்பே, சின்னம்பிள்ளைச்சேனை, கருமலையூற்று, நிலாவெளி முதலான கடற்கரைப் பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி, அவற்றில் இராணுவக் கடற்படை மற்றும் விமானப் படைகள் அமைக்கப்பட்டன.

கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான பாதுகாப்பு முகாம் என்று சொல்லுமளவுக்கு வெள்ளை மணல் பிரதேசத்திலுள்ள பம்பற என்ற இடத்திலிருந்து கருமலையூற்று வரையில் 8 கி.மீ. சுற்றிவரவுள்ள சுமார் 1200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்ற தகவலை கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் ஜவாஹிர்  தெரிவித்தார்.


மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவலை உறுதிப்படுத்தும் முகமாக காணி எடுத்தற் சட்டத்தின் பிரகாரம் காணி அமைச்சின் குறிப்பு இலக்கமான 4-3/4/2013/D/470 அறிவிப்பு பத்திரத்தின் மூன்றாவது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் சீனக்குடா கிராம சேவையாளர் பிரிவில் நாச்சிக்குடா கிராமத்தில் Tri/TWG/2012/077  இலக்க 21/05/2012 ஆம் திகதிய வரைபடத்தின் பிரகாரம் காணித்துண்டு இலக்கம் D,E,H,J இற்குரிய 46/552 ஹெக்டேயர் விஸ்தீரணமான காணியாகும். இது கிளப்பன் பேர்க் எனப்படும் காணியாகும். இது இலங்கை இராணுவத்தின் 4ஆவது படைப் பிரிவினை விஸ்தரிப்புச் செய்வதற்கென சுவீகரிக்கப்பட்டுள்ள தனியார் காணியாகும்.



இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசலும் அதனைச் சூழவுள்ள 50 ஏக்கருக்கும் அதிகமான குடியிருப்பு நிலங்களும் உள்வாங்கப்பட்டதாகவும் உயர் பாதுகாப்பு வலயங்களாக இப்பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டதால் யாரும் அப்பிரதேசத்திற்குள் செல்லவோஇ பள்ளிவாசலைப் பராமரிக்கவோ முடியாது போனதாக பாதிக்கப்பட்ட கருமலையூற்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை,முகாமுக்குள் இருந்த வீடுகளும் பள்ளிவாசலும் தரைமட்டமாக்கப்பட்டதாக அச்சம்பவத்தை அப்பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் எம்.எச்.ஏ.கரீம் இவ்வாறு விபரிக்கின்றார்,

“கருமலையூற்று பள்ளிவாசலும் குறிப்பிட்ட பிரதேசமும் மீனவர்களுடைய பாவனைக்கு உள்வாங்கப்பட்டிருந்தது. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கான விசேட அனுமதியினை கடற்படையினர் வழங்கி இருந்தார்கள். கருமலையூற்றுப் பள்ளிவாசலானது கடற்கரையிலிருந்து சுமார் 60 மீற்றரளவிலான உயரத்தில் எல்லோருக்கும் தெரியக்கூடிய இடத்தில் அமைந்திருந்தது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அந்தப் பள்ளியை பார்க்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறு இருந்த நேரத்தில் பள்ளிவாசல் இல்லாமலாக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

கருமலையூற்று பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்குரிய காணி பிரித்தானிய விக்டோரியா இளவரசியினால் 1847 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி (இல:97112) வழங்கப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் R/854/T/47/ட: எனும் இலக்கத்தில் இப்பள்ளிவாசலானது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வரையப்பட்ட 1927 ஆம் ஆண்டைய நில அளவைப்படமும் கருமலையூற்றுப் பள்ளி தொடர்பான ஒரு வலுவான ஆவணக் குறிப்பாகும்.

