கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் 200வது கொடியேற்ற நினைவு முத்திரை வெளியிடுதல்

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் நாஹூர் ஆண்டகையின் 200வது கொடியேற்ற விழா எதிர்வரும் ஜனவரி 04ம் திகதி ஆரம்பமாக இருப்பதனை  முன்னிட்டு  இன்று (29) அது தொடர்பான விசேட கூட்டம் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையில் கல்முனை மாநகர சபையில்  இடம்பெற்றது.

200வது கொடியேற்ற விழாவினை இம் முறை சிறப்பாக அரச விழாவாக கொண்டாடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், 200வது நினைவாக நினைவு முத்திரை ஒன்றினை எதிர்வரும் ஜனவரி 06ம் திகதி வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி முத்திரை வெளியீட்டு நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் டலஸ் அழகபெரும கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக முத்திரையினை வெளியிட்டு வைக்கவுள்ளார்.

கல்முனையில் பாரம்பரியமாக நடைபெற்றுவரும் இக் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுற்கு கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சகல வர்த்தகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கல்முனை மாநகர சபை மேயரினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதோடு இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு விசேடமாக குழு ஒன்றும் முதல்வரினால் நியமிக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம் நிசார்(ஜேபி), ஏ,சி.ஏ சத்தார், சட்டத்தரணி ஏ.எம்ரோசன் அக்தர், ஏ.ஆர் அமீர் எம்.நவாஸ், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை  ஆணையாளர் எம்.சீ அன்சார், கணக்காளர் ஏ.எச் தஸ்தக்கீர், கல்முனை ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ.பாவா, இணைப்பாளர் எம்.ஆஸீர் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் 200வது கொடியேற்ற நினைவு முத்திரை வெளியிடுதல் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் 200வது கொடியேற்ற நினைவு முத்திரை வெளியிடுதல் Reviewed by Editor on December 29, 2021 Rating: 5