இவ்வாறு முஸ்லிம்களின் தொன்மை வாய்ந்த மத ஸ்தலமானது 2014 ஆகஸ்ட் 16 ஆம் திகதி உடைக்கப்பட்டதாகவும் அன்றைய தினம் ஜெ.சி.பி. சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாசல் உடைக்கப்பட்டதற்கு எதிராக சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் சி.ஐ.பி.398/73 இலக்கத்தில் 16-08-2014 அன்று பள்ளிவாசல் நிருவாகத்தினால் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில் இது பூர்வீகமாக அங்கு வாழ்ந்த எமது மக்களின் பரம்பரைச் சொத்து. இந்தப் பள்ளிவாசலை இடித்துத் தரைமட்டமாக்கி அழித்தவர்கள் அதனை மீண்டும் புதுப்பித்து கட்டித் தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், பள்ளிவாசல் உடைப்புக்கெதிராக பள்ளிவாசல் உப தலைவரினால் 2014/09/15 அன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது. அதன் முறைப்பாட்டு இலக்கம் HRC/TCO/191/14/1  ஆகும்.


“இவ்வாறாக மக்களின் தொடர்ந்தேர்ச்சையான உரிமைப் போராட்டம் மற்றும் எதிர்ப்பு செயற்பாடுகள் காரணமாக இராணுவத்தினர் சில உடன்பாட்டுக்கு வந்து இருபது பேர்ச் காணி உள்ளடங்களாக அந்தப் பள்ளிவாசலை மட்டும் தரமுடியும். அதுவும் அரச கொடையாக வழங்கப்படுமென யோசனை முன்வைத்தபோது, அதனை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த அடக்கஸ்தலம் அமைந்துள்ள பகுதியோடு அந்தப் பிரதேசத்தில் சுமார் 3 ஏக்கர் காணியைத் தருவதோடு, அதற்கு செல்லக் கூடிய பாதையையும் அமைத்துத் தந்தால்  ஏற்றுக்கொள்ளத் தயாராக அப்பிரதேச மக்கள் இருப்பதாக” கருமலையூற்றுப் பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் ஜவாஹிர் தெரிவிக்கிறார்.

கருமலையூற்றுப்பள்ளியை இராணுவம் கையகப்படுத்தி மக்களின் போராட்டங்களுக்குப் பின் மக்கள் பாவனைக்கு அனுமதியளித்தபோது, அப்பள்ளிவாசலில் முதல் ஜும்ஆவை நிகழ்த்தியவரும் கருமலையூற்று மீட்பு முன்னணியின் செயற்பாட்டளருமான கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவருமான அஷ்ஷெய்க் ஹிதாயத்துள்ளாஹ் (நளீமி) இது தொடர்பில் கருத்துக் கூறுகையில்,

“கறுமலையூற்று மஸ்ஜித் அதனுடைய வளாகக் காணி மற்றும் அந்தப் பிரதேசத்தில் குடியிருந்த மக்களுடைய காணி தொடர்பான பிரச்சினை மனதுக்குக் கஷ்டமான ஒரு நீண்ட காலப் பிரச்சினையாகும். அந்தப் பிரச்சினை படிப்படியாக மக்களுடைய மனதிலே ஓர் இயலாமையையும் தோல்வி மனப்பான்மையையும் ஏற்படுத்தும் விதத்தில் சென்று கொண்டிருக்கின்றது. 

இந்நிலைமை ஓர் அநீதியானது மட்டுமல்ல, மக்களுடைய உரிமையையும் கலாசாரம் சார்ந்த புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டிய இடத்தினை அபகரிக்கின்ற விடயமாகவும் இது அமைந்திருக்கின்றது. 

உண்மையில் இந்த விடயத்தில் கறுமலையூற்று மஸ்ஜித் மற்றும் அதனுடைய காணிகள் தொடர்பான ஒரு மீட்புக்குழு இயங்கி வந்தது. 2015,2016 களில் கிண்ணியா சிவில் அமைப்புகளின் ஒன்றியமான மஜ்லிஷ் ஷூராவின் பொறுப்பாளராக இருந்த காலப்பகுதியில் நானும் அந்த மீட்புக்குழுவில் இருந்து அதற்கான சில முன்னெடுப்புகளில் பங்கெடுத்திருந்த விடயம் குறிப்பிடத்தக்கது. 

நாங்கள் கருமலையூற்று விடயமாக அரச தரப்பினர், இராணுவத்தினர் மற்றும் சில வெளிநாட்டு தூதுவர்கள் என பல தரப்பினரோடு இது தொடர்பான நியாயங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தோம்.

அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற எங்களுடைய முன்னோர்களின் சியாரங்கள், அந்த மஸ்ஜித்துடைய சின்னங்கள் காணப்படுவது இந்த மஸ்ஜித்துடைய பூர்வீகத்துக்கு முக்கிய சான்றாக இருக்கின்றது. 

கறுமலையூற்றுக் காணிக்கு பிரிட்டிஷ் காலத்திலே வழங்கப்பட்டிருக்கின்ற சட்ட ரீதியான ஆவணங்கள் இன்னும் அந்த இடம் மஸ்ஜித்துக்குச் சொந்தமானது. அந்தப்பிரதேசம் அங்கு வாழ்ந்த மக்களோடு தொடர்புபட்ட விடயங்களை சான்று பகர்கின்றன. 

 

Uploading: 500632 of 500632 bytes uploaded.







அந்தவகையில், 2015 காலப்பகுதியில் துறைமுகத்திற்குச் சொந்தமான காணி என பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், எமது நியாயப்பாடுகள் கருத்திற் கொள்ளப்பட்டு, ஒரு பகுதிக் காணியில் மஸ்ஜித்திற்கு ஒதுக்கி தற்காலிக கொட்டிலில் தொழுகை நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. அந்தவேளையிலே வெள்ளிக்கிழமை ஜும்ஆவை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. 

பின்னர் மஸ்ஜித் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கு முனைந்தபோது அதிலே சில தடங்கல்கள் ஏற்பட்ட விடயத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

எனவே, இப்படியான ஒரு நிலையில் நாட்டில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் மற்றும் சில சம்பவங்கள் முஸ்லிம்களுடைய தொன்மை வாய்ந்த எமது இருப்புச்சார்ந்த வரலாற்றை குழிதோண்டிப் புதைக்கின்ற ஒரு விடயமாக இழுத்தடிப்பு செய்யப்படுவதை இங்கு குறிப்பிட வேண்டும்.

சுருக்கமாககூறின், இங்கு இரண்டு வகையான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று அந்த மஸ்ஜித்துக்குரிய இடம். அதனுடைய விசாலமான காணி. இரண்டாவது அங்கு வாழ்ந்த குடும்பங்கள். அங்கு அடக்கம் செய்யப்பட்ட சியாரத் போன்ற விவகாரங்கள் தீர்க்கப்படவேண்டிய முக்கியமான பிரச்சினைகள்.

நான் அறிந்த வகையில் சிலர் நீதிமன்றத்தை நாடி தங்களுடைய காணி தங்களுக்கு உரித்தானது என நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுக் கொண்டதாக அறியக் கிடைத்தது.

அந்தக் காலத்தில் அங்கு குடியிருந்த மக்கள் சட்டபூர்வமான முழுமையான ஆவணங்கள் வைத்திருந்தார்களா? என்பது ஒரு புறமிருக்க உண்மையில் அன்று  அந்த ஆவணங்கள் இல்லாமலிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, அந்த மஸ்ஜித்துக்கான காணி வழங்கப்படுவது மாத்திரமல்ல, இது முஸ்லிம்களுடைய ஒரு பூர்வீக புன்னியஸ்தலமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டு, அங்கு தொழுகைகள்இ ஜும்ஆக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அங்கு சூழக் குடியிருந்த மக்களுக்கான காணிகளை வழங்க வேண்டும். அந்தக் குடும்பங்கள் பெருகியிருக்கின்ற நிலையில் அவர்களுக்கான காணிகளும் வழங்கப்பட்டு, ஒவ்வொரு மதங்களுடைய புன்னிய இடமாக அறிவித்து வரும் அந்த வரிசையிலே அந்த மஸ்ஜிதுக்கான இடமும் அவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டு, உரிய சமூகத்தினரிடம், உரிய தரப்பினரிடம் ஒப்படைத்து, இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய தேவையினை உணர்த்த விரும்புகிறேன்” என அப்பள்ளிவாசலின் முக்கியத்துவம் அதன் பாரம்பரியம் இப்பள்ளி தொடர்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிக்கும் அநீதி தொடர்பில் அவர் கருத்துத் தெரிவித்தார்.

இப்பள்ளிவாசலின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருமலையூற்றைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் அஹமட் கரீம் பைரூஸ் கருத்துத் தெரிவிக்கையில்,



“ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் பள்ளிவாசல் தொடர்பாக ஏதாவது முன்னெடுப்பு செய்தால் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். பள்ளிவாசலுக்கு அருகாமையில் கூட செல்ல முடியாத ஒரு சூழலில் இருக்கிறோம். 20 பேர்ச் காணியை தருவோம் என்று சொன்ன இராணுவத்தினர், ஓர் அங்குலம் நிலத்தைக்கூட தராமல் முள்வேலியிட்டு முழுமையாக தடை செய்திருக்கிறார்கள். யாரிடம் சென்று முறையிட்டு எப்படி தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதென தெரியாத ஒரு சூழலில் மக்கள் இருக்கின்றனர். புராதன சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய இராணுவத்தினரே எமது பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கியது வேதனையளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

கருமலையூற்று பள்ளிவாசல் மீட்புத் தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபராக இருப்பவரும் கருமலையூற்று பள்ளி மீட்புப் பிரச்சினை உச்சமாக இருந்த நேரத்தில் திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலாளராக இருந்த அருள்ராஜிடம் வினவியபோது, “பள்ளிவாசல் காணியான 25 பேர்ச்சை மக்களுக்கு வழங்குவதற்கான அனுமதி அப்போதே வழங்கப்பட்டுவிட்டதாகவும் அது ஒவ்வொரு இராணுவப் பொறுப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவதால் அவர்கள் இது தொடர்பில் விளக்கமில்லாதிருப்பதாக” தெரிவித்தார்.

கருமலையூற்றுப் பள்ளிவாசலானது தற்போதுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் மக்கள் பள்ளிவாசலுக்குச் சென்று பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்யவோஇ பள்ளிவாசலில் தொழுகையை நடத்தவோ முடியாத சூழலில் இருப்பதாக அப்பிரதேசத்தைச் சுற்றி இருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் பொறுப்பற்ற பதிலை வழங்குவது இப்பள்ளிப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதில் பாரிய சவாலாக அமைந்துள்ளது.


மீள்குடியேற்றப் பிரச்சினை

கருமலையூற்று மக்களின் மற்றுமொரு தீர்க்கப்படாத பிரச்சினையாக இருப்பது அவர்களின் மீள்குடியேற்றமாகும்.

கருமலையூற்று மக்கள் அப்பிரதேசத்தில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதற்கு வலுவான ஆதாரமாக இருப்பது விக்டோரியா இளவரசியினால் 1874 ஒக்டோபர் 24 ஆம் திகதி (இல:97112) வழங்கப்பட்ட காணி உறுதியாகும். அதேநேரம், கருமலையூற்றுப் பள்ளிவாசலை அண்டி 113 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்ததற்கான மற்றுமோர் ஆதாரமாக இருப்பது தேர்தல் பதிவு இடாப்பாகும். 1993 ஆம் ஆண்டுவரையான தேர்தல் பதிவு இடாப்புகளில் இதற்கான சான்றுகளை அவதானிக்க முடியும். 




கருமலையூற்றுப் பிரதேசத்தின் மக்களின் மீள்குடியேற்றத் தேவை தொடர்பாக கருமலையூற்றுப் பிரதேசத்தின் மீட்புத் தொடர்பாக நீண்டகால செயற்பாட்டளராக இருக்கும் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற பதிவாளரும் கிண்ணியா அல்-மஜ்லிஷ் அஷ்-ஷுராவின் உப செயலாளருமான எம்.எஸ்.எம். நியாஸ் கருத்துத் தெரிவிக்கையில்,



“கருமலையூற்று விவகாரமென்பது தனியே பள்ளிவாசல் மீட்போடு சம்பந்தப்பட்ட விடயமல்ல. ஒரு மீள்குடியேற்றக் கிராமம் அங்கு உருவாக்கப்பட்டு அதனூடாக அந்தப் பள்ளி பராமரிக்கப்பட வேண்டும்.

பள்ளிவாசல் எனும்போது அதனைச் சுற்றியுள்ள கிராமம் அங்கிருக்கின்ற கப்ரடி என்று சொல்லக்கூடிய முஸ்லிம் பெரியார்களுடைய அடக்கஸ்தலம்இ இதனைச் சுற்றியுள்ள வாழ்வியல் என ஒரு சமூகமே இங்கு வாழ்ந்திருக்கிறது” எனத் தெரிவிக்கிறார்.

“நீண்ட பாரம்பரியம் கொண்ட கறுமலையூற்று மக்கள் முதலாம்இ இரண்டாம் உலக மகா யுத்தங்களின்போது அங்கிருந்து வெளியேறி கிண்ணியா கந்தளாய் போன்ற பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்ததாகவும் இதற்கு உதாரணமாக கிண்ணியா மாஞ்சோலைச்சேனை பள்ளிவாசலானது கருமலையூற்றுப் பள்ளிவாசலையும் சேர்த்துத்தான் பதியப்பட்டுள்ளதாக” சிதைக்கப்பட்ட கருமலையூற்றுப் பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் ஜவாஹிர் தெரிவித்தார். 

இவ்வாறாக பூர்வீகக் களத்தைக் கொண்ட பிரதேசமானது யுத்த ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்பட்டிருக்கின்றது.

உள்நாட்டு யுத்தம் ஏற்பட்ட காலத்தில் இங்கு கடற்படையினரும் இராணுவத்தினரும் இராணுவ முகாம்களை அமைத்தனர்.

“கிளப்பன்பேர்க் இராணுவ முகாமானது ஓர் இடைத்தங்கல் முகாமாகவும் ஒரு பாரிய ஆமரி என்று சொல்லக்கூடிய கவச வாகனம் கொண்ட படையணியாகவும் இங்கு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு அவர்கள் வெள்ளைமணல், நீரோட்டுமுனை, கந்தளாய், திருகோணமலை நகரம் போன்ற பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள்” என்ற தகவலை அப்பிரதேசவாசியான எம்.எம். ஜனாப்தீன் தெரிவித்தார்.

கருமலையூற்று மக்கள் எதிர்நோக்கும் மீள் குடியேற்றப் பிரச்சினையை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினரும் கறுமலையூற்று பிரதேசத்தில் பிறந்துஇ வளர்ந்த அஹமட் கரீம் பைரூஸ் இவ்வாறு தெரிவிக்கிறார். 

“எனது கிராமமான கறுமலையூற்று பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளைமணல் கிராம உத்தியோகத்தர் பிரிவைக் கொண்டது. இது ஒரு மீள்குடியேற்றப்பட வேண்டிய கிராமம். எமது மக்கள் 400 வருடங்களுக்கு மேல் கறுமலையூற்று கிராமத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அதேபோல்இ இங்குள்ள பள்ளிவாசலும் 400 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்தது. 

எல்லாமாக 150 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டாம் மகா யுத்தத்தின்போது ஒரு சிலர் இடம்பெயர்ந்தார்கள். 

இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தபோது ஒவ்வொரு குடியாக எழுப்பப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் துறைமுகத்தை தாக்கிய பொழுது அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்குச் சென்றார்கள். அவர்கள் கிண்ணியாஇ வெள்ளை மணல்இ நாச்சிக்குடாஇ சின்னம் பிள்ளைச்சேனை போன்ற பல இடங்களுக்கும் இடம் பெயர்ந்தார்கள். அதேபோன்றுஇ கருமலையூற்றுக்கு மேலே உள்ள பிரதேசத்திற்கும் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

இந்த மக்கள் கடற்றொழில் செய்பவர்கள். கடற்றொழில் செய்வதற்கு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவர்களின் தொழிலை முழுமையாக செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடற்படையினர் சில மட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தம் நடந்த பல இடங்களில் மீள்குடியேற்றம் நடந்துள்ளது. ஆனால்இ எமது மக்களுக்கு மீள்குடியேற்ற உதவிகள் கிடைக்கவில்லை. 

மீனவர் கிராமத்துக்கென ஓர் இடத்தை அரசாங்கம் ஒதுக்கிய போதும் அது வரைபடத்தில் மட்டும்தான் உள்ளது.

எமது மக்கள் வாழ்ந்த இடங்களில் ஒரு பக்கம் இராணுவம். இன்னொரு பக்கம் விமானப்படை என ஆக்கிரமித்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் வாழ்விடத்தைக் கேட்டபோதும் அவர்கள் அதனை வழங்குவதற்குத் தயாரில்லை. 

அதுமட்டுமன்றிஇ இலங்கை துறைமுக அதிகாரசபையும் இந்த இடத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்கள். 

மக்களுடைய உறுதிக் காணியும் உறுதி இல்லாத காணியும் இதற்குள் உள்ளடங்கும். அவர்கள் தங்களுடைய பூமியில் மீள்குடியேற அரசு சந்தர்ப்பத்தை வழங்கவில்லையென்பது கவலையான விடயமாகும். அரசாங்கம் மீள்குடியேற்ற முயற்சிகளை செய்ய வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மக்களின் வாழ்வாதாரம் கடலை நம்பி இருப்பதனால் கறுமலையூற்று பிரதேசம் எமக்கு திருப்பியளிக்கப்பட வேண்டும்.

தாங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்த இடங்களை தமது சந்ததியினருக்கு வழங்கியவர்கள் தங்கள் பிள்ளைகளில் தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மீள்குடியேற்றினால் அவர்கள் தங்கள் இடங்களில் சுதந்திரமாக வாழ முடியும். அரசாங்கம் இவர்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை செலுத்த வேண்டுமென்பதே எனது கோரிக்கையாகும்” எனத் தெரிவித்தார்.

கருமலையூற்றுப் பள்ளிவாசல் மீட்புத் தொடர்பிலும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிக்கோரளவிடம் வினவியபோதுஇ “தனக்கு இது தொடர்பில் தெரியாதென்றும் தற்போது மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்டத்தில் 240 வீடுகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தற்போதைய நாட்டின் சூழ்நிலையால் இது தொடர்பில் மேலதிக கருத்துத் தெரிவிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இருப்பதாகவும்” தெரிவித்தார்.

திருகோணமலை அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் கறுமலையூற்று மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எவ்வித தகவலும் அற்ற நிலையில் இருக்கிறார்கள். அவ்வாறான ஒரு பிரச்சினை இருப்பதாக அவர்கள் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

கருமலையூற்றுப் பள்ளிவாசல் காணி மற்றும் குடியிருப்புக் காணி ஆகியவை தனியாருக்குரியவை: பிரித்தானியர் கால உறுதிப்பத்திரங்கள் இவற்றுக்குண்டு. இலங்கை ஆவணவாக்கல் சுவடிக்கூடத்திலும் இவற்றுக்குரிய பதிவுகள்இ வரைபடங்கள் உள்ளன. தவிரஇ இவை தனியார் காணி என்பதை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக இருந்த அருள் ராஜும் உறுதிப்படுத்தியிருக்கின்றார். அதற்கான ஆதாரத்தை கருமலையூற்று பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் ஜவாஹிர் எடுத்துக் காட்டினார்.

தனியார் காணியோஇ உரிமையளிக்கப்பட்ட அரச காணியோ அரசாங்கத்தின் தேவை கருதி ஒரு காணி சுவீகரிக்கப்படுகிறதென்றால்இ அதற்கென்று காணி எடுத்தல் சட்டத்தின் நடைமுறை விதிகள் உள்ளன. அவை பின்பற்றப்படுதல் வேண்டும். இந்த சட்ட ஒழுங்குகள் கருமலையூற்றுப் பள்ளிவாசல் முதல் குடியிருப்பு காணிவரையும் பின்பற்றப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை அப்பிரதேச மக்கள் முன்வைக்கின்றனர்.

அதேவேளைஇ பல நூறு வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கருமலையூற்று மக்கள் சிவில் யுத்த காலம் முதல் அவர்களது இருப்பிடத்தை இழந்தவர்களாக உள்ளனர். இப்போது யுத்தம் முடிந்த பின்னர் எல்லாம் மாறிவரும் நிலையில் இந்த மக்களது வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். 

அந்தவகையில்இ இந்த மக்களுக்கு தமது சொந்தக் காணியை மீட்கஇ பள்ளிவாசலை மீட்க உதவுவதோடுஇ மீள்குடியேற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட இலாக்காக்கள்இ அதிகாரிகள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்திஇ கருமலையூற்று மக்களின் வாழ்க்கையில் பிரகாசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும்.


கருமலையூற்று, இற்றைவரை தீர்க்கப்படாத பள்ளிப் பிரச்சினையும் மறைக்கப்பட்ட மீள்குடியேற்றமும் கருமலையூற்று, இற்றைவரை தீர்க்கப்படாத பள்ளிப் பிரச்சினையும் மறைக்கப்பட்ட மீள்குடியேற்றமும் Reviewed by Editor on November 22, 2021 Rating: 